Author Topic: கட்டுரைகள்  (Read 2206 times)

Offline Maran

கட்டுரைகள்
« on: June 11, 2014, 09:00:12 PM »
நமது பெருமை அறிவோம்

By அ. ஜெயராமன்



நமது நாட்டு இளைஞர்களிடம் தற்போது ஒரு விஷயம் பரவலாக காணப்படுகிறது. அது, பிற நாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசை மேதைகள், நடிகர்கள் போன்றவர்களின் படம் அல்லது பெயர் தாங்கிய டி-சர்டை பெருமையாக அணிந்து கொள்ளும் போக்கு.

குறிப்பாக, சே குவேரா எனப்படும் அர்ஜென்டீனா நாட்டில் பிறந்த மார்க்சிய புரட்சியாளர். இவர் பெயர்கூட பலருக்கு சரியாகத் தெரியாது. ஆனால், இவரைப் போன்ற அயல்நாடுகளில் போற்றப்படும் சில தலைவர்களின் படங்களும் பெயர்களும் இங்கு பனியன்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றை, நமது இளைஞர்கள்  விரும்பி வாங்கி அணிகின்றனர்.

நம் நாட்டு இளைஞர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வாஞ்சிநாதன், பூலித்தேவன், சுபாஷ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், வீர சாவர்க்கார், பகத்சிங் போன்ற எண்ணிலடங்கா சுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம் பற்றி ஒன்றும் தெரியவில்லையா? அல்லது இதிலும் வெளிநாட்டு மோகமா?.

அதேபோன்று, ஜோன் ஆப் ஆர்க்கை தெரிந்து வைத்திருக்கும் நம்மவர்கள், இங்கு வாழ்ந்த ஜான்சி ராணியையோ அல்லது அதற்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வேலு நாச்சியாரைப் பற்றியோ சரிவரப் புரிந்து வைத்திருக்கவில்லை.

விநாயக் தாமோதர் சாவர்க்கார் என்ற வீர சாவர்க்காரை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து, பிரான்சு நாட்டிலிருந்து கப்பலில் அழைத்து வந்தபோது, கப்பல் அறையில் இருந்த சிறு கண்ணாடி துவாரத்தை உடைத்து, நடுக்கடலில் குதித்து நீந்தியே கரை சேர்ந்தார். இந்த தீரச் செயலை நம் இளைஞர்கள் அறிந்துள்ளனரா?

சுபாஷ் சந்திர போஸை நன்றாகத் தெரியுமே நமது இளைஞர்களுக்கு. அவரது படம் பதித்த பனியன்கள் விற்பனைக்கும் இல்லை, வாங்குவதற்கும் ஆளில்லை.

உலகமே பார்த்து மிரண்ட ஹிட்லரை நேரில் சந்தித்து, இந்திய சுதந்திரப் போருக்கு ஆதரவு கேட்ட போஸை விட சுத்த வீரரை இனி நாம் பார்க்க முடியுமா? ஆனால், சே குவேரா என்ற புரட்சியாளரை பனியன்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஸ்டிக்கராக ஒட்டியுள்ளோம்.

அவர் ஒரு டாக்டர், கதை ஆசிரியர், கொரில்லாப் படைத் தலைவர். அவர் எதிராளியை பிடித்தால் கொல்லாமல் விட மாட்டாராம். அதேபோன்றுதான் அவரையும், பொலிவியா நாட்டு அரசுக்கு எதிராகப் போராடியபோது, பிடித்துக் கொன்றனர் அந்நாட்டு ராணுவத்தினர்.

நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போரிட்ட வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களது படம் பதித்த பனியன்கள் வெளிநாடுகளில் விற்கப்படுவதும் இல்லை, விற்றாலும் வாங்கி அணிவதற்கு அங்கு ஆளில்லை.

ஆனால், வந்தாரை வாழவைக்கும் நாடு எனக் கூறியே, இன்று நாட்டில் பாதி பேர் தங்களது அடையாளத்தையே மாற்றிக் கொண்டுள்ளனர். வெளிநாட்டு மோகம் நம்மவர்களுக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை.

வெளிநாட்டுத் தலைவர்களின் கொள்கைகள், கருத்துகளைத்தான் நாம் பின்பற்ற ஆசைப்படுகிறோம். உலகமே வியக்கும் திருக்குறளை பின்பற்ற முயல்வதில்லை. எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டவையே என்று ஆணித்தரமாகக் கூற முடியும்.

அதேபோன்று, அன்னிய (ஆங்கிலம்) மொழிப் பாடல்களை விரும்பிக் கேட்பது போல் பலர் நடிக்கின்றனர். இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் இல்லாத இசையா? சினிமா பாடலாகட்டும், பக்தி பாடலாகட்டும் மெய்சிலிர்க்க வைக்குமல்லவா?

இந்த நேரத்தில், அமெரிக்காவில் தியாகராஜர் ஆராதனை விழா களைகட்டுவது இங்குள்ளவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

இளைஞர்களைப் போற்றிய விவேகானந்தர் என்னவானார்? மேலும், அவரது ஜயந்தியை இளைஞர்கள் தினமாகக் கொண்டாடும் இந்த நாட்டில், நமது இளைஞர்கள் ஏன் தடம் மாறுகின்றனர்?

விவேகானந்தர் உலக இளைஞர்களைக் கவர்ந்தார். அவரைப் பற்றி படிப்பவர்கள் அனைவரும் அவர்பால் கவரப்படுவர் என்பது உறுதி. அப்படி இருக்கையில், யாரென்றே தெரியாத வெளிநாட்டுத் தலைவர்களைப் போற்றுவதால் பயன் என்ன?

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நமது பாடத் திட்டம் தான். பள்ளிகளில் இருந்தே நமது வரலாற்றை வலிமையாகச் சொல்ல வேண்டும். இளைஞர்களுக்கு பள்ளிப் பாடத் திட்டத்தின் மூலம் சரியாக வழிகாட்டியிருக்க வேண்டும்.

மேலும், தற்போது ஒரு மாபெரும் தவறு செய்யப்பட்டு வருகிறது. அது, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வரலாறு என்ற பாடத்தையே புறந்தள்ளுவதுதான். வரலாற்றை சமூக அறிவியலுக்குள் புகுத்தி விட்டனர். வரலாறு என்பது ஒரு கட்டடத்தின் அஸ்திவாரம் போன்று.

அதேபோன்று, இசையை இளம் பருவத்திலிருந்தே பள்ளிகளில் கற்றுத் தர வேண்டும். ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல்களை வைத்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை நாம் பெருமையாகக் கூறிக் கொள்ள வேண்டாமா?


Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #1 on: June 11, 2014, 09:04:25 PM »
ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்

By வெ. இராமசுப்பிரமணியன்



மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பிலும்கூட, தனது உயிர்த்துடிப்பையும், ஆன்ம ஓட்டத்தையும் இழந்து நிற்கும் மிகச் சிறந்த கவிஞர்களும் கவிதைகளும்தான் இந்த உலகில் ஏராளம். ஆனால், உலக இலக்கிய வரலாற்றில், மிக மோசமான மொழிபெயர்ப்பிலும்கூட தனது உயிர்த்துடிப்பையும் ஆன்மத் தவிப்பையும் அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் கவிஞர்களும், கவிதைகளும் மிகக் குறைவே. அப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய மாபெரும் கவிஞர்களுல் ஒருவர்தான் கலீல் கிப்ரான்.

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக உலகளவில் தன் இறப்புக்குப்பின் அறியப்பட்ட மகாகவி கலீல் கிப்ரான் 1883 ஜனவரி 6ஆம் தேதி, தற்போது லெபனான் என்று அறியப்படும் நாட்டில் பிறந்தார். அவரது தந்தை கலீல் அவரது தாயார் கமீலாவிற்கு மூன்றாவது கணவர்.

சிறுவயதில் அவருடைய தந்தை சிறையிலிடப்பட்டு அவரது குடும்பச் சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதால் ஏழ்மையில் வீழ்ந்த கிப்ரானின் குடும்பம், பாஸ்டன் நகரத்திற்கு 1895இல் குடிபெயர்ந்தது.

அமெரிக்காவில் சிறிது காலம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த கிப்ரான், பள்ளிக் கல்வியோடு, ஓவியக்கலை மற்றும் புகைப்படக்கலையையும் பயின்றார். தனது 15ஆவது வயதில் கிப்ரான் தன் தாய்நாட்டிற்குத் திரும்பி, அங்கே மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

மறுபடியும் 1902ஆம் ஆண்டு பாஸ்டன் நகருக்கு திரும்பிய கிப்ரான், 1908 முதல் 1910 வரை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒரு கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றார். பின்னர் 1904ஆம் ஆண்டு பாஸ்டன் நகரில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சியில்தான் அவர் தனது நீண்டகால நண்பராக மாறிய மேரி எலிஸபெத் ஏஸ்கல்லை சந்தித்தார்.

குறுகிய காலத்திற்குள் மிக அற்புதமான மெய்யியல் மறைக்குறிக் கவிதைகளைப் படைத்த கலீல் கிப்ரான் 1931 ஏப்ரல் 10ஆம் நாள் தனது 48ஆவது வயதில் காலமானார். அவருடைய இறுதி ஆசைக்கிணங்க அவருடைய உடல் அவரது தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது நண்பர் மேரி ஏஸ்கல் மற்றும் அவரது சகோதரி மரியானா ஆகியோரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று அது "கிப்ரான் அருங்காட்சியக'மாக விளங்குகிறது.

கிப்ரான், தன் கல்லறையில், தான் பார்க்க விரும்பும் வாசகங்களாகக் குறிப்பிட்டவை: "நான் உங்களைப் போலவே வாழ்கிறேன், உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறேன். கண்களை மூடிக்கொண்டு சுற்றிலும் பாருங்கள், உங்கள் முன்னால் என்னைக் காணலாம்' - இவ்வாசகங்கள் தற்போது அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டு, அங்கு வருவோரை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கிப்ரானின் படைப்புக்களில் சாகா வரம்பெற்றவை, "தேவதூதன்' (டழ்ர்ல்ட்ங்ற்), "ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்' (அ ற்ங்ஹழ் ஹய்க் ஹ ள்ம்ண்ப்ங்) ஆகியவை. கிப்ரானின் தூய்மையான தத்துவ ஞானமும், ஆழமான அழகுணர்ச்சியும், அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அவர் இறந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னும், அவர் ரசிகர்களைக் கிறங்கடிக்கின்றன. அதனால்தான், ஒரு கவிஞனுக்கும் மரணத்திற்கும் நடக்கும் உரையாடலில் கலீல் கிப்ரான் சொன்னார், "ஒரு கவிஞனின் மரணம்தான் அவனது வாழ்க்கையாகும்' என்று.

ஏழ்மையையும் செல்வத்தையும் வேறு எந்தக் கவிஞனோ, மெய்யியல் அறிஞனோ பார்த்திராத கோணத்தில் கலீல் கிப்ரான் பார்த்தார். "என் ஏழை நண்பனே, உன்னை துன்பத்தில் தள்ளியிருக்கும் அதே ஏழ்மைதான், நீதியைப் பற்றிய தெளிவையும் வாழ்வின் பொருளைப் பற்றிய புரிதலையும் உனக்கு அளிக்கிறது என்பதை நீ உணர்ந்து கொண்டால், இறைவனின் தீர்ப்பில் நீ சமாதானம் அடைவாய்.

பணக்காரனின் முகம் ஞானத்திலிருந்து வெகு தொலைவிற்கப்பால் புதையலுக்குள் சிதைந்து கிடப்பதையும், அதிகாரத்தைக் கைக்கொண்டவன், பெருமையைத் தேடி ஓடும் முயற்சியில், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொலைப்பதையும், நீ உணர்ந்து கொள். அப்போது நீதான் நீதியின் குரல் என்பதையும், வாழ்க்கையின் புத்தகம் என்பதையும் உணர்ந்து மகிழ்வாய்.

தன் வாழ்க்கை, கண்ணீரும் புன்னகையும் கலந்ததாகவே இருக்கட்டும் என்று சொன்ன கிப்ரான், அதற்கான காரணத்தை இப்படிச் சொன்னார் : "என் இதயத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்காகவும், வாழ்க்கையின் ரகசியங்களையும், மறைபொருள்களையும் பற்றிய புரிதலுக்காகவும், எனக்குக் கண்ணீர் தேவை. உடைந்துபோன இதயங்களுக்குச் சொந்தமானவர்களோடு என்னை இணைப்பதற்கு எனக்குக் கண்ணீர் தேவை.

