Author Topic: ~ சுட்டீஸ் ரெசிப்பி சத்துக்கு சத்து சுவைக்கு சுவை! ~  (Read 1740 times)

Offline MysteRy

வெஜிடபிள் சான்ட்விச்



தேவையானவை:
பிரட் துண்டுகள் - 10, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் - தலா ஒரு கப், பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்), உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 100 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கேரட் துருவல், குடமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.  இதில் வேக வைத்த உருளைக் கிழங்கு, நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிரட்டின் ஓரப் பகுதியை நீக்கிவிட்டு, நடுப்பகுதியில் வெண்ணெய் தடவி காய்கறிகள் பிசைந்ததை பரவலாக வைக்கவும்.  மேல்புறம் ஒரு பிரட் துண்டை வைத்து மூடி டோஸ்ட்டரில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:
பிரட் எளிதில் ஜீரணமாகும். பசி அடங்கும். மாலை நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

Offline MysteRy

கீரை கோதுமை ரவா பொங்கல்



தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கப், கோதுமை ரவை - 200 கிராம், நெய் - 100 மி.லி., மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:
ஒரு பங்கு கோதுமை ரவைக்கு நான்கு பங்கு தண்ணீர் என்ற சேர்த்து, குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகப் பொடி, இஞ்சி, கீரை, கறிவேப்பிலை எல்லாவற்றை போட்டு வதக்கவும்.   தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த ரவையுடன் கலந்து நெய் விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு:
ஊட்டச்சத்து மிகுந்தது. எளிதில் ஜீரணமாகும்.

Offline MysteRy

ராகி கொழுக்கட்டை



தேவையானவை:
ராகி மாவு - 200, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன்.

செய்முறை:
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.  ஒரு பங்கு மாவுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என அளந்து தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். இதில் வெல்லத் தண்ணீரை விட்டு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும் மாவைத் தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கவும். நன்றாகப் பிசைந்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
ராகி தோசை, கஞ்சி, கூழ் என்று பலவிதமாகச் செய்து கொடுக்கலாம். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு பெசரட் தோசை



தேவையானவை:
பாசிப்பருப்பு - 150 கிராம், இட்லி அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மி.லி., இஞ்சி - சிறு துண்டு.

செய்முறை:
அரிசி, பருப்பு, காய்ந்த மிளகாய்  எல்லாவற்றையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களையவும். இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிச் சேர்த்து, நைஸாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும். 

குறிப்பு:
பாசிப்பருப்பு வயிற்றுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். வயிற்றுப் புண் வராமல் தடுக்கும். இஞ்சி எளிதில் ஜீரணத்தைத் தரும். 

Offline MysteRy

பனீர் ரோல்



தேவையானவை:
சோளமாவு - ஒரு ஸ்பூன், மைதா மாவு - 200 கிராம், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயத்தாள் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மி.லி., பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:
மைதா மாவுடன் சோளமாவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கேரட் துருவல், கோஸ் துருவல், உப்பு, வெங்காயத் தாள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பனீரை நன்றாக உதிர்த்து எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மைதா மாவை சிறு அப்பளமாக இட்டு, வதக்கிய காய்களை உள்ளே வைத்து உருட்டி இரு முனைகளையும் ஒட்டி கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

ஓம முறுக்கு



தேவையானவை:
ஓமம் - 30 கிராம் (வறுத்து பொடிக்கவும்), அரிசி மாவு - 200 கிராம், வறுத்து அரைத்த உளுந்தமாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 250 மி.லி., உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசிமாவு, வெண்ணெய், ஓமம், உளுந்து மாவு, உப்பு எல்லாம் ஒன்று சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, சிறிய முறுக்குகளாகப் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு:
ஓமம் ஜீரண சக்திக்கு நல்லது. ஓமத்தை வறுத்துப் பொடித்துச் செய்வதால் முறுக்கு வாசனையாக இருப்பதுடன், அச்சில் முழு ஓமம் அடைத்துக்கொள்ளாது. பிழிவதும் எளிது.

