Author Topic: ~ 30 வகை கிராமிய சமையல்! ~  (Read 4246 times)

Offline MysteRy

~ 30 வகை கிராமிய சமையல்! ~
« on: January 04, 2014, 02:05:06 PM »
ராகி குலுக்கு ரொட்டி



தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கேழ்வரகு மாவை லேசாக வறுத்து... பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #1 on: January 04, 2014, 02:06:34 PM »
குழாப்புட்டு



தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, முந்திரி - 8, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
 பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்.  நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து... மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கல வையை வைத்து அடைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து... நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #2 on: January 04, 2014, 02:08:40 PM »
மாப்பிள்ளை சொதி



தேவையானவை:
பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,  சின்ன வெங்காயம் - 12, தேங்காய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங் காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:
திருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது இதை செய்து பரிமாறுவார்கள். இதனை இடி யாப்பத்தின் மீது ஊற்றி சாப்பிட்டால்... அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #3 on: January 04, 2014, 02:10:33 PM »
நெல்லிக்காய் துவையல்



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு. 

செய்முறை:
பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #4 on: January 04, 2014, 02:11:55 PM »
கேழ்வரகு இனிப்பு அடை



தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந் திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #5 on: January 04, 2014, 02:13:10 PM »
இஞ்சி துவையல்



தேவையானவை:
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து நறுக் கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - அரை கப்,  புளி - சிறிதளவு, உளுத்தம் பருப்பு (வறுக்க) - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு (தாளிக்க) - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
துவையலை அம்மியில் அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரண சக்தியை அதி கரிக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #6 on: January 04, 2014, 02:14:36 PM »
கலவை தானிய உருண்டை



தேவையானவை:
கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கப், சர்க்கரை - இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், நெய் - அரை கப்.

செய்முறை:
தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).
புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #7 on: January 04, 2014, 02:16:38 PM »
பிடிகருணை குழம்பு



தேவையானவை:
பிடிகருணை - 200 கிராம், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - 2, புளி - எலுமிச்சை அளவு,  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வடகம், வெல்லம் - சிறி தளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிடிகருணையை மண் போக கழுவி, வேக வைத்து, தோலு ரித்து, வட்டம் வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... துண்டுகளாக்கிய பிடிகருணையை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றிச் சாப் பிட... சுவை அள்ளும்!

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #8 on: January 04, 2014, 02:18:18 PM »
புளியந்தளிர் பருப்புக் கூட்டு



தேவையானவை:
புளியந்தளிர் - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: குழம்பு வடகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை:
 துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ள வும்.
வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கல வையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #9 on: January 04, 2014, 02:20:02 PM »
கமகம கமர்கட்



தேவையானவை:
தேங்காய் துருவல் - 2 கப், பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - சிறிதளவு.

செய்முறை:
வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க... கமகம கமர்கட் தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #10 on: January 04, 2014, 02:21:28 PM »
இனிப்பு இட்லி



தேவையானவை:
புழுங்கல் அரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூள் செய்த கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - சிறிதளவு, ஆப்ப சோடா, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியே ஊற வைத்து, உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, இரண்டையும் ஒன்றுசேர்த்து, சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து நன்கு புளிக்க வைக்கவும். பிறகு, மாவில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள், ஆப்ப சோடா, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியில் சிறிது நீர் சேர்த்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக்கி அப்படியே மாவில் சேர்க்கவும். இதை நன்கு கலந்து இட்லித்தட்டில் ஊற்றி இட்லிகளாக வார்க்கவும்.
குறிப்பு: கருப்பட்டிபாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக் கொள்ளுமென்பதால், மாவு அரைக்கும்போது சற்று கெட்டியாக இருப்பது அவசியம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #11 on: January 04, 2014, 02:23:03 PM »
மரவள்ளிக்கிழங்கு பாயசம்



தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், நெய்யில் வறுத்த முந்திரி - 8, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - ஒரு கப்.

செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி  மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி... தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #12 on: January 04, 2014, 02:24:31 PM »
புழுங்கலரிசி ஆவி உருண்டை



தேவையானவை:
புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், நல்லெண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக் கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப் பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை  உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #13 on: January 04, 2014, 02:26:24 PM »
வேர்க்கடலை  சின்ன வெங்காய சட்னி



தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், சின்ன வெங்காயம் - 10, புளி - சிறிதளவு,  பூண்டு - 4 பல், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... வேர்க்கடலை, சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் கொத்தமல்லித் தழை, உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