Author Topic: ~ ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ~  (Read 1581 times)

Offline MysteRy

ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:-




ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும்.

ஆண் பறவைகள் பார்க்க கருப்பு நிறம் கொண்டிருந்தாலும், சூரிய ஒளியில் அவை ஊதா நிறத்தை வெளிப்படுத்துகின்றன. பெண் பறவைகள் மேலே ஆலிவ் பச்சை நிறமும், வயிற்றுப்பகுதியில் மஞ்சள் நிறமும் கொண்டுள்ளன.

மற்ற தேன்சிட்டுகளை ஒப்பிடும் போது நீளம் குறைந்த அலகை உடைய ஊதாத்தேன்சிட்டு கருத்த நிறமும் சதுரமாக முடியும் வாலையும் கொண்டது. ஆண் பெண் பால் வித்தியாசம் மிகத்தெளிவாக உள்ளது.

ஆலிவ் பச்சை நிறம் மேலே கொண்ட பெண் பறவைகள் அடியில் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். புருவம் இளமஞ்சள் நிறமும், கண்களுக்கு பின் கீற்றுடன் காணப்படுகின்றது

இவை எப்போதும் இணைகளாகவே காணப்பெறும், எனினும் தோட்டங்களிலும் மலர்கள் மண்டிக்கிடக்கும் இடங்களிலும் 40 முதல் 50 பறவைகள் கொண்ட கூட்டங்களையும் காண இயலும். இவற்றிற்கு தேன் எப்போதும் தேவை என்பதனால் ஆண்டு முழுதும் பூக்கும் மலரும் தன்மை கொண்ட மரங்களும் செடிகளும் இருக்கும் இடங்களை நாடும்.