Offline MysteRy

முளைப்பயறு அடை



தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய உளுந்து, முளைக்கட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டுப்பல் - 4, வெங்காயம் - 1, எண்ணெய் - 100 மி.லி., உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, வெங்காயம், பூண்டுப் பல்லை தோல் நீக்கி, நறுக்கவும். இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். முளைகட்டிய பயறு, கொண்டைக் கடலை, கறிவேப்பிலை, உளுந்து, கொள்ளு, இஞ்சி, காய்ந்த மிளகாய், பூண்டுப்பல், வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, அடைமாவைப் பரவலாக விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:
அடை செய்து கொடுப்பதன் மூலம், குழந்தைக்கு அனைத்து விதமான சத்துக்களும் ஒன்றாகக் கிடைத்துவிடும்.

Offline MysteRy

உலர் பழ லட்டு



தேவையானவை:
பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - 20, பேரீச்சம்பழம் - 4, பொட்டுக்கடலை, வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப், சாரப்பருப்பு, வெள்ளரிவிதை, உலர்ந்த திராட்சை - 50 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
பாதாம் பருப்பைப் பொடியாக உடைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை கிள்ளி வைக்கவும். பிஸ்தாவையும் உடைத்துக்கொள்ளவும். பேரீச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை, பேரீச்சம் பழம், வேர்க்கடலை, சாரப்பருப்பு, வெள்ளரி விதை உலர்ந்த திராட்சை எல்லாவற்றையும் ஒரு அகலமான பேசினில் போட்டு, வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கெட்டியாகப் பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:
பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு லட்டு சாப்பிட்டால், நாள் முழுவதும் நல்ல எனர்ஜியுடன் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.

Offline MysteRy

மசால் பூரி



தேவையானவை:
ரவை, சோளமாவு - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - 200 கிராம், இஞ்சி பேஸ்ட், புதினா பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மி.லி., வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ரவை, கோதுமை மாவுடன் சோளமாவு, வெண்ணெய், இஞ்சி பேஸ்ட் புதினா, பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  சிறு அப்பள வடிவில் இடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூரிகளாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
சோளமாவு, ரவை சேர்ப்பதால், பூரி மொறுமொறுப்பாக வரும். பூண்டு, இஞ்சி ஜீரண சக்திக்கு நல்லது. மசாலா வாசனையுடன் ருசியாக இருக்கும்.

Offline MysteRy

கேரட்  பாதாம் கீர்



தேவையானவை:
கேரட் துருவல் - 2 கப், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 100 மி.லி., சர்க்கரை - 6 டீஸ்பூன்.

செய்முறை:
பாலை நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரித்து முந்திரிப் பருப்பையும் ஊறவைத்து குங்குமப்பூ, ஏலக்காய் சேர்க்கவும்.  கேரட் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரை சேர்த்து, காய்ச்சிய பாலைக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தலாம். 

குறிப்பு:
குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலும் அப்படியே குடிக்கலாம். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு, இளநீருடன் பாதாம், முந்திரி, கேரட் அரைத்துக் கலந்து கொடுக்கலாம். எனர்ஜி குறையாமல் இருக்கும். 

Offline MysteRy

சுட்டீஸுக்கு வேணும் சத்து!

''5 வயது முதல் 15 வயது வரையிலான பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளைக் கையாளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் எலும்பு, மூளை, தசைகளின் வளர்ச்சிக்கும், உடல் வள‌ர்ச்சிக்கும் மிகவும் முக்கியம்.

  நல்ல சக்தியைக் கொடுப்பதற்கும், உடல் வளர்ச்சிக்கும் புரதம், கால்சியம் சத்துக்கள் தேவை. அரிசி, தானியங்கள், சிறு தானியங்கள், கேழ்வரகு போன்ற பயறு வகைகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாவுச்சத்து உடலில் சேரும்.

  அன்றாட செயல்பாட்டுக்கு எனர்ஜி அவசியம். இது மாவுச்சத்து, கொழுப்பு சத்தின் மூலம் கிடைக்கிறது. தினமும் 4 பாதம், 2, 3 வால்நட் வகைகள், 2-3 விதமான எண்ணெய் வகைகள், சேர்ப்பதன் மூலம் எனர்ஜி கிடைத்துவிடும். 

