அரை டிராயர் வயதினிலே
உதட்டின் மேல் அமர மறுக்கும்
அரும்பு மீசை மேல் காதல்
மீசை முளைத்ததும்
எதிர் வீட்டு போர்ஷனில்
இளம்வயது பெண்ணாக
யார் வந்தாலும் காதல்
பள்ளியை முடித்தபின்
காலேஜின் மேல் காதல்
காலேஜில் நுழைந்தபின்
காலேஜின் காம்பொண்டின்
குட்டிச்சுவர் மேல் காதல்
நண்பர்கள் மத்தியில்
நாயகனாய் தெரிந்திட
நாலைந்து பெண்களுடன்
நாடகமாய் காதல்
நிஜமாக காதலிக்க
நங்கை ஒருத்தி வந்தபின்
இல்லற வாழ்க்கை மேல்
இனிப்பாக ஒரு காதல்
அழகிய ரோசாப்பூ மேல்
என்றென்றும் காதல்
ரோசாப்பூ வைத்தவள் மேல்
அவ்வப்போது காதல்
சொகுசுகளின் மேல் காதல்
சொத்துகளின் மேல் காதல்
பணத்தின் மேல் காதல்
பதவியின் மேல் காதல்
பத்துப் பேர் சுற்றி நின்று
பாராட்டும் புகழின் மேல் காதல்
காதல் கதை
இத்துடன் முடிகிறதா
அது தான் இல்லை
தூங்காமல் விழித்திருந்து
தேடி எல்லாம் கிடைத்திடினும்
என்றோ தொலைத்திட்ட
தூக்கத்தின் மேல் தீராத காதல்
ஆகாய விமானத்தில்
அடிக்கடி போனாலும்
எப்போதோ மறந்திட்ட
ரெட்டை மாட்டுவண்டி பயணத்தில்
இப்போதும் ரகசியமாய் காதல்
அடுக்கு மாடி வீடு
ஆறேழு இருந்தாலும்
ஆத்து மணல் வீட்டின் மேல்
அடங்காத காதல்
இது முடியாத காதல் கதை
முற்றுப் பெறாத காதல் கதை