ஓர்கா திமிங்கலம்g பற்றிய தகவல்கள்:-

கடலில் வாழும் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியதும், கடல் வாழ் உயிரினங்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வதும் இந்த ‘ஓர்கா’திமிங்கலங்களே. இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
ஆண் ஓர்கா திமிங்கலங்கள் 30 அடி நீளமும், பெண் ஓர்கா திமிங்கலங்கள் 26 அடி நீளமும் இருக்கும். ஆண் திமிங்கலத்தின் எடை 16,000பவுண்டும், பெண் திமிங்கலத்தின் எடை 12,000 பவுண்டும் இருக்கும். இவை,அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டவை. சாதாரணமாக மணிக்கு 10 முதல் பதினாறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
நீந்தும்போது உடலை சமன் செய்து கொள்ள முதுகிலுள்ள துடுப்பு பயன்படுகிறது. இவற்றின் நீளம் சுமார் 6 அடி வரை காணப்படுகிறது. பெண் திமிங்கலங்களின் துடுப்பு பின்நோக்கி வளைந்து ஆணின் துடுப்பின் நீளத்தில் பாதியளவே காணப்படுகிறது. ஒவ்வொரு தாடையிலும் 20 முதல் 26கூர்மையான பின்னோக்கி வளைந்த பற்கள் காணப்படுகின்றன. இவை பெரிய இரைகளைக் கடித்து உண்பதற்கு வசதியாக உள்ளன.
இந்த ஓர்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் வரை இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டி திமிங்கலங்களும் இருக்கும்.
பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக்கொண்டு பிரிந்து செல்வதும் உண்டு. எல்லா பெண் திமிங்கலங்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால்,ஆண் திமிங்கலங்கள் குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும்.
இவை 12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. தென் துருவ கடல்களில் வாழ்பவை டிசம்பர் முதல் ஜூன் வரையிலான பருவகாலங்களிலும், வடதுருவ கடல் பகுதிகளில் வாழ்பவை மே முதல் ஜூலை வரையிலான பருவ காலங்களிலும் இணை சேருகின்றன. பின்12 மாதங்களுக்குப் பின் ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் இரண்டு வயது வரை குட்டிக்குப் பால் கொடுக்கின்றன. மேலும், பல ஆண்டுகள் தன் தாயின் பாதுகாப்பிலேயே குட்டிகள் வாழ்கின்றன. எனவே, இவை 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே குட்டிப் போடுகின்றன.
இந்த ஓர்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. தனது இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள இவை எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு.
இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றன.