   எதிர்ப்பு சக்திக்கு உடலுக்கு நல்ல உறுதி தேவை.  இது வைட்டமின்கள், தாது உப்புக்கள் மூலம் பெறலாம். வைட்டமின் டி, உடல் வலுவுக்கும் வைட்டமின் சி, இ ஆன்டி ஆக்சிடன்ட் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் 2, 3 வண்ணப் பழங்கள், 2, 3 வகைக் காய்கறிகள், கீரை வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்க்கவேண்டும்.



வளரும் பிள்ளைகளுக்கு புரதச்சத்து மிகமிக முக்கியம். சைவம், அசைவம் இரண்டிலிருந்தும் புரதம் கிடைக்கிறது. 
காய்கறிகள், பழங்கள், பால், பருப்பு வகைகள் இவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய புரதங்கள் இரண்டாம் தரப் புரதம் தான். அதே அசைவமான முட்டை, மட்டன், சிக்கன், மீன் இவற்றிலிருந்து கிடைப்பது முதல் தரமான புரதச்சத்து. தேவையான அமினோ ஆசிட் அதிகம் கிடைப்பதால், அசைவ உணவிலிருந்து கிடைக்கும் புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும். 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), அந்தந்த வயதுக்கு உரிய உணவுகளில் ஒரு வரைமுறையை வகுத்துத் தந்திருக்கிறது. அதைப் பின்பற்றி வந்தாலே, வருங்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கலாம்

Offline MysteRy

தினம் பழகு

வளர்ச்சிதை மாற்றத்துக்கும், எனர்ஜி அதிகரிக்கவும் விடுமுறையானாலும், பிள்ளைகளை அதிகாலை 6 மணிக்கு எழுந்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். காலையில் எழுந்ததும் 15 முதல் 20 நிமிடங்கள் வார்ம் அப் பயிற்சி பண்ண வலியுறுத்துங்கள்.
   
ஜாக்கிங், சைக்கிள் என விடிகாலை புத்துணர்ச்சியைத் தரக்கூடிய சுத்தமான காற்றை சுவாசிப்பது நல்லது.  இதனால் ஹார்மோன், தசைகள் வலுவாக இருக்கும்.  இந்த 45 நிமிடப் பயிற்சியால், உடலில் நல்ல எனர்ஜி கிடைக்கும். உடல் உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இதனால் நல்ல பசியும் எடுக்க ஆரம்பித்து, நிறைய சாப்பிடத் தோன்றும்.
 
எக்சர்சைஸ் செய்துவிட்டு வந்ததும், நறுக்கிய பழங்கள் ஒரு கப், நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்.



காலை 8 மணிக்கு இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி அல்லது பூரி மசாலா ஏதேனும் ஒரு டிஃபன் கட்டாயம் சாப்பிடவேண்டும். வளரும் குழந்தைகளுக்கு வயிறு நிரம்ப சாப்பிடுவது நல்லதுதான்.

  10 மணிக்கு பழச்சாறு, நீர் மோர், இளநீர் என நீர்ச்சத்து வகைகளை அருந்தக் கொடுக்கலாம்.

  மதியம் ஒரு மணிக்கு சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், ஒரு கீரை, பச்சடி என முழுமையான சாப்பாடு நாள் முழுவதற்குமான எனர்ஜியைக் கொடுக்கும். 

  மாலை 3 மணிக்கு மாம்பழம், சப்போட்டா, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளம் பழம் என ஏதேனும் ஒரு சீச‌னல் பழத்தை சாப்பிட கொடுக்கலாம். 

  சூரியக் கதிர் படும்படி, வியர்வை வழிய  நன்றாக ஓடி ஆடி விளையாட வைத்து, திரும்பியதும் சுண்டல் செய்து தரலாம். 

  இரவு 7 முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொண்டு, தூங்கப் போவதற்கு முன்பு ஒரு பழம் சாப்பிட்டு 10 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும்.