தமிழ் மொழி அழியுமா தழைக்குமா - நம் முன்னே உள்ள சவால்கள்.
by கோடங்கி
ஒரு மொழி அதன் தாயகத்தில் வாழ வழியற்றுப் போனால் வேறு எங்கும் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். குறிப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் அனைத்து மொழிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசம் தாயகப் பகுதியாக இருக்கின்றது. அந்த மொழி தோன்றி, பரிணமித்து வளர்ச்சி பெற்ற இடமாக அது இருக்கின்றது. இது இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது.
அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் புலம்பெயரும் போது தமது தாய்மொழியையும் எடுத்துச் செல்கின்றனர். சில சந்தர்பங்களில் தாம் புலம்பெயரும் புதிய தேசத்தின் அரசியல், பொருளாதாரம் முதலிய காரணங்கள் ஏதுவாய் இருக்குமானால், அந்த மொழி புதிய தேசத்தில் தழைத்தோங்கும் வாய்ப்புண்டு. அதே சமயம் மிகுந்த நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றால் அம் மொழி வழங்கொழிந்து போய்விடும்.
புதிய தேசத்தில் மட்டுமின்றி பாரம்பரியமாக ஒரு மொழி பேசப்பட்டு வரும் தாயக பகுதிகளில் கூட அரசியல், பொருளாதார சமூக வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒரு மொழி தக்க வைக்கப்படவும் இயலும், நிர்மூலமாக்கப்படவும் இயலும். அல்லது தனது தனித்துவத்தை இழந்து புதிய மொழியாக மாற்றம் காணவோ, வேறு மொழிகளோடு கரைந்து காணாமல் போகவோ முடியும்.
ஆக ஒரு மொழி நிலைத்திருக்க அதனை பேசக் கூடிய மக்கள் மிக முக்கியம். அந்த மக்கள் குழுமி வாழ ஏதுவான தாய்நிலம் மிக மிக அவசியம். அத்தோடு மட்டுமின்றி, அந்த மொழி பேசும் மக்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கமும், சமூக வளர்ச்சியும் இன்றியமையாதது. அதாவது ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டும் எனில், அந்த மொழி அதன் தாய்நிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும்.