ஆனால், அதே நேரத்தில், வாழ்தலில் எனக்குள்ள மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குறியீடாக எனக்கு புன்னகையும் தேவை. மாலையில் மலர் தனது இதழ்களை மூடிக்கொண்டும், தனது ஏக்கத்தைத் தழுவிக்கொண்டும் உறங்கப் போகிறது. மறுநாள் காலையில் அதே மலர், சூரியனின் முத்தங்களைப் பெறுவதற்காகத் தன் இதழ்களைத் திறக்கிறது. ஒரு மலரின் வாழ்க்கை, நிறைவும் ஏக்கமும் கலந்ததாகும். கண்ணீரும் புன்னகையும் போலாகும்.

கொடுப்பதையும், பெறுவதையும் பற்றி கிப்ரானின் கவிதை: "மலரிலிருந்து தேனைச் சேகரிப்பது வண்டுக்கு இன்பம். ஆனால் அத்தேனை வண்டுக்கு ஈந்தளிப்பது மலருக்கு இன்பம். வண்டுக்கு மலர்தான் வாழ்க்கையின் ஊற்றுக்கண். மலருக்கு வண்டு தான் அன்பின் தூதுவன். மலருக்கும் வண்டுக்கும், தருவதும் பெறுவதும், தேவையும் தன்னிலை மறந்த ஆனந்தமும் ஆகும்'.

காலத்தைப் பற்றிய கிப்ரானின் அளவீடு: "அளவிட முடியாத, அளவெல்லை இல்லாத காலத்தை நீங்கள் அளக்கிறீர்கள். காலம் என்னும் ஓடையை, அதன் கரையிலே அமர்ந்து, நீங்கள் காண்கிறீர்கள். இருப்பினும், உங்களுக்குள் இருக்கும் காலம் தாண்டிய அது, வாழ்க்கையின் காலமற்றத் தன்மையை அறியும். நேற்று என்பது இன்றைய நினைவாகும். நாளை என்பது இன்றைய கனவாகும்'.

இறை ஞானத்தைப் பற்றி கிப்ரான் இப்படிச் சொன்னார்: "இசைக்கலைஞன் இந்த நேரத்தில் உலவும் ராகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கலாம். ஆனால், அந்தச் சுருதியைக் கைது செய்யும் காதுகளையோ, அதை எதிரொலிக்கும் குரலையோ, அவனால் உங்களிடம் கொண்டுவர முடியாது. காரணம், ஒருவனது பார்வை, இன்னொருவனுக்குச் சிறகுகளை அளிக்க முடியாது. இறைவனின் பேரறிவில், ஒவ்வொருவரும் தனித்து நிற்பதுபோல், இறைவனைப் பற்றிய அறிவிலும் ஒவ்வொருவனும் தனியாகவே

இருப்பான்'.

மரணத்தைப் பற்றிய கலீல் கிப்ரானின் பார்வை, ஒரு காதலன் காதலியின் மேல் செலுத்தும் பார்வையைப்போல் இருக்கிறது. "கவிஞனின் மரணம்தான் அவனது வாழ்க்கை' என்ற கவிதையில், மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கவிஞனை கிப்ரான் படம் பிடித்துக் காட்டுகிறார்: "ஊர்க்கோடியில் பாழடைந்து கொண்டிருக்கும் சுவர்களால் ஆன ஒரு பழைய வீட்டின் மூலையில், உடைந்துபோன கட்டிலின் மேல், இறக்கும் தருவாயில் கிடக்கிறான் அந்தக் கவிஞன். வாழ்க்கையின் வசந்தத்தில் இளைஞனாக இருந்த அவன், வாழ்வின் தளைகளிலிருந்து விடுபடும் தருணம் கையருகில் இருப்பதை உணர்ந்திருந்தான். எனவே, இறப்பின் வருகைக்காக அவன் காத்திருந்தான்.

ஒரு காலத்தில், தன் அழகியல் கவிதைகளால், மனிதர்களின் இதயங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அவன், தற்போது செல்வந்தர்களும், சீமான்களும் வாழும் நகரத்தில் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறான்.

தன் கடைசி மூச்சை அவன் வாங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவனருகில் துணை நின்றது, எக்காலத்திலும் அவனது தனிமைக்குத் துணையாக நின்ற ஒரு சிறு விளக்கும், ஒருசில காகிதங்களும் தான். தன் உடலிலிருந்த சக்தியை ஒன்று திரட்டி, அக்கவிஞன் இறப்பைக் கூவி அழைத்தான்.

என் அழகான இறப்பே, என் ஆன்மா உனக்காக ஏங்குகிறது. இவ்வுடல் பருப்பொருள்களோடு கொண்ட தளையை நீக்கிவிடு. என் அருமை இறப்பே, தேவதைகளின் வசனங்களை மனிதர்களின் மொழியில் நான் பேசிய காரணத்தாலேயே, என்னை அன்னியனாகப் பார்த்த மனிதர்களிடமிருந்து எனக்கு விடுதலை அளிப்பாய், சீக்கிரம் வா இனி மனிதகுலத்திற்கு நான் தேவையில்லை என் காதல் இறப்பே என்னை சீக்கிரம் கட்டித்தழுவு'.

கவிஞன் இப்படிக் கூவியதும், இறப்பெனும் பெண், அவனைக் கட்டித்தழுவி, முத்தமிட்டாள் - அவன் மறைந்தான். பல காலத்திற்குப் பின், அறியாமையிலிருந்தும், மடைமையிலிருந்தும் விழித்தெழுந்த மக்கள், அக்கவிஞனுக்கு ஊர் நடுவே ஒரு மிகப்பெரிய சிலையை நிறுவி, ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த மனிதர்களிடம்தான் எவ்வளவுமடைமை?

ஒரு கவிஞனின் மரணத்தைப் பற்றி கலீல் கிப்ரான் எழுதிய இக்கவிதை, அரபு மொழியில் 1914இல் முதன்முதலில் பதிப்பிக்கப் பட்டது.

ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவில் குடியேறிய ஒரு லெபனான் நாட்டுக் கவிஞன், பாரிஸ் நகரில் அரபு மொழியில் எழுதிய அக்கவிதையின் வாசகங்களை 1921இல் தமிழகத்தில் காலமான நம் பாரதியின் மரணம் மெய்ப்பித்துக் காட்டியது. காரணம் பாரதியும் ஒரு மகா கவியன்றோ?


 

கட்டுரையாளர்: நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #2 on: June 11, 2014, 09:26:29 PM »
வேண்டாம் செயற்கை உரங்கள்

By எஸ். பாண்டி



நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பணம், சொத்து சேர்த்து வைத்திருந்து என்ன பயன்? அவர்களுக்கு தூய்மையான காற்று, நிலம், நீர் ஆகியவற்றை வைத்திருப்பதே மிகப் பெரிய சொத்து ஆகும். இனி வரும் காலங்களில் தூய்மையான காற்று, ரசாயன கலப்பற்ற மண், தூய்மையான நீர் கிடைப்பது மிகவும் அரிது.

எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலில் கெமிக்கல் கலந்து இருப்பதாக ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் கெமிக்கல், உணவில் ரசாயன உரங்கள், காற்று மாசு இவ்வாறு அனைத்தையும் நாம் மாசுபடுத்தினால் பிறக்கும் குழந்தைகள் உடலில் கெமிக்கல் கலக்கத்தானே செய்யும்?

அதனால்தான் இப்போது முதியோர்களுக்கு வரக்கூடிய சர்க்கரை நோய், இருதய நோய், கண் குறைபாடு போன்ற நோய்கள் எல்லாம் வளரும் குழந்தைகளுக்குக்கூட ஏற்படுகிறது.

இதற்கு காரணம் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விளைநிலங்களில் தூவப்படும் ரசாயன உரங்களே.

மண்ணை பண்படுத்துகிறோம் என்ற நோக்கில் இயந்திரங்களை வைத்து மண்ணை உழும்போது உழவனின் நன்பன் என்று கூறப்படும் மண்புழு போன்ற நன்மை தரும் புழுக்களை அழிக்கிறோம்.

அதன்பின் விதைகளை பூச்சிகள் தாக்கக் கூடாது என்ற நோக்கில் விதைகளில் கெமிக்கல் கலந்து வைத்தே பாதுகாக்கிறோம். பூமியில் விதைகளை விதைக்கும் போது ராசயன உரங்களை கலந்தே விதைக்கிறோம்.

பயிர் வளர்ச்சியடைவதற்கு தேவையான தழைச்சத்து, மணிசத்து போன்ற சத்துகள் இயற்கையாகவே கிடைப்பதற்கு பதிலாக ரசாயன உரங்களை போடுகிறோம்.

மேலும் பூச்சி தாக்குதலின் போது அவற்றை அழிப்பதற்காக சக்தி வாய்ந்த பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்கிறோம். ஒரு பயிர் மண்ணில் விதைப்பதில் இருந்து அது மக்களைச் சென்றடையும் வரை ரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். எவ்வாறு நமக்கு தூய்மையான உணவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

நம் முன்னோர்கள் இன்றும் திடகாத்திரமாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணமே இயற்கையோடு ஒன்றி இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்ததே.

காலையில் எழுந்தவுடன் நீர் ஆகாரம், அதன் பின்னே பழைய சோறு. மதியம் அதே உணவு தான், இரவில் சூடு சோறு அந்த சாப்பாட்டின் மீதம் இருப்பதுதான் மறுநாளுக்கு உணவு அதை அப்படியே மண்சட்டியில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் சாப்பிட்டால் அந்த நீராகாரத்திற்கு இணையேதுமில்லை.

அன்று வாழ்ந்தவர்கள் கிழே விழுந்து காயம் ஏற்பட்டால், மண்ணை எடுத்து காயத்தில் போட்டால் காயம் ஆறிவிடும்.

இன்றைய காலத்தில் பயிர்களில் போடப்பட்டுள்ள அபரிமிதமான ரசாயன உரங்களால் நாம் சாப்பிடும் சாப்பாடு கூட விஷமாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பெயர் சொல்ல முடியாத நோய்கள் எல்லாம் உருவாகிவருகின்றன.

பயிருக்கு போடப்பட்ட ரசாயன உரங்கள் மழைக் காலங்களில் தண்ணீரில் கலந்து நீர் நிலைகள் மாசடைய செய்கிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு ஆகியவையும் ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது.

அதேபோல் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுகிறது. இதனால் ஒசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பூமியில் அதிக வெப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நாம்தான்.

நம் முன்னோர் இயற்கை உரங்களையும், உடலுக்கு ஏற்ற உணவு வகைகளையும், நோய் தீர்க்க பல அற்புத மூலிகைகளையும் நமக்கு வழங்கி சென்றார்கள். நாம் அவற்றை கடைபிடிக்கிறோமா?

மேலை நாட்டு கலாசாரம் என்ற பெயரில் நம் வாழ்க்கைக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து, பாரம்பரிய உணவுகளை கைவிட்டு, பாஸ்ட் புட் உணவுகளை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி நாம் வாழ்வை தொலைத்து வருகிறோம்.

வேண்டாம் இந்த மேலைநாட்டு கலாசாரம். ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற கலாசாரத்தை மூட்டை கட்டி மேலை நாட்டுக்கே அனுப்புவோம்.

நிலம், நீர்,காற்று ஆகியவை மாசுபடாமல் பாதுகாப்போம். இயற்கையை நேசிப்போம், இயற்கை உரங்களையே பயன்படுத்துவோம்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #3 on: June 11, 2014, 09:28:55 PM »
வாழும் கோட்பாடுகள்

By க.ப.  அறவாணன்



"அறம் வெற்றி பெறும்', "தர்மமே வெல்லும்', "வாய்மையே வெல்லும்' எனும் நல்ல நம்பிக்கைகளைத் தரும் வாசகங்களை நாம் தொடர்ந்து முதன்மைப்படுத்திப் பேசி வருகிறோம்; எழுதி வருகிறோம்; ஏழை எளிய மக்களிடையே நம்பிக்கையை வளர்த்து வருகிறோம். நாம் போற்றும் இதிகாசங்களும் இன்னபிற இலக்கியங்களும் அறம் வெல்லும் எனும் நம்பிக்கையையே நமக்குத் தொடர்ந்து ஊட்டி வருகின்றன.

இதன் விளைவாக அறம், வாய்மை, தர்மம் முதலானவற்றிற்குத் தாமாகவே வெற்றி கொள்ளும் ஒரு சக்தி இருப்பதாக நம்மிடையே கருத்து வளர்ந்திருக்கிறது. நம்முடைய திரைப்படங்களும் இத்தகு எண்ணத்தை நம்மிடையே வளர்த்திருக்கின்றன. ஆனால் உண்மையில் அப்படியல்ல.

எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் அறம் வெற்றி பெறுவதில்லை. அறத்திற்கு மாறானவை வெற்றி பெறுகின்றன; வெற்றி பெற்றுள்ளன. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களை வெற்றி கொண்டன.

சான்றாக, வாஸ்கோட காமா கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு ஐரோப்பிய, ஆசிய உறவுகள் வணிக முறையில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளை அடிமைகொள்ளும் நாடுகளாக மாற்றின.

புகழ்பெற்ற ஆப்பிரிக்க கவிஞர் லியோ போர்ட் செதார் செங்கோர், தாம் படைத்த "சஹா' என்ற பிரெஞ்ச் காவியத்தில் அதன் கதாநாயகன் ஒரு நீக்ரோ. அவன் தம் நாட்டிற்கு வந்த வெள்ளைக்காரரைப் பார்த்துச் சொல்வதாக ஒரு கூற்றை அமைத்திருப்பார். நீங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலெடுத்து வைக்கும்போது ஆப்பிரிக்கக் கண்டம் எங்கள் கைகளில் இருந்தது. உங்கள் கைகளில் மத வேதப் புத்தகம் இருந்தது. இப்போது எங்கள் நாடு எங்கள் கையில் இருக்கிறது. உங்கள் கையில் இருந்த மத வேதப் புத்தகம் எங்கள் கைகளில் இருக்கிறது.

இக்கூற்றை உலகமெங்கும் பரவிக் கிடந்த ஐரோப்பியக் காலனி நாடுகளின் வரலாறு மெய்ப்பிக்கிறது. ஒருவழியாக ஒவ்வொரு கண்டத்திலும் இருந்த ஐரோப்பியர்களின் கணிசமான பகுதியினர் தங்கள் மொழித்தடங்களையும் ஆட்சித் தடங்களையும் பண்பாட்டு நாகரிகத் தடங்களையும் அந்தந்த மண்ணின் மக்களின் இதய ஆழத்தில் பதியவிட்டுத் தம் நாடு திரும்பினார்கள்.

சில இடங்களைத் தாங்களே நிரந்தரமாக எடுத்துக் கொண்டார்கள். பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்களும் நெதர்லாந்துக்காரர்களும் அமெரிக்காவை எடுத்துக் கொண்டார்கள். பிரிட்டிஷ்காரர்கள் ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் எடுத்துக் கொண்டார்கள். தென்னமெரிக்காவை ஸ்பெயின் விழுங்கிக் கொண்டது.

உலகம் முழுதும் குழந்தை தின்ற தோசையைப் போல ஒவ்வொரு கண்டத்தையும் கடித்துத் தின்று வாய்க்குள் போட்டுக் கொண்டார்கள். இந்த வரலாற்றுப் பின்னணி நமக்கு எடுத்துச் சொல்வது அறம் வெற்றி பெறும்; தர்மம் வெற்றி பெறும் என்பனவற்றை அல்ல. உள்ளூர் மக்கள் கடைபிடித்த அறம் தோற்றது. தர்மம் தோற்றது.

சில நாடுகளிலும் இனங்களிலும் குற்றமே கொள்கையாகக் கடைபிடிக்கப்படுகிறது. சான்றாக, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சோமாலி நாடு கிழக்குக் கடலோரம் அமைந்துள்ளது.

கடலோரமாக வரும் கப்பல்களை இடைமறித்து அவ்வூர் மக்கள் அரசாங்க ஒத்துழைப்புடன் கொள்ளையிடுகிறார்கள். அந்நாட்டு அரசால் அது குற்றம் என்று கண்டிக்கப்படுவதும் இல்லை; தடுக்கப்படுவதும் இல்லை.

எல்லா நாடுகளுமே தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை உற்பத்தி செய்யப்படாத இடங்களில் இலாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள்.

ஆக, அறம், நியாயம், தர்மம் என்பனவற்றை அந்தந்த நாடும் அந்தந்த சமுதாயமும் அங்கீகரித்துப் பின்பற்றும் பொழுதுதான் நடைமுறையில் இருக்கின்றன. அவை அங்கீகரிக்கப்படாதபோது இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் அறத்தின் விலை வேறு வேறாக இருக்கிறது.

திருவள்ளுவர் காலத்திலும் இந்த நிலையே இருந்தது என்பதை அவர் எழுதியுள்ள, "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்' (169) என எழுதுவதால் தெரிகிறது.

கெட்ட எண்ணம் உடையவன் பண வசதியோடு ஜொலிக்கிறான். நல்லவன் வறுமையால் அல்லல்படுகிறான் என்பது அவர்தம் குறட்பாவிலிருந்து கிடைக்கும் செய்தி.

அறத்தை நிலைநாட்ட நல்லவர்கள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறது. போராட வேண்டி இருக்கிறது.

தீமைக்கு இப்படி ஆள் துணையும், தோள் துணையும் தேவைப்படுவதில்லை. நீதி, அநீதிகளை நிலைநாட்டவும் தரம்பிரிக்கவும் எந்தச் சமுதாயத்தில் உறுதிப்பாடு இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தில் மட்டும்தான் நீதி, அநீதி என்பனவற்றைத் தெளிவாக வரையறுக்க முடியும்; வாழும் கோட்பாடுகளாக ஒப்புக்கொள்ள முடியும்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #4 on: June 11, 2014, 09:41:14 PM »
சிந்திக்க வேண்டிய தருணம்

By இராம.பரணீதரன்



ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி "நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?' என்பது. இதற்கு ஒவ்வொரு மாணவனும் மருத்துவர், ஆட்சியர், போலீஸ், ஆசிரியர், விஞ்ஞானி என விதவிதமாக பதில் கூறுவார்கள்.

ஆனால், இதே கேள்வியை பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்து வெளியே வரும் ஒரு மாணவனிடம் கேளுங்கள். "தெரியலை சார். ரிசல்ட் வந்தாதான் தெரியும்' என்பார். இன்றைய 90 விழுக்காடு சராசரி மாணவர்களின் பதில், கட்டாயமாக இப்படித்தான் இருக்கிறது.

ஏனெனில், சிறு வயதில் இருந்த தெளிவான சிந்தனை மற்றும் இலக்கு நோக்கிய பார்வை, காலம் செல்லச்செல்ல மங்கிவிடுகிறது. மதிப்பெண் ஆயிரத்துக்கு மேல் என்றால் பொறியியல் கல்லூரி, அதற்கும் குறைந்தால் கலை அறிவியல் கல்லூரி, அதற்கும் கீழே என்றால் ஏதேனும் பாலிடெக்னிக் கல்லூரி, வேறு வழியே இல்லையென்றால் ஏதாவதொரு வேலைக்குப் போக வேண்டியதுதான் என்பதே அவர்களின் சிந்தனையோட்டமாக இருக்கிறது.

படித்து முடித்துவிட்டு வரும் அனைவருக்கும் வேலை கிடைக்காமல் போவதில்லை. அந்தப் படிப்புக்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்குத்தான் வேலை கிடைப்பதில்லை. கல்வியை வேலைக்குச் செல்லும் ஒரு "கேட் பாஸாக" பயன்படுத்தாமல், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், ஆளுமைத் திறனைப் பெருக்கிக் கொள்ளவும் இவர்கள் தவறிவிடுகின்றனர்.

இதில், மாணவர்களை மட்டும் குறை சொல்வதற்கில்லை. மாணவர் எந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வமாக இருக்கிறார் எனக் கண்டறிந்து, அவர்களை அந்தத் துறையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தும் ஆசிரியர்களோ, பெற்றோரோ, வழிகாட்டிகளோ இன்று இல்லை.

இன்று இருப்பவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம், எந்தப் படிப்பு படித்தால் லட்சங்களில் ஊதியம் பெறலாம் என்பதைக் குறிவைத்தே இருக்கிறது. இதில் மாணவரின் விருப்பத்துக்கெல்லாம் இடமில்லை.

போதாத குறைக்கு, பிளஸ் 2 தேர்வு எழுதி முடிந்தவுடன் கல்வி வழிகாட்டி, எதிர்கால வழிகாட்டி என்ற பெயரில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் மாணவர்களைக் குழப்புகின்றனர்.

இந்தப் படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை, அந்தப் படிப்பு படித்தால் லட்சக்கணக்கில் ஊதியம் என மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் ஆசை வலையில் வீழத்தி, தங்கள் கல்லூரிச் சீட்டுகளை நிரப்பி, தங்களின் "ஆள் பிடிக்கும் தந்திரங்களால்' மாணவரை விருப்பம் இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்க வைத்து, ஆர்வமில்லாத கல்வி கற்க வைத்து, அவரின் வாழ்க்கையை வீணாக்கிவிடுகிறார்கள்.

அனைவருக்கும் நிறைய ஊதியம் வரும் படிப்பு படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறதேயொழிய, அந்தப் படிப்பு தனக்கு சரிப்பட்டு வருமா? தனது எதிர்காலத்துக்கு இதனால் பயன் இருக்குமா? என்ற சிந்தனை இருப்பதில்லை.

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவரை மருத்துவராகவும், இசைத் துறையில் ஆர்வமுள்ளவரை பொறியாளராகவும் ஆக்குவதால் அவர்களால் தாங்கள் விரும்பிய துறையிலும் சாதிக்கவும் இயலாமல், தாங்கள் ஈடுபட்ட துறையிலும் சிறப்பாக பணியாற்றவும் முடியாமல் தடுமாற நேரிடுகிறது.

தன் குழந்தை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என எண்ணும் ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தை விரும்பும் துறையில் அவரது கல்வியைத் தொடர அனுமதிக்கவேண்டும். அது கலைத் துறையாகவோ, விளையாட்டுத் துறையாகவோ, ஏன் அரசியலாகக்கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கிறார்கள். மாணவர்களை அவர்களை விரும்பிய துறையில் ஈடுபடுத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் இரண்டாவது விருப்பத்தைக் கேட்டறிந்து அதில்கூட அவர்களை ஈடுபடுத்தலாம்.

ஆனால் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் பெற்றோரின் விருப்பத்துக்காகவும், நிறைய ஊதியம் பெற்றுத் தரும் படிப்பு என அவர்களை ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்தி, அவர்களின் வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியமல்ல. தேர்தெடுத்த துறையில் எந்தளவுக்கு கடினமாக உழைத்து முன்னுக்கு வருகிறார் என்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

இதனைப் புரிந்து கொண்டு மாணவர்களும், பெற்றோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #5 on: June 12, 2014, 07:39:23 PM »
பெயரில்தான் எல்லாம் இருக்கிறது

By ரமாமணி சுந்தர்



'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்டார் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். ஆனால் பலரும் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதுபோல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன பெயர் வைக்கலாம் என்று வீட்டில் பட்டிமன்றமே நடத்துகிறார்கள்.

ஒரு காலத்தில் குழந்தைக்கு ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரையோ, அக்குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரையோ சூட்டுவது வழக்கமாக இருந்தது.

ஆனால் பெரியவர்களின் பெயரைச் சூட்டினால் குழந்தையை பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது, திட்ட முடியாது என்பதனால் பேபி, பாப்பா, அம்பி என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு, பிறகு அந்தப் பெயரே நிலைத்து விடுவதும் உண்டு.

அந்தந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த திரைப்பட நடிகர், நடிகைகளின் பெயர்கள் சூட்டப்பட்ட காலமும் ஒன்று உண்டு. இப்பொழுது இருக்கவே இருக்கிறது இணையதளம். வலை வீசி நல்ல பெயரைத் தேடிக்கொள்ளலாம்.

ஆனால் என்னதான் கஷ்டப்பட்டு பெற்றோர் குழந்தைகளுக்குப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்தாலும் அவர்கள் பெரியவர்களான பிறகு, தங்களுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

நியூமராலஜியில் நம்பிக்கை உள்ளவர்கள் பெயர்களின் "ஸ்பெல்லிங்' ராசியானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களைப் பொருத்தவரையில் ஆண், பெண் இரு பாலருக்குமே ஒரே மாதிரியான பெயர்களே சூட்டப்படுகின்றன. பெண்ணென்றால் அத்துடன் கெளர் என்ற வார்த்தையும் ஆண் என்றால் சிங் என்ற சொல்லும் இணைக்கப்படும்.

