Author Topic: ~ தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்! ~  (Read 3853 times)

Offline MysteRy

சாமைக் காரப் புட்டு



தேவையானவை:
சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

பலன்கள்:
நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

Offline MysteRy

முக்கனிப் பழக்கலவை



தேவையானவை:
மாம்பழம் - 3, வாழைப்பழம் - 5, பலாச்சுளை - 10, தேன் - தேவையான அளவு.

செய்முறை:
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.  பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.

பலன்கள்:
நமது பாரம்பரிய உணவு விருந்தில் முக்கிய இனிப்பு உணவு இவை. பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. .இதயத்தைப் பாதுகாக்கும். மாம்பழமானது ஆண்மையைப் பெருக்கும். அதிகப்படியான உடல் பலத்தைத் தரும். அதில் சூடு அதிகம். அந்தச் சூட்டை, பலாப்பழம் குளிர்ச்சி செய்யும். இந்த மூன்றையும் கலவையாகச் சாப்பிடும்போது, உடல் சமநிலை அடையும்.

Offline MysteRy

வரகு போண்டா



தேவையானவை:
வரகு அரிசி மாவு - 300 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, சின்னவெங்காயம் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. 

செய்முறை:
எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

பனிவரகு கட்லட்



தேவையானவை:
உருளைக்கிழங்கு - 200 கிராம், பட்டாணி, காரட், பீன்ஸ், வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். காரட், பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். நீர்க்க இருந்தால், இதனுடன் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம்.
இதை நீள்வட்ட வடிவத்தில் உருண்டையாகப் பிடித்து கொள்ளவும்.  தீயை மிதமாகவைத்து, முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:
வரகில் புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு நல்ல வலு சேர்க்கும்.

Offline MysteRy

தினைப் பாயசம்



தேவையானவை:
தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும்,  வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.

பலன்கள்:
இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.

Offline MysteRy

சோளப் பணியாரம்



தேவையானவை:
சோளம் - ஒரு கோப்பை, உளுந்து - கால் கோப்பை, வெந்தயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, கல் உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.
மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.

பலன்கள்:
உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும்.   எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை. 

குறிப்பு:
ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

கைகுத்தல் அரிசி இட்லி



தேவையானவை:
கைக்குத்தல் மாப்பிள்ளைச் சம்பா சிகப்பரிசி - ஒரு கிலோ, கறுப்பு உளுந்து - 200 கிராம், வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளாவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். உளுந்தைத் தோல் நீக்காமல், அப்படியே அரைக்க வேண்டும். மறுநாள், வழக்கம்போல இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

பலன்கள்:
வைட்டமின் 'பி’, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் உண்டு. கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்துடன், வைட்டமின் 'பி 1 உண்டு. பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி.

குறிப்பு:
மாப்பிள்ளைச் சம்பாவுக்குப் பதிலாக, தினை அரிசி சேர்த்துச் செய்தால் தினை இட்லி. ஆனால், எதுவானாலும் உளுந்தைத் தோலோடுதான் அரைக்க வேண்டும். இந்த இரண்டு இட்லிகளையுமே சூடாகச் சாப்பிட வேண்டும். ஆறினால் விரைத்துவிடும். மீண்டும் சுடவைத்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

Offline MysteRy

தினை அதிரசம்



தேவையானவை:
தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.

பலன்கள்:
வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.

Offline MysteRy

குதிரைவாலி வெண்பொங்கல்



தேவையானவை:
குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.

பலன்கள்:
சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

Offline MysteRy

சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)



தேவையானவை:
சாமை அரிசி - 500 கிராம், நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம், வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு, தயிர் - அரைக் கோப்பை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.லி., கிராம்பு - 5, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

செய்முறை:
கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும். 

பலன்கள்:
நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.

Offline MysteRy

தினை



10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினையும் ஒன்று. தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.

Offline MysteRy

குதிரைவாலி



மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் - இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

Offline MysteRy

கம்பு 



அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு.  அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.

Offline MysteRy

சோளம்



அமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

Offline MysteRy

வரகு



பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.