Author Topic: ~ என் அம்மா ~  (Read 643 times)

Offline MysteRy

~ என் அம்மா ~
« on: July 30, 2014, 09:05:57 PM »
என் அம்மா




1. நான் பிறந்து ஆறு மாதம் வரை , ஓர் நாள் இரவு கூட அவளால் உறங்கமுடியவில்லை. கண் விழித்து என் அழுகைக்கு விடை கண்டு பிடித்தே விடிந்து விட்டன அவளின் இரவுகள்.

2. நான் தத்தி தத்தி பூமியில் கால் பதிக்க முயலும் வரை, சேலையை எனக்கு தொட்டில் ஆக்கி அதை ஆட்டிக்கொண்டே தன் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவாள்.

3.நடக்க ஆரம்பித்த போது அடிக்கடி விழுந்துவிடுவேன். உடனே ஓடிவந்து தூக்க மாட்டாள்.நான் என்ன செய்கிறேன் என்பதை கூர்ந்து கவனித்துவிட்டு, பின்னரே தூக்குவாள். விழுந்தால், நீயாக தான் எழ வேண்டும் என்பதை அன்றே கற்றுக் கொடுத்து விட்டாள்.

4.பள்ளி செல்ல ஆரம்பித்த போது, எனக்கு இரட்டை ஜடை பின்னவும், சீருடை மாட்டவும், சாப்பாடு ஊட்டவும் என்னுடன் போராடியே அவளின் காலைப்பொழுது கழிந்தது.

5.நான் என்று தின்பண்டங்கள் உண்ண தொடங்கினேனோ, அன்றே அவள் உண்பதை நிறுத்திவிட்டாள். வீட்டில் எல்லாருக்கும் போக, கடைசியாய் அவள் கைக்கு வரும் அந்த சுண்டு விரல் அளவில் இல்லா பங்கை கூட என் கையில் கொடுத்து இன்பம் கொண்டாள்.

6.பூப்படைந்த சேதி கேட்டதும், பூரிப்படைந்தது அவளின் முகம் மட்டுமே. நெஞ்சமெல்லாம் நெருப்பை சுமப்பது போல் பயத்தை சுமக்க ஆரம்பித்துவிட்டாள்.

7.பெட்டிக் கடைகளைப் போன்ற சின்ன சின்ன நகைக் கடைகளைத் தேடித் தேடி மாத சீட்டு போட்டு, மாதங்கள் தோறும் அவள் தேவைகளில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு பணத்தை கட்டினாள். என் கையில் ஒரு கிராம் மோதிரம் தங்கத்தில் போட அவள் ஒருவருடம் போராடினாள்.

8.அவளின் அஞ்சறைப் பெட்டி சில்லரைகளாலும், கட்டிப் போட்ட வயிற்றினாலும் நிறைய ஆரம்பித்தது என் நகைப் பெட்டி.

9.கல்லூரிக்குள் நுழைந்தேன். நான் பட்டம் வாங்க வேண்டும் என்று அவள் வெறும் பத்திய சாப்பாட்டைப் போல் பசிக்காக மட்டுமே உண்டாள்.

10.இதுவரை ஒரு தீபாவளிக்கும் அவள் புது உடை உடுத்தி நான் பார்த்ததில்லை. அன்றும் அடுக்களையே அவளின் சொர்க்கம். வடையும் சுளியனுமே அவளின் தீபாவளி.

11.எனக்குத் திருமணமாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவள் என்ன போடுவீர்கள் என்று கேட்பதற்கு முன்னரே , என்ன போடுவேன் என்பதை உரைக்கிறாள்.

12.கசாயத்தில் மறைந்து விடும் அவளின் காச்சல். அரச மர இலையில் மறைந்து விடும் அவளின் தீ காயங்கள். இஞ்சி தேநீரில் மறைந்து விடும் அவளின் சளியும் இருமலும். பாட்டி வைத்தியங்களை மட்டுமே தனக்கு செய்து கொண்டு நான் தும்மினால் கூட மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். தன் உறங்காத இரவுகளால் என்னை உறங்கவிடாத கனவுகளை என்னுள் விதைத்தவள்!

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றின் பின்னும், எண்ணில் அடங்கா அவளின் இழப்பு இருக்கிறது.

எழுதப் படிக்க தெரியாமலேயே எனக்கு
எழுத்தறிவு தந்த ஏட்டில் அடங்கா கவிதை என் அம்மா!