இதற்கான காரணம், சீக்கியர்கள் குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயரைத் தங்களது புனித நூலான குருகிரந்த சாகிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு அந்த நூலைத் திறந்து தாங்கள் கை வைக்கும் இடத்தில் எந்தப் பெயர் உள்ளதோ அந்தப் பெயரையே தெய்வத்தின் ஆணையாக ஏற்றுக் கொண்டு தங்கள் குழந்தைக்குச் சூட்டி விடுவார்கள்.

பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு பல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு. சில பெண்கள் விஷயத்தில் புகுந்த வீட்டினர் பெண்ணின் பெயர் பிடிக்கவில்லை என்று சொல்லி பெயரை மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துவார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் பெயருடன் கணவனின் பெயரை இணைத்துக் கொள்வது காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது சில பெண்களுக்கு மிகப் பெரிய அடையாளப் பிரச்னையை உருவாக்குகிறது.

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு சிறந்த பாடகியாகவோ, எழுத்தாளராகவோ, ஆராய்ச்சியாளராகவோ தங்களுடைய கன்னிப் பருவப் பெயரிலேயே பிரபலமாகி இருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு கணவனின் பெயரை இணைத்துக் கொள்வதால் இவரேதான் அவர் என்று பலருக்குப் புரியாது.

சமீப காலத்தில் இந்தப் பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பெயருடன் தந்தையின் பெயர், கணவனின் பெயர் இரண்டையுமே இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், பிரியங்கா காந்தி வதேரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் போன்றோர்.

இன்றைய தலைமுறைப் பெண்கள் கணவனை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அல்லது செல்லப் பெயரிட்டு காதல் மொழி பேசுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்துப் பெண்கள் கணவன் பெயரை உச்சரிக்கக்கூட மாட்டார்கள்.

கணவனின் பெயர் உள்ள யாரையாவது பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால்கூட, "நான் அந்தப் பெயரைச் சொல்ல மாட்டேனே', "அவர் வந்திருக்கிறார்' என்று சுற்றி வளைத்துச் சொல்வதைப் புரிந்து கொள்வதற்குள் நமக்குத் தலையைச் சுற்றும்.

வட இந்தியாவில், குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்கள் தங்களது மனைவியைப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள் "ஆஷா கீ மா', "முன்னா கீ மா' என்று தங்களது மூத்த குழந்தைகளின் பெயரைச் சொல்லி "அவனுடைய அம்மா', "அவளுடைய அம்மா' என்றுதான் அழைப்பார்கள். இவர்களெல்லாம் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவோ அல்லது குழந்தையே இல்லையென்றால் எப்படி அழைப்பார்கள் என்பது தெரியவில்லை.

இன்றும் இந்த நாட்டில் எத்தனையோ குடும்பப் பெண்கள் தங்களுடைய பெயரே வெளி உலகிற்குத் தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "முத்துசாமி வீட்டம்மா', "ஆறுமுகம் பெஞ்சாதி', "சுப்பையா சம்சாரம்' போன்று கணவனின் பெயரை வைத்தே அறியப்படும், அழைக்கப்படும், அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தங்கள் சொந்தப் பெயரை மட்டுமல்ல, தங்களின் சுயத்தையே இழந்து போய் நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #6 on: June 12, 2014, 07:46:11 PM »
மனிதன் என்னும் விலங்கு

By எஸ். தோதாத்ரி



சார்லஸ் டார்வின் ஒரு இயற்கை விஞ்ஞானி. ஆய்வு செய்வதற்காக எச்.எம்.எஸ். பிகேல் என்ற கப்பலில் இங்கிலாந்தை விட்டுச் சென்றார். கிழக்கிந்தியத் தீவுகளில் இருக்கும்பொழுது அவர் மூன்று அபூர்வமான பூச்சிகளைக் காண நேரிட்டது. அவற்றில் இரண்டை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டார். மூன்றாவதைப் பிடிக்க வேண்டும்.

ஒரு யோசனை தோன்றியது. ஒரு பூச்சியை வாயால் கெளவிக் கொண்டு, மற்றொன்றையும் பிடித்தார். அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. கவலைப்படவில்லை. பிடித்தவற்றை பத்திரமாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்றார். இதேபோன்று அவர் உலகம் முழுவதிலும் சுற்றி ஏராளமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.

இவை அனைத்தையும் இங்கிலாந்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சேர்த்து, அவற்றைத் வகைப்படுத்த வேண்டும். ஆனால் அவர் உயிரியியல் படித்ததில்லை. அவர் ஒரு மதபோதகருக்கான கல்வியையே பெற்றிருந்தார்.

இருப்பினும், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றைக் கற்று, கிடைத்த விவரங்களை ஒழுங்கு செய்தார். பலரது ஆலோசனைகளைக் கேட்டார்.

நீண்டகால உழைப்பிற்குப் பின்னர் அவருடைய ஆய்வு முடிவுகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய நூல்கள் குறைவு.

அதில் முக்கியமானவை "உயிரினங்களின் தோற்றம்' என்பதும் "மனிதனின் தோற்றம்' என்பதும் ஆகும். இந்த நூல்கள் உலக சிந்தனை வரலாற்றை மாற்றி அமைத்த நூல்கள் ஆகும்.

முதலில் வீட்டு விலங்குகளில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி டார்வின் ஆராய்ந்தார். இவை செயற்கையான தேர்வு மூலம் பல மாறுதல்களை அடைகின்றன.

உதாரணமாக காட்டு நாய்களிடம் இல்லாத பண்புகள் வீட்டு நாய்களிடம் உள்ளன. இவற்றை மனிதன் செயற்கையாகத் தேர்வு செய்ததன் மூலம் ஏற்பட்டவை என்று அவர் விளக்கினார்.

இதேபோன்று இயற்கையில் தேர்வு இடம் பெறுகிறது. சூழ்நிலை மாறும் பொழுது அதன் தாக்கம் காரணமாக விலங்குகளும், தாவரங்களும் மாறுகின்றன. மாற முடியாதவை அழிகின்றன. மாறக் கூடியவை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து தங்கள் இனத்தைத் தொடர்ந்து வளர்க்கின்றன.

இதில் தகுதியுள்ளவை தாக்குப் பிடிக்கின்றன. தகுதியற்றவை படிப்படியாக அழிகின்றன. இன்றைக்குக்கூட, சூழ்நிலை மாறுதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத எத்தனையோ உயிரினங்கள் அழிவதை நாம் காண்கிறோம். இது டார்வினது விளக்கம். உயிரினங்களின் தோற்றத்தை அவர் இயற்கைத் தேர்வு என்ற கொள்கை அடிப்படையில் விளக்கினார்.

இந்த முறையைப் பின்பற்றி மனிதனது தோற்றத்தை அவர் விளக்கினார். மனிதனும் மற்ற விலங்குகளைப் போன்றவைதான். விலங்கு உலகில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகத் தோன்றியவன் மனிதன் என்று அவர் கூறினார்.

சாதாரணமாகக் கூறினால் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறுவார்கள். குரங்கு இனத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு வகைக் குரங்கு பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி கடைசியில் மனித வடிவம் பெற்றது என்று அவர் கூறுகிறார்.

சூழ்நிலை மாறுபாடு, அது உடலில் ஏற்படுத்தும் மாறுதல், தேவையான பண்புகள் நிலை பெறுதல், தேவை மற்றவை மறைதல் அல்லது அழிதல், தேவையானவை மரபணுக்களில் இடம்பெறுதல் போன்ற உயிரியியல் செயல்முறை மூலம் இது இடம் பெறுகிறது என்று அவர் கூறினார்.

டார்வின் வெளியிட்ட கொள்கையை உலகம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லா விஞ்ஞானக் கொள்கைகளையும் எதிர்த்ததுபோல இக்கொள்கையையும் அறிஞர் உலகம் எதிர்த்தது. குறிப்பாக மதவாதிகள் எதிர்த்தனர்.

அவர்களைப் பொறுத்தமட்டிலும் மனிதனைப் படைத்தவர் கடவுள். சகல ஜீவராசிகளையும் படைத்தவர் கடவுள். இக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நம்பிக்கை சார்ந்த அவர்களது கொள்கைக்குத் தோல்வி ஏற்படும். எனவே டார்வினுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

ஆனால் டார்வினைப் பல விஞ்ஞானிகள் ஆதரித்தனர். அவர்களில் ஏர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் ஒருவர்.

டார்வினின் கொள்கையைப் பரப்புவதற்கு அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். டார்வின் கொள்கை வெற்றி பெற்றது இன்றைக்கு அது விரிவாக்கப்பட்டுள்ளது.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #7 on: June 15, 2014, 07:22:43 PM »
விஞ்ஞானிகள் கைவிரிப்பு!

By கே.என். ராமசந்திரன்



வளி மண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் (கிரீன் ஹவுஸ்) வாயுக்கள் நிறைந்ததால் அதன் உலகளாவிய வெப்பநிலை உயர்ந்து கொண்டே போகிறது. வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு அதிகரித்தால் உணவு தானியங்களில் துத்த நாகம், இரும்பு, புரதம் போன்ற நுண்ணூட்டச் சத்துகளின் அளவு குறைவதாக பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வர் சாமுவேல் மயர்ஸ் தெரிவிக்கிறார்.

இதனால் ஏழை நாடுகளிலுள்ள சிறு குழந்தைகளும் கருவுற்றிருக்கிற தாய்மார்களும் உடல் நலக்குறைவால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த நுண்கனிமச் சத்துகளை அளிக்கக்கூடிய புலால் உணவை வாங்கி உண்ண வசதியில்லை.

வங்க தேசம், ஈராக், அல்ஜீரியா போன்ற நாடுகளில் இரண்டு பில்லியன் மக்கள் அரிசி, கோதுமை, சோளம், சோயா போன்ற உணவுகளில் நுண்கனிமச் சத்துகள் குறைந்து போனதால் தீய விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று "ஆக்ஸ்ஃபாம்' நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஹன்னா ஸ்டோடார்ட் கூறுகிறார்.

இப்போதைய வேகத்தில் வளிமண்டலக் கரியமில வாயுவின் செறிவு அதிகரித்துக் கொண்டே போனால் 2050ஆம் ஆண்டில் விளையும் உணவு தானியங்களில் இப்போதிருப்பதில் 60 சதவீத அளவுக்கே நுண்கனிமச் சத்துகள் இருக்கும் என்று அண்மையில் "நேச்சர்' இதழில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை எச்சரிக்கிறது.

நாஸா விஞ்ஞானிகளும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வர்களும் வளி மண்டல வெப்ப நிலை உயர்வால் தென்துருவத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பெரும் பனிமலைகள் தடுத்து நிறுத்தவியலாத வேகத்தில் சிதைந்து உருகத் தொடங்கியுள்ளதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அதன் விளைவாக வங்க தேசத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சி வரை கடல் மட்டம் நான்கு மீட்டர் வரை உயரப் போகிறது. ஆனால் சில விஞ்ஞானிகள் அந்த அளவுக்கு நீர்மட்டம் உயர 200 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆறுதலளிக்கிறார்கள்.

இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கெட்ட சேதி இனிமேல்தான் வரப்போகிறது. உறவினர் ஒருவர் கோமா நிலையில் இருக்கிறபோது எல்லா மருத்துவர்களும் இனிமேல் இவருக்கு எந்த மருந்தும் பலனளிக்காது என்று கை விரித்துவிட்டால் எப்படியிருக்கும்?

அதேபோல விஞ்ஞானிகளும் வளி மண்டலத்தில் கரியமில வாயு சேர்ந்து கொண்டே போவதைத் தடுக்கிற தொழில் நுட்பம் இருப்பதாகத் தெரியவில்லை என்று கையை விரித்து விட்டார்கள்! இது வரையிலும் அவற்றைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட உழைப்பும் பல நூறு கோடி டாலர் செலவும் விழலுக்கிறைத்த நீராக வீணாகிவிட்டன என்று ராபர்ட் சாமுவேல் சன் என்ற ஆய்வர் கூறுகிறார்.

பல்வேறு நாடுகளில் வளிமண்டல வெப்பநிலை உயர்வைப் பற்றி நிகழும் விவாதங்களும் வெளியிடப்படும் அறிக்கைகளும் நிலைமையைத் தெளிவு படுத்துவதை விட மக்களைக் குழப்புவதில்தான் அதிகமாக முனைந்திருக்கின்றன.

ஐ.நா. சபை அமைத்த ஒரு சர்வதேச நிபுணர் குழு வளிமண்டல வெப்ப நிலை உயர்வு பல பத்தாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது என்கிறது. அதற்கு மனிதரின் தொழில் முயற்சிகளின் போது வெளியிடப்படும் பசுங்குடில் வாயுக்களே காரணம்.

அவற்றின் செறிவு, கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் விளைவாகப் பனிமலைகள் உருகுவது. கடல் நீர் மட்டம் உயர்வது, தினசரி பகல், இரவு வெப்பநிலைகள் உயர்வது போன்றவை நிகழ்வதாக அந்தக் குழு அறிவித்திருக்கிறது.

முந்நூறு அமெரிக்க நிபுணர்கள் அடங்கிய அமெரிக்க தேசிய தட்ப வெப்ப நிலை மதிப்பீட்டுக் குழு வெளியிட்ட அறிக்கை, வளிமண்டல வெப்ப நிலை உயர்வால் ஏற்படும் பாதக விளைவுகள் வெளிப்பட இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும் எனச் சில ஆய்வர்கள் கூறுவதை மறுத்து, சில பத்தாண்டுகளுக்குள்ளேயே அவை உணரப்படும் என பயமுறுத்துகிறது.

இப்போதே அமெரிக்காவில் ஆண்டுவாரியான பெரும் வெள்ளப் பெருக்குகளின் எண்ணிக்கையும், கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீயின் எண்ணிக்கையும் ஆக்ரோஷமான மழைப் புயல்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகின்றன.

மறுப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுகிற நிபுணர்கள் வளிமண்டலச் சீர்கேடு என்பது வெறும் பிரமை என்கிறார்கள். "காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை'யாக சாதாரண இயற்கைச் சம்பவங்களைக்கூட மிகைப்படுத்தி அவற்றுக்கு வளிமண்டல வெப்ப நிலையைப் பொறுப்பாக்குவது தவறு என அவர்கள் வாதிடுகிறார்கள்.

கேட்டோ என்ற மறுப்பாளர் குழுவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வர் ஒருவர் அமெரிக்காவில் அதீத வெயில் தாக்கு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 1980க்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது எனச் சுட்டிக் காட்டுகிறார்.

அவர்களுக்குச் சுயநல நோக்கமுள்ள எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழில் கூட்டமைப்புகள் பண உதவியும் நிறுவன உதவியும் செய்கின்றன. கருத்துக் கணிப்பு உத்திகளையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். 2006இல் 77 சதவீத அமெரிக்கர்களும் 2013இல் 67 சதவீத அமெரிக்கர்களும் வளிமண்டல வெப்பநிலை உயர்வின் விளைவுகளை உணர்வதாகக் கூறியிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒன்றுக்கொன்று மாறான கருத்துகளை வெளியிடுவதில் அரசியலும் பங்கு வகிக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரைவிட அதிகத் தீவிரமாக வளிமண்டல வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். அதைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யாருக்குமே இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று தெரியாது என்பதுதான் உண்மை.

அமெரிக்க ஆற்றல் தகவல் நிர்வாகம் 2010 முதல் 2040 வரையான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் கலப்பு 50 சதவீதம் உயரும் என ஊகிக்கிறது. உலகில் 80 சதவீத ஆற்றல் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் வாயிலாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அவையே வளிமண்டலப் பசுங்குடில் வாயுக்களுக்கு மூலாதாரம்.

இன்றைய நிலையில் ஆற்றல் உற்பத்திக்கு அவற்றை விட்டால் வேறு வழியில்லை. சுய புத்தியுள்ள எந்த நாடும் அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துத் தனது பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொள்ளாது.

மேலும் அத்தகைய நடவடிக்கைகளின் நற்பயன்கள் புலப்பட இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம் என்ற நிச்சயமற்ற ஊகமும் அரசுகளின் அக்கறையை அழுத்தி அடக்கி விடுகிறது.

வளமிக்க மேலை நாடுகளின் நிபுணர்களும் அரசியல்வாதிகளும் சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளே முதன்மையான குற்றவாளிகள் என்கின்றனர். அமெரிக்காவும் செல்வம் மிக்க மேலை நாடுகளும் வளிமண்டலத்தில் விடுவிக்கும் பசுங்குடில் வாயுக்களின் அளவு அடுத்த முப்பதாண்டுகளுக்கு இன்றைய நிலையிலேயே நீடிக்கும் என்கிறார்கள்.

ஆற்றல் அதிகப் பயனுறு திறனுடன் பயன்படுத்தப்படுவது, ஆற்றல் உற்பத்திச் சாதனங்களின் அதிகரித்த செயல்திறன், மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்திருப்பது போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஜப்பானிலும் பிற மேலை நாடுகளிலும் ஜனத்தொகை குறைந்து வருவதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

மேலை நாடுகள் தங்களின் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைத்துக் கொண்டாலும், ஆசிய நாடுகளின் அதிகமான பசுங்குடில் வாயு வெளியீடு அதை ஈடு செய்து விடும் என்பதால் மேலை நாடுகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முனைப்பு ரீதியிலும் அதிகமான ஆதரவு இல்லை. சூரிய மின்கலங்களும் காற்றாலைகளும் ஆற்றல் உற்பத்தியில் அற்பமான பங்களிப்பையே தருகின்றன.

வருங்காலத்தில் வளிமண்டல வெப்பநிலை உயருமா, உயராதா; அதனால் ஏற்படும் விளைவுகள் நல்லவையா, அல்லவையா; மனித குலம் அவற்றுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்பவை போன்ற கேள்விகளுக்குச் சரியான விடைகள் யாருக்குமே தெரியவில்லை.

எல்லாரும் ஆண்டவனிடம் கையேந்தத் தொடங்குவதுதான் இப்போது தோன்றுகிற ஒரே உபாயம்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #8 on: June 17, 2014, 08:19:12 PM »
மரங்களிடம் தவறில்லை

By ஆர்.எஸ். நாராயணன்



வேல் மரங்கள் என்பவை ஒன்றல்ல, இரண்டல்ல; 50, 60 வகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் வேல் மரங்களில் முக்கியமாக எட்டையும், வேறு குடும்பத்திலிருந்து இரண்டையும் சேர்த்துக் கொண்டு பத்து மரங்கள் எனக் குறிப்பிடலாம்: கருவேல், வெள்வேல், கஸ்தூரி வேல், குடை வேல், இலைக் கருவேல், இஸ்ரேலியக் கருவேல், சீமைக் கருவேல், மான்செவிக் கருவேல் ஆகியவை அக்கேசியா குடும்பம். எனினும் வெள்வேலைப் போல வடிவமைப்புள்ள வன்னி, சூபாபுல் ஆகிய இரண்டையும் சேர்த்தால் பத்து. இப்பத்தும் கால்நடைகளுக்குகான உணவு.

வேல் மரங்களைப் பற்றிய சில கருத்துகள் ஊடகங்களில் விவாதப் பொருளாகிவிட்டன. மரங்களை நாம் வளர்க்கும் முறையில் தவறு உண்டே தவிர, மரங்கள் என்றுமே தவறானவை அல்ல. 1960களில் டென்மார்க் நிதி உதவியுடன் தமிழ்நாட்டின் ஏரிகளில் கருவேல் நடப்பட்டது. கருவேல் நீர் நிலைகளில் வளரக் கூடியது. அதே சமயம் சீமைக் கருவேல் நீரில் வளராது. கருவேல் மரத்தின் வேரும் சீமைக் கருவேல் வேர் போல நீண்டு செல்லக்கூடியது. கருவேல் நடப்பட வேண்டிய இடம் கரிசல் காடு. கரிசல் பூமி தவிர கரைப் பாதுகாப்புக்கு ஏற்ப, நிலப்பகுதியில் நடலாம். ஏரிப்படுகையில் நடுவதை ஏற்க முடியுமா? மனித நலவாழ்வுப் பிரச்னையும் உண்டு.

பல்வகையான வேல் மரங்களில், கருவேலில் மட்டும் அதிகபட்சமாக டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது. ஏரிகளில் சுத்தமான மழைநீர் சேமிக்கப்படுகிறது. மழைநீர் சாஃப்ட் வாட்டர். கருவேல் மரத்தின் டானின், ஏரி நீரில் கரைந்து, குடிநீர் ஹார்ட் வாட்டராகி விடுகிறது. டானினுடன் இதர உப்புகளும் சேர்ந்து விடுவதால், தொடர்ந்து அப்படிப்பட்ட நீரைப் பருகும்போது சிறுநீரகம் பழுதடையும் வாய்ப்பு உண்டு.

கருவேல் பெரும்பாலும் வெட்டுப்பட்டு விறகாகிறது. நின்று எரியும். செங்கல் சூளைகளுக்கும் பாய்லர்களுக்கும் ஏற்றது. மண்வெட்டிக் காம்பு தவிர இதனால் வேறு பயன் இல்லை. கோந்து எடுக்கலாம். பட்டையிலிருந்து பல்பொடி செய்யப்படுகிறது. "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி'. கருவேலம் பட்டையின் துவர் பல் துலக்க சரிப்படும். இது முள் மரம். குச்சியை ஒடித்துப் பல் தேய்க்க இயலாது.

வேல் மரங்களில் உயரமாக வளர்ந்து கனமான மரத்தை வழங்குவது வெள்வேல். நிறைய நிறையும் தரும். ஏற்றுமதிக்குரிய தரமான கோந்தும் நிறையப் பெறலாம். வெள்வேல் மரப் பட்டை மருத்துவ குணம் உடையது. "வேலம் பட்டை மேகத்தை நீக்கும் - ஆலம் பட்டை பித்தத்தை நீக்கும்' என்பது முதுமொழி.

வெள்வேலில் துவர்ப்பு குறைவு. டானின் அளவும் குறைவு. ஆகவே நொதிக்கும் திறன் அதிகம். இனிப்பைச் சேர்த்தால் ஆல்கஹால் உற்பத்திக்குரிய துணைப் பொருளாகச் செயல்படும். திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மனின் ஆலயத் தலமரம் வெள்வேல். "திருவேல்' என்பது வெள்வேலை மட்டுமே குறிக்கும்.

அகேசியாக் குடும்பத்தின் அரியதொரு படைப்பு கஸ்தூரி வேல். நல்ல வாசனை மரம். இது குறுமரம். கஸ்தூரி வாசனை போல் மலர் மணக்கும். இப்பூக்கள் மஞ்சரியாக இருக்கும். மஞ்சரி என்றால் ஒரு மலருக்குள் உருண்டை வடிவில் கேசரங்கள் திரளாயிருக்கும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரும்பும் கடம்ப மலரும் மஞ்சரியே. கடம்ப மலர் என்பது லட்டு வடிவில் பெரிதாயிருக்கும். கஸ்தூரி வேல் மஞ்சரி சீடை வடிவில் உள்ள உருண்டைப் பூ. இந்த மலரிலிருந்து "கேசி பர்ஃப்யூம்' எடுக்கப்படுகிறது.

குடை வேல் என்பது அழகு மரம். இதுவும் ஒரு குறுமரம். 15 அடிக்கு மேல் உயராமல் கிளைகள் திரட்சியாக வளர்ந்து மரத்திற்குக் குடை பிடிக்கும். ஓவியர்கள் வரையும் மர ஓவியம் போல் காட்சி தரும் இம் மரம், முள்களைத் தானாகவே உதிர்க்கும். காலணி இல்லாமல் இம்மரத்தடியில் கால் பதிப்பது கடினம். காங்கேயம் மாடுகள் வளரும் கோரங்காட்டுப் பகுதியில் குடை வேல் மரங்கள் அதிகம்.

இலைக் கருவேல் மரம் என்பது ஆஸ்திரேலிய மரம். இது அபூர்வமாகவே காணப்படும். இதை கத்திக் கருவேல் என்றும் அழைப்பார்கள். சீனாவில் இம்மரம் அதிகம் உண்டு. நகரங்களில் அழகு மரமாக வளர்க்கப்படும் இதில் முள்கள் இராது. இலைக் காம்பே இலைக் கொத்தாகிக் கருக்கரிவாள் போல் காட்சி தரும். இதை நறுக்கி சவுக்கைப் போல் எரிதுரும்பாகப் பயன்படுத்துவார்கள். வேல் என்ற பெயர் இல்லாத பரம்பை, கருங்காளி மரங்கள், அக்கேசியா குடும்பத்தின் மரங்கள்.

இப்போது சீமைக் கருவேல் அல்லது வேலிக்காத்தான் எனப்படும் பாவப்பட்ட மரத்தின் புண்ணியங்களை அறியலாம். ஒரு உயர்ந்த எண்ணத்தில் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சியில் நேருவின் அனுமதியுடன் ஒரு நல்ல காரணத்திற்காக இந்திய ரயில்வே இருப்புப் பாதைகளின் இருமருங்கிலும் சீமைக் கருவேல் விதைகள் தூவப்பட்டன.

1950-60 கால கட்டத்தில் கடுமையான விறகுப் பஞ்சம் நிலவியது. இன்று போல் அன்று கேஸ் அடுப்பு இல்லை. ஏன், மண்ணெண்ணெய் ஸ்டவ் கூட அபூர்வம். சமையலுக்கு விறகும் அடுப்புக் கரியும்தான் வழி. சென்னை நகரில் ஒவ்வொரு வீதியிலும் 2 அல்லது 3 விறகுத் தொட்டிகள் இருந்தன. சவுக்கு விறகு, புளிய விறகு கிடைத்தன. அவை கிட்டாத நிலையில் சீமைக் கருவை விறகாக விற்கப்பட்டன. வறட்சியில்கூட வளரக் கூடிய பாலை நில மரம் இது.

வட அமெரிக்காவின் பாலை நிலப் பகுதியான அரிசோனாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரத்தை வட இந்தியப் பாலைவனத்தைப் பசுமையாக்கும் நோக்கில் 1876இல் லெப்டினண்ட் கர்னல் ஆர்.எஸ். பெட்டோம் என்பவர் பிரேசிலிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதில் வியப்பான விஷயம் எதுவெனில், சீமைக் கருவேல் விதை சிவப்பிந்தியர் உணவு. மாவாக்கி ரொட்டியாக உண்பார்கள். ஒரு மரம் சராசரியாக 20 கிலோ விதை வழங்கும். செவ்விந்தியர்களைப் போல் பாலை நிலப் பகுதி இந்தியர்களுக்கு இது உணவாகவும் பயனாகும் என்ற நல்லெண்ணம் கர்னல் பெட்டோமுக்கு இருந்திருக்கலாம்.

ஆனால், நேரு நினைத்தது வேறு. விறகுப் பஞ்சம் காரணமாக மக்கள் வனத்திலுள்ள மரங்களை வெட்டி விறகாக்கி வந்ததைத் தடுக்கவே, இந்தியாவில் இதைப் பரவச் செய்தார் என்ற கருத்தும் உண்டு. சீமைக் கருவை சரியான நேரத்தில் இந்தியாவில் பரவியிரா விட்டால் இந்திய வனப் பகுதியில் கணிசமான அளவில் மரங்கள் அன்றே அழிந்திருக்கும். இன்று வீட்டுச் சமையலுக்கு விறகு பயன்பாடு குறைந்திருந்தாலும், கிராமங்களில் இன்னமும் கணிசமான அடித்தட்டு மக்களின் எரிபொருள் செலவு இதனால் இனாமாகக் கிடைக்கிறது.

ராஜஸ்தான், குஜராத் மாநில விவசாயிகள் சீமைக் கருவேல் விதைகளை மாவாக்கி கறவை மாடுகளுக்கு வழங்கி கடலைப் பிண்ணாக்கின் தேவையைக் குறைத்துக் கொள்கிறார்கள். விதைகளில் 30 சதவீதம் புரதமும் 60 சதவீதம் மாவுப் பொருளும் உள்ளன.

சீமைக் கருவையை நான் 50 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள எனது கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விதைத்து மரமாக்கி அப்போது விறகுத் தேவையை சமாளித்தேன். 10 ஆண்டு கழித்து அம்மரங்களை அழித்து எள், நிலக்கடலை விதைத்ததில் அதிக மகசூல் பெற்றேன். அதுமட்டுமல்ல. பி.எச். 9 சதவீதமாக இருந்த களர் நிலம், பி.எச். 7.8 சதவீதமாகக் குறைந்து, மண் வளமுற்றது.

பாலை நிலத்திலும், உவர் நிலங்களிலும் சீமைக் கருவேல் பசுமையாக இருப்பதன் காரணம், இதர வேல் மரங்களை விடவும் அதிக அளவில் மண்ணில் நைட்ரஜனை சேமிப்பது புலனாகிறது. நீர் இல்லாவிட்டாலும் காற்றில் உள்ள நைட்ரஜனை (ஈரப்பசை) சுவாசித்து உயிர் வாழ்ந்து மண்ணுக்கும் வழங்குகிறது.

களர், உவர் நில பிரச்னைகளுக்கும் விடை அளிப்பதால், விவசாயத்திற்கு உதவாத நிலங்களில் இவை வளர்வதை அனுமதிப்பதில் நன்மையும் உண்டு. மெக்சிகோவிலிருந்து அறிமுகமான சூபாபுல்லுக்கும் சீமைக் கருவை போல் அமைப்பு உண்டு. முள் இல்லை. சூபாபுல்லும் விதை கொட்டி அடர்ந்த காட்டை உருவாக்கும். இதரப் பயிர்களை வளர விடாது. அதுவே நிறைய பயன்களைத் தருகிறதே. எனவே அங்கு இதரப் பயிர் தேவையுமில்லை.

சூபாபுல்லைப் போல் வன்னியும் பசுக்களின் கொடை. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சூபாபுல் தழை, வன்னித் தழை, வேலிக் கருவை விதைகள் இவற்றைக் கொண்டு புஷ்டியான கால்நடைகளைப் பெறுகின்றனர். நெய்வேலி காட்டாமணக்கு, வெங்காயத் தாமரை போல் சீமைக் கருவை நீர் உறிஞ்சி அல்ல. பார்த்தீனியம் போல் விஷமும் அல்ல. சொல்லப் போனால் சீமைக் கருவை மண்ணில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவதாகவும் சொல்லலாம்.

இப்போது சீமைக் கருவை விறகிலிருந்து தூளாக்கி மின்சாரம் தயாரிப்பதால் உவர், களர் நில மறுவாழ்வுக்கு இதைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.20,000 வருமானம் பெறலாம்.

ஆண்டவன் படைப்பில் அர்த்தம் உள்ளது. அது அது வளர வேண்டிய இடங்களில் வளருமானால் பிரச்னை ஏது?

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #9 on: June 18, 2014, 08:15:40 PM »
தமிழில் வருமா மின் புத்தகங்கள்?

By ஆர்.வி.எஸ்.



அமேசான் இணையச்சந்தை தளம் இந்தியாவில் அதன் விற்பனையை அமோகமாக நடத்திவருவது அனைவரும் அறிந்த விஷயமே. ஷேவிங் ரேஸர் ட்ரிம்மர், கம்மல், கேமரா, கம்ப்யூட்டர், அடுக்களை சாமான்கள் என்று (அம்மா அப்பா தவிர) சகலவிதமான பொருள்களையும் விற்றுவருகிறார்கள். இதில் புத்தக வகையறாக்கள் மிகவும் பிரசித்தியான ஒன்று.

அமேசானால் ஈ-இன்க் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாதனம் கிண்டில். சாதாரண மொபைல் ஃபோன் மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்களின் திரையிலிருப்பவைகளை, சூரியஒளி நேரடியாக இறங்கும் பொதுவெளியில் பார்க்கவோ படிக்கவோ சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால், கிண்டிலில் அச்சடித்த காகிதத்தில் புத்தகத்தைப் படிப்பது போன்று இலகுவாகப் படிக்க இயலும்.

இது கண்களுக்கு அயர்ச்சி ஏற்படாத வண்ணம் பலமணி நேரம் புத்தகங்களைப் படிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டில் மென்பொருளை கணினியிலோ அல்லது ஐஃபோன் போன்ற திறன்பேசிகளில் நிறுவிக்கொண்டோ தரவிறக்கிய புத்தகங்களைப் படிக்கலாம்.

இந்தக் கையடக்கச் சாதனத்தில் ஒரு புத்தக அலமாரியையே சுமையின்றி சுலபத்தில் அடக்கிவிடலாம். இச்சாதனம் வையகமெங்கும் புத்தக ஆர்வலர்களால் பெரிதும் போற்றிப் புகழப்படுகிறது.

இத்தகைய சத்குணவிசேஷங்கள் நிரம்பிய இச்சாதனத்தில் புத்தகங்களைப் படிக்க, மொபி, பிடிஎஃப் போன்ற வடிவத்தில் தயாராக இருக்கும் கோப்புகளை அமேசான் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இப்படிப் படைப்புகளைப் பதிவேற்றம் செய்யும் போது அப்படைப்பின் மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Made for India என்பதை தாரகமந்திரமாகத் தாங்கி இணையத்தில் விற்பனை செய்துவரும் amazon.in இணையதளத்தில் கிண்டிலில் படிக்க ஏதுவாக தமிழ் உள்பட எந்தவொரு இந்திய மொழி மின் புத்தகமும் அந்த மொழிப் பட்டியலில் இல்லாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

சுதாகர் கஸ்தூரி என்பவர் தானெழுதிய 7.83 ஹெர்ட்ஸ் என்கிற அறிவியல் புதினத்தை அச்சுப் புத்தகமாக்குவதற்கு முன்பாக அமேசானில் வலையேற்றினார். இரண்டு நாள்களில் ஆர்வமுள்ள வாசகர்கள் சிலர் அந்த மின் புத்தகத்தை அதற்குண்டான தொகையைச் செலுத்திக் கிண்டிலில் தரவிறக்கிப் படித்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் புத்தகத்தை தங்களது இணையதளத்திலிருந்து நீக்கியது அமேசான். காரணத்தை ஆராய்ந்தால் ஆண்டிராய்ட் இயங்குதளம் கொண்ட சில மின்னணு சாதனங்களில் கிண்டில் மென் பொருளில் தமிழ் உருக்கள் தெளிவாகத் தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.

பத்திகளும் அதனுள் வரும் வரிகளும் கிண்டில் திரையில் சமச்சீராக வருவதற்கான நிரலிகள் இன்னும் உருவாக்கப்படாததாலும் எழுத்துருவிலிருந்து ஒலியிருவாகக் கேட்கும்படியான (Text to Speech) மேலதிக செüகர்யங்களும் கிண்டிலில் தமிழுக்கு இணைக்கப்படாமல் இருப்பதாலும் இதை நீக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

யூனிகோட் என்றழைக்கப்படும் சர்வசாதன எழுத்துருக்களில் Tace - 16 என்ற தமிழ் வகையறா எழுத்துரு இதற்கெல்லாம் தீர்வாக அமையும் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.

வெறும் எண்பத்தைந்தாயிரத்துச் சொச்சம் மக்களே பேசும் Manx மொழியும், ஏழு இலட்சத்திச் சொச்சம் பேர் பேசும் Basque என்கிற ஒரு பகுதி பாஷையும் இடம்பிடித்த அமேசான் கிண்டிலில் எழுபது மில்லியனுக்கு மேற்பட்டவர்களின் தாய்மொழியாக இருக்கும் தமிழ் இடம்பிடிக்காதது துரதிர்ஷ்டமானதே.

பெருமளவில் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட அமேசான் இந்தியா, வெகுஜன பயன்பாட்டில் இருக்கும் கிண்டில் போன்ற மின்னணு சாதனங்களில் பாரதத்தின் மாநில மொழிகளை வெளியிடுவதற்கு ஆவன செய்யவேண்டும்.

இந்திய மண்ணில் தான் சந்தைப்படுத்தும் பொருள்களை மட்டுமே ஜனங்கள் வாங்கவேண்டும் என்றும் அந்நாட்டின் நுகர்வோரின் விருப்பங்களைப் பரிசீலிப்பதில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவேன் என்கிற ரீதியில் அமேசான் தனது விற்பனையை மேற்கொண்டால் இந்திய அரசாங்கம் இவ்விவகாரத்தில் தலையிட்டு இத்திருநாட்டின் செம்மொழிகளுக்கு டிஜிட்டல் அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ஓலைச்சுவடிகளில் அழியும் நிலையிலிருந்த அரும்பெரும் நூல்களை தமிழ்த்தாத்தா உ.வே.சா. அச்சுப்புத்தகமாக்கியது சென்ற நூற்றாண்டு சாதனை.

அது போல அடுத்த தலைமுறையினர் தங்கு தடையின்றி மின்னணு சாதனங்களில் தமிழில் படிக்க, இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் கிண்டில் போன்றவை பிழையின்றி தமிழை இணைக்கும் பட்சத்தில் இளைய தலைமுறையினரிடையே தமிழ் படிக்கும் ஆர்வத்தை முடுக்கிவிட முடியும்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #10 on: June 21, 2014, 08:11:07 PM »
பொருளுக்கும் இலக்கணம் கண்ட தமிழ்!

By உதயை மு. வீரையன்



உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஊரும், நாடும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இனமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு அடையாளம் என்ன? மனிதனை மனிதனாக ஆக்குவன எவை? மொழியும், இலக்கியமும், பண்பாடுமே. ஆனால் நாம் அதனை வசதியாக மறந்து விட்டோம்.

இந்தக் காலத்தில் இலக்கியம் படிப்பது குறைந்துவிட்டது. தமிழ் இலக்கியம் படிப்பதால் வேலை வாய்ப்பு குறைவு என்பதால் எதிர்காலம் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழ் படிப்பதால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லாத நிலையென்றால், இதற்காகத் தமிழர்கள் வெட்கப்பட வேண்டாமா?

பொருள் ஈட்ட வேண்டியது அவசியம்தான். "பணம் பத்தும் செய்யும்' என்பது உண்மைதான். என்றாலும், பண்பாடு இல்லாத சமுதாயம் மனிதநேயம் மறந்து விலங்கு நிலையை அடைந்துவிடும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? கல்வி, மொழி, இலக்கியம் என்பவை மனிதனை மனிதனாக வாழ வைக்கும் நாகரிகக் குறியீடுகள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

"மொழியின் வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம்' என்றார் அறிஞர் ஹட்சன். இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் இன்னொரு ஊடகம் என்று கூறலாம்.

உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றின; வளர்ந்தன. ஆனால் காலப்போக்கில் பல அழிந்தன, சில அழிந்து கொண்டும் இருக்கின்றன. வளர்ந்துவரும் அறிவியலுக்கு ஈடுகொடுக்க முடியாதவை அழியும். அதை யாராலும் தடுக்க முடியாது.

செம்மொழிகள் என்று சிறப்பிக்கப்படும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவற்றில் முதல் நான்கு மொழிகளும் வழக்கிழந்து போயின. சீனமும், தமிழுமே இன்றும் வாழ்ந்து வருகின்றன. அந்தப் பெருமையைக் கொண்டாட வேண்டாமா?

"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே' என்றும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் பாரதி பாடி மகிழ்ந்தார்.

தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் மாக்ஸ்முல்லர் என்னும் மொழியியல் அறிஞர் கூறுகிறார்.

ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் பல கருத்துகளைப் புலப்படுத்துவதில் தமிழ் மொழி போல் வேறு எம்மொழியும் இல்லை என்று பெர்சிவல் பாதிரியார் கூறியதை நினைவு படுத்திக் கொள்வோம்.

"இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கல நிகண்டு கூறுகிறது. அனுமன் சீதாதேவியிடம் தூது சென்றபோது மதுரமான மொழியில் பேசினான் என்று வால்மீகி முனிவர் சுந்தரகாண்டத்தில் எழுதியிருப்பதைக் கொண்டு அம்மதுரமொழி தமிழ் மொழியென்றே கொள்ளலாம் என்று மகாவித்துவான் ரா. ராகவையங்கார் "தமிழ் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியின் ஆதி காவியமான வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. வியாச முனிவரின் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் அரசும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இதனால், "பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மையும், அவர் பேசிய தமிழ் மொழியின் தொன்மையும் ஓராற்றான் தெளியப்படுமாறு காண்க' என்று பரிதிமாற் கலைஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"தமிழ்மொழியானது கவிதையைப் பொருத்தவரை கிரேக்க மொழியைவிட பண்பட்டது; இலத்தீன் மொழியைவிட அழகானது; ஆற்றலிலும், முழுமையிலும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனுக்கு இணையானது' என்று டாக்டர் வின்ஸ்லோ கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

ஜெர்மானிய தத்துவஞானி ஆல்பர்ட் சுவிட்சர், திருக்குறளை ஆராய்ந்து பார்த்துவிட்டுக் கூறினார்: "திருக்குறளை விடவும் சிறந்த அறநெறி இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.'

பொதுவாக எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மட்டும்தான் பொருளுக்கும் இலக்கணம் காணப்பட்டது. நமது பழந்தமிழ் இலக்கண நூலாகிய "தொல்காப்பியம்' எழுத்து, சொல், பொருள் என்று முப்பிரிவுகளாகவே பகுக்கப்பட்டுள்ளது.

அக்காலத் தமிழர் வாழ்க்கை யினை அகம், புறம் என இரு பிரிவுகளாகவே பகுத்தனர். தலைமகனும், தலைமகளும் உள்ளம் கலந்து கூடி வாழும் வாழ்க்கையைக் கூறும் பாடல்கள் அகம் எனப்பட்டன.

போர், கொடை, வெற்றி ஆகியவற்றைக் கூறும் பாடல்கள் புறம் எனப்பட்டன. அக வாழ்வு வீட்டுக்கானது, புற வாழ்வு நாட்டுக்கானது.

"போரும், காதலும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும், மானிடவியலும் தற்கால இலக்கியங்களின் பிழிவாகவும் அமைந்துள்ளன' என்று அறிஞர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை குறிப்பிடுவார்.

காலத்துக்கு ஏற்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை காலம் புறம் தள்ளிவிடும் என்பது வரலாறு. காலத்திற்கு ஏற்ப கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதால்தான் தமிழ் "என்றுமுள தென்றமி'ழாய் இன்றும் நின்று நிலவுகிறது. அதனை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு இல்லையா?

வாழ்க்கை என்பதே தமக்காக வாழ்வதல்ல, பிறருக்காக வாழ்வதாகும் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த உலகம் அழியாமல் நிலை பெற்றிருப்பதற்குக் காரணம், தமக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெருமக்கள் இருப்பதால்தான் என்று புற நானூறு கூறுகிறது.

மன்னனை "அவன்' என்றும், புலவர்களை "அவர்' என்றும் பேசும் மரபு தமிழுக்குரியது. "அவனை அவர் பாடியது' என்றே இலக்கியங்கள் வகுக்கப் பெற்றுள்ளன. புலவர்கள் தம் நாட்டைப் பாடாமல் போவதை மன்னர்கள் அவமானமாகக் கருதினர்.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவ னாக

உலகமொரு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் நிலவரை'

என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ளான். மன்னர்களும் புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்த காலம் அது.

"புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுளிற் புனைந்து காட்டும் ஆற்றலினும், அகத்தே தோன்றும் காட்சிகளை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் மிகவும் சிறந்தது...' என்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் குறுந்தொகைக்கு எழுதிய முன்னுரையில் வியந்து பாராட்டுகிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலகப் பார்வையோடு அறிவியல் பார்வையும் அகத்தே கொண்டிருப்பன சங்க நூல்கள்.

மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

என்ற உவமை மூலம் அறிவியல் உண்மைகளை எடுத்து இயம்புகிறது.

சுமார் கி.பி. 60இல் தோன்றியுள்ள "பெரிபுளூஸ்' என்னும் நூல், கி.பி. 77 வந்த "பிளினியன் இயற்கை வரலாறு', கி.பி. 170இல் வந்த தாலமியின் "பூகோள விவரணம்' ஆகிய நூல்களில் இவ்வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள் சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றன என்று டாக்டர் கே.கே. பிள்ளை தமது "தென்னிந்திய வரலாறு' நூலில் கூறியுள்ளார்.

இவ்வாறு உலகளாவிய பரந்துபட்ட பார்வையுடைய ஓர் இனத்தின் தாய்மொழி உள்ளூரிலேயே மதிக்கப்பட வில்லை என்பது பரிதாபமானது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். இந்தக் கடமை அரசுக்கு மட்டுமல்ல, தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

பதிமூன்றாம் லூமி என்ற பிரெஞ்சுப் பேரரசன் மொழியைப் பேணிக் காக்க 1525ஆம் ஆண்டு பிரெஞ்சு கலைக்கழகத்தைத் தோற்றுவித்தான். நம் முன்னோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்.

"சங்கத் தமிழ் மூன்றும் தா' என்றார் ஒளவைப் பிராட்டி. இதனைக் கொஞ்சமும் குறைவு படாமல் அடுத்தத் தலைமுறைக்கு அளித்துவிட்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. முழக்கங்கள் தமிழை வளர்த்து விடாது; முயற்சிகளே தமிழை வளர்க்கும்.


Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #11 on: June 26, 2014, 05:16:40 PM »
உயிரியல் பின்னூட்டம்

By கே.என். ராமசந்திரன்



சூரியனை வலம் வரும் கோள்கள், துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு, ஊடகங்களுக்குள் பயணிக்கும் ஒளி போன்றவற்றின் இயற்பியல் நடத்தைகளைக் கணித முறைகளின் மூலம் துல்லியமாகக் கணித்து விடலாம். ஆனால் உயிரினங்களின் நடத்தைகளை அவ்வாறு கணிக்க விதிகள் இல்லை. தெருவில் நடக்கிற ஒரு பசு தரையில் கிடக்கிற ஓர் எச்சிலிலையைத் தின்னுமா, தின்னாதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

அதேபோல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதைப் பொதுவான இயற்கை விதிகளின் மூலம் ஊகிக்க முடியாது. அவனது நடத்தைக்குக் காரணமும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் உயிரினங்களின் நடத்தைகளும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவைதான். அவற்றை நிர்ணயிக்கிற எல்லாக் காரணிகளையும் கண்டுபிடிப்பதுதான் நடவாத காரியம். அவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றுள் பல மற்ற காரணிகளுடன் இசைந்தோ எதிரிடையாகவோ செயல்படக் கூடியவை.

1879ஆம் ஆண்டில் வில்ஹம் உண்ட் என்ற ஜெர்மானிய உடற்செயலியல் ஆய்வர், மனித நடத்தைகளை அறிவியல் அடிப்படையில் ஆராயும் முதல் ஆய்வகத்தை நிறுவினார். அவர் மனிதனின் முக்கியமான உணர்வுகளையும் அவன் தன்னைச் சுற்றியிருக்கிற விஷயங்களைப் பார்க்கிற பாங்குகளையும் பற்றி ஆய்வு செய்தார்.

1881ஆம் ஆண்டில் "மனிதன் உலகமெனும் மாபெரும் எந்திரத்தில் ஒரு பல் சக்கரத்தைப் போன்றவன்' என்ற கருத்தை பிரடரிக் வின்ஸ்லோ டெய்லர் என்ற அமெரிக்கப் பொறியியலார் வெளியிட்டார். அவர் ஒவ்வொரு பணியையும் மனிதர் செய்து முடிக்க ஆகும் நேரத்தை அளவிட்டு அதைக் குறைப்பதற்கான உத்திகளை வகுத்தார். மனிதரின் செயலுறு திறனை மேம்படுத்த முனைந்த முதல் நிபுணர் அவர்தான். அதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு அவரைப் பிடிக்காமல் போயிற்று.

கட்டுப்பாடான சூழ்நிலையில் ஆய்வகத்தில் சோதனை விலங்காக வைக்கப்படும் ஒரு மனிதனின் நடத்தைகளையும் கட்டுப்பாடற்ற ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறவனின் நடத்தைகளையும் ஒப்பிட்டுச் சோதிக்க உதவும் வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை. எளிய உயிரினங்களில் நாட்டம் என்கிற பண்பு உள்ளது.

தாவரங்கள் வெய்யில் வரும் திசையில் வளரும். அவற்றின் வேர்கள் நீர் உள்ள திசையில் நீளும். பூச்சிகள் குறிப்பிட்ட மணம் வீசும் பொருள்களை நாடி வரும். இவ்வாறான அனிச்சைப் பண்புகள் மனிதர்களிலும் காணப்படும்.

ஒரு மனிதச் சிசு தாயின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டவுடன் அதன் உள்ளங்கையைத் தொட்டால் அதன் விரல்கள் மடங்கி, தொடும் விரலை இறுகப் பிடித்துக் கொள்ளும். அதன் தாய் பாலூட்டினால் உதடுகளைக் குவித்து உறிஞ்சத் தொடங்கும். இச்செயல்களுக்கு "உள்ளுணர்வு' என்ற பண்பைக் காரணமாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகளின் மனதில் அவை பிறந்த கணத்திலிருந்தே பதிவுகள் தொடங்குகின்றன. வெறும் ஒலிகளாக அறிமுகமாயிருந்த தாயை அவை ஐம்புலன்களாலும் அறிய முற்படும். அந்தக் கட்டத்தில் தாய்மார்கள் "ஜூஜூ'... "ச்சூச்சூ' என்றெல்லாம் அர்த்தமற்ற ஒலிகளை வெளியிட்டுக் கொஞ்சுவது தவறு என உளவியலார் கூறுவர். தெளிவான சொற்களால் கொஞ்சப்படாத குழந்தைகள் பிற்காலத்தில் தெளிவாகப் பேசும் திறன் அற்றவர்களாக அல்லது முழு வாக்கியங்களாகப் பேச முடியாதவர்களாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது.

வளரின நிலையில் சிறுவர் சிறுமியருக்கு தம்மையொத்த வயதுள்ளவர்களின் சகவாசமும் தேவை. அவ்வாறான கிளர்வுகள் கிடைக்கப் பெறாதவர்கள் பிற்காலத்தில் வக்கிர குணங்களை அடைகிறார்கள்.

அனிச்சை விளைவுகளும் மனப் பதிவுகளும் சிசுப் பருவத்தில் மட்டுமே முக்கியமானவை என விட்டுவிட முடியாது. வயது அதிகமாகும்போது பட்டறிவும் பகுத்தறிவும் அதிகரித்து விடும்; அனிச்சைச் செயல்பாடுகள் குறையும் என்பது சந்தேகத்துக்குரியது. சுய விருப்பம், சுய புத்தி போன்றவையும் உறுதியாக நிரூபிக்கப்படாதவை. பல அம்சங்களில் மனித நடத்தை முழுக்க முழுக்க அக்கணத்துத் தூண்டல்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

எல்லாவிதமான பயில்தல்களும் கட்டுப்படுத்தப்பட்ட மறுவினைகளே. தட்டச்சுக் கருவியைப் பயன்படுத்தப் பயிலும்போது ஒவ்வொரு எழுத்துச் சாவியையும் கண்ணால் பார்த்தே அழுத்த வேண்டியிருக்கும். பயிற்சி கூடக் கூடக் கண்ணை மூடிக் கொண்டே தட்டச்சு செய்ய விரல்களுக்குப் பழக்கம் ஏற்பட்டு விடும்.

நீண்டகால அனுபவம் உள்ள தட்டச்சரிடம், சாவிப் பலகையில் ஒரு குறிப்பிட்ட எழுத்து எங்கேயிருக்கும் என்று கேட்டால் அவர் உடனடியாகப் பதிலளிக்க மாட்டார். காற்றில் தட்டச்சு செய்வதைப் போல விரல்களை அலைய விட்டு அந்த எழுத்தைத் தட்டும் விரல் எங்கே போகிறது என்று பார்த்தே அந்த எழுத்தின் இடத்தை அவர் கூறுவார்.

மனதுக்கு சாவிப் பலகையின் அமைப்பு மறந்தாலும் விரல்களுக்கு மறப்பதில்லை. வீணை, வயலின் போன்ற இசைக் கலைஞர்களின் விரல்களும் இவ்விதமான அறிவுள்ளவையே.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜான் பிராடஸ் வாட்சன் என்ற அமெரிக்க உளவியலார் மனிதரின் நடத்தையைக் கட்டுப்பாடு செய்ய முடியும் என வாதித்து அதனடிப்படையில் நடத்தையியல் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். மனிதன் தனது நடத்தைகளை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடியாது எனவும் அவன் உட்படும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவே அவை அமையும் எனவும் அவர் வாதித்தார்.

ஆனால் ஆக்க ரீதியான மதியூகம், கவின் கலைத் திறமைகள், நாணயம் மற்றும் நியாய உணர்வு போன்ற நடத்தைகளின் தன்மையை அவரால் விளக்க முடியவில்லை. ஆயினும் ராணுவம், காவல்துறை போன்ற அமைப்புகளில் அவருடயை கருத்துகள் செயல்படுத்தப்படுகின்றன.

மனிதனுக்கு நினைவாற்றல் அதிகம். ஒரு சாவி தொலைந்து போனால் அது வழக்கமாக எங்கே வைக்கப்படும், யார் யார் அதைப் பயன்படுத்துவார்கள். கடைசியாக யார் அதைப் பயன்படுத்தினார்கள் எனப் பல கேள்விகளுக்கு விடை கண்டு அதைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம்.

மனிதன் தனது நீண்டகால அனுபவத்தைப் பயன்படுத்தி முயற்சி மற்றும் தோல்விகளைக் குறைத்துக் கொள்ள முடிகிறது. மனதுக்குள்ளேயே கேள்வி கேட்டு விடை கண்டு தீர்வு காண மனிதரால் முடியும். இதுவே பகுத்தறிவு எனப்படும்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், குடல் அலைவியக்கம் போன்றவை உடலின் சுயாதிக்க நரம்பு மண்டலத்தின் ஆளுகையிலிருப்பவை எனவும் மனமறிந்து அவற்றை மாற்ற முடியாது எனவும் நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. யோக முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைத் தம் விருப்பப்படி மாற்ற முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.

உல்ப்காங் கோஹ்லர் என்ற ஜெர்மானிய உளவியலார் பயில்தல் என்பது ஒரு செயலின் எல்லாக் கூறுகளும் சம்பந்தப்பட்டது எனவும் அதன் தனித் தனிக் கூறுகள் மட்டும் பயில்தலை நிறைவு செய்யமாட்டா எனவும் நிரூபித்தார்.

ஓர் ஆய்வின்போது சிம்பன்சி, கிப்பன், கொரில்லா, உராங் உட்டான் ஆகிய குரங்கினங்களின் குட்டிகளை மனிதக் குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து ஆராயப்பட்டது. ஆரம்பத்தில் குரங்குக் குட்டிகள் மனிதக் குழந்தைகளை விட வேகமாக அறிவு வளர்ச்சியடைந்தன. ஆனால் குழந்தைகள் பேசப் பழகிய பின் குட்டிகளின் அறிவு வளர்ச்சி பின்தங்கி விட்டது. குட்டிகளின் மூளையில் ப்ரோக்கா மடிப்பு என்ற பகுதியில்லாமல் போனதே அதற்குக் காரணம்.

நீல் எல்கார் மில்லர் என்ற அமெரிக்க ஆய்வரின் குழுவினர், எலிகளை வைத்துச் செய்த ஒரு சோதனையில் அவற்றின் ரத்த அழுத்தம் அல்லது இதயத் துடிப்பு வேகம் அதிகரித்த போதெல்லாம் அவற்றுக்கு உண்பொருள்களை அளித்தார்கள். சில வாரங்களுக்குப் பின்னர் எலிகள் உண்பொருளைப் பெறுவதற்காகத் தமது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றை விரும்பியபடி அதிகரித்துக் கொள்ளப் பழகிவிட்டன.

இதையொத்த ஓர் ஆய்வில் ஆண்களின் ரத்த அழுத்தம் உயர்ந்தபோது அல்லது இறங்கியபோது அவர்களுக்கு எதிரிலிருந்த ஒரு திரையில் ஒரு நிர்வாண அழகியின் பிம்பம் தோன்றுமாறு செய்யப்பட்டது. நேரம் செல்லச் செல்ல அந்தக் காட்சி திரையில் அடிக்கடி வரத் தொடங்கியது. அவர்களுடைய மனதில் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை ஏற்பட்டு, அவர்களையுமறியாமல் ரத்த அழுத்தம் அடிக்கடி ஏறியிறங்கியதே அதற்குக் காரணம்.

அண்மைக் காலத்தில் சிறப்பான, செம்மையான முறைகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் மனிதன் தனது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றில் ஏற்படுகிற மாற்றங்களைச் சதா உணர்ந்து கொண்டேயிருக்கப் பழகிவிட்டால், அதன் பிறகு தன் விருப்பப்படி அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று காட்டுகின்றன. இந்தச் செயல்முறை உயிரியல் பின்னூட்டம் எனப்படுகிறது.

இந்த உண்மை நமக்குப் புதிதாகத் தோன்றாது. ஏனெனில் நமது புராணங்களில் சித்தர்களும் முனிவர்களும் தமது சுவாசம், இதயத் துடிப்பு போன்றவற்றை அறவே நிறுத்தி இறந்துவிட்ட நிலையை எட்டிச் சில காலம் கழித்து உயிரை மீட்டிக் கொண்ட கதைகள் ஏராளம்.

Offline Maran

Re: கட்டுரைகள்
« Reply #12 on: November 11, 2014, 10:23:50 PM »
வளரவிடக் கூடாது...



By எஸ். பாண்டி



முன்பெல்லாம் கோடை காலங்களில் மட்டும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வந்தன. ஆனால், தற்போது அனைத்துக் காலங்களிலும் வனவிலங்குகள் தோட்டப் பகுதிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்கு உணவு தேடி வருகின்றன.

இதனால், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மோதல் ஏற்பட்டு, உயிர்ப் பலியும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் வனங்கள் அழிக்கப்படுவதும், வனத்தில் ஏற்படும் உணவு பற்றாக்குறையுமே.

மான், முயல், ஆடு போன்றவை தாவரங்களை உண்ணுகின்றன. அவற்றை அசைவ விலங்குகள் உண்ணுகின்றன. இவை இறந்த பின் பாக்டீரியா உதவியுடன் மண்ணில் மக்கி தாவரங்களுக்கு உரமாக மாறுகின்றன. இந்த சங்கிலி முறையில் சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் பிரச்னைதான்.

தற்போது பெரும்பாலான இடங்களில் அரசினால் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் கட்டப்பட்டு தண்ணீர் இல்லாத காலங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வனப்பகுதியில் வன விலங்களுக்குத் தேவையான மூங்கில் மற்றும் பல்வேறு வகையான உணவு தாவரங்கள் அரசினால் நடப்பட்டு வருகிறது. ஆனால், அவை பெரும்பாலான இடங்களில் வளர்ச்சி அடையாததால், வன விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல், அவை மக்கள் குடியிருப்புகளைத் தேடி வருகின்றன.

வனங்களில் நடப்படும் தாவரங்கள் வளர்ச்சி அடையாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வனத்தில் ஏற்படும் தீ; மற்றொன்று தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் செடிகள். அதாவது, வெளிநாடுகளில் இருந்து நாம் பல்வேறு வகையான விதைகளையும் உணவு பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

அதன் மூலம் பல்வேறு வகையான களைச் செடிகள் இந்தியாவில் ஊடுருவியுள்ளன. அவற்றுள் முக்கியமானவை பார்த்தீனியம், ஆகாயத்தாமரை, லன்டானா கேமரா ஆகும். இதில் கடந்த சிலநாள்களுக்கு முன் அரசினால் பார்த்தீனியச் செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், லன்டான கேமரா மறைமுகமாக வனப்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது.

லன்டான கேமரா என்பது செடியின் தாவரவியல் பெயர். குற்றுச்செடி வகையைச் சேர்ந்த இத்தாவரம், மித வெப்பமான பகுதியில் 7 அடி உயரம்வரை வளரும் தன்மை கொண்டது. இதன் தாயகம் மெக்சிகோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள்.

இத்தாவரங்கள் வளர்வதற்கு மிக குறைந்த அளவிலான நீர் போதுமானது, மேலும் இத்தாவரங்கள் தீயினால் அழிந்தாலும் இதன் விதைகள் அழிவதில்லை.

இதனால், இத்தாவரங்களின் விதைகள் எளிதில் வளர்ந்து விவசாய பகுதி மற்றும் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கொள்கின்றன. மேலும், இச்செடிகள் வளரும் பகுதியில் மற்ற செடிகளை வளரவிடாமல் ஆக்கிரமித்து கொள்கிறது.

இச்செடிகள் கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் ஊடுருவியுள்ளன. இதன் பூக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணங்களில் இருப்பதால் இதனை வீடுகளில் அழகுக்காக வைத்தும், இதன் குச்சிகளை துடைப்பானாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

இதன் இலைகளில் "பென்ட்டாசைக்கிளிக் ட்ரைட்டர் பானாய்ட்ஸ்' என்ற திரவம் உள்ளதால், இதனை சாப்பிட்ட கால்நடைகளுக்கு ஹெப்பட்டோ விஷத்தன்மையும், போட்டோ சென்சிட்டி விட்டியும் ஏற்படுகின்றன.

இத்தாவரத்தின் விஷம் கால்நடைகளின் ரத்தத்தில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. இதனால், கால்நடைகள் மற்றும் விலங்குகளின் தோலில் சிவப்பு தடிப்பு ஏற்பட்டு, அரிப்பு மற்றும் புண்கள் ஏற்படுகின்றன. இதனால், கால்நடைகளின் வளர்ச்சியும் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

இச்செடியின் வளர்ச்சியால் காடுகள் மலட்டு தன்மையடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, லன்டான கேமராவை உடனே வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.