சிக்காமல் பறக்கும்
சோற்றுப் பருக்கைகளுக்குப் பின்னால்
சுற்றிவரும் இவர்களுக்கு
புல்நுனிமேல் அமரும்
பட்டாம்பூச்சிகளை பிடிக்க நேரமேது
கண்ணீர் வெள்ளத்தில் இருந்து
கரையேற துடிக்கும் இவர்களுக்கு
மழைநீரில் காகிதக்கப்பல் விட
நேரம் ஏது
வாழ்க்கை இவர்களுடன்
கண்ணாமுச்சி ஆடும்போது
இவர்கள் எப்படி
கண்ணாமூச்சி விளையாடுவார்கள்
பூக்களை ஏற்ற வேண்டிய இந்த
மெல்லிய காம்புகளில்
வாழ்க்கையின் பாரத்தை
ஏற்றியது யார்
பென்சிலை பிடிக்க வேண்டிய
சின்னஞ்சிறு விரல்களில்
தீக்குச்சிகள்
எதிர்கால ஒளிவிளக்குகள் என
மினுமினுக்கும் வார்த்தைகள் பேசுபவர்களே
இவர்கள் நிகழ்காலமே
கரிந்து போவது உங்கள்
கண்களுக்கு தெரியவில்லையா
வருடம் தவறாமல்
குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே
தினத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு
என்று
குழந்தைகளை கொண்டாடப்போகிறிர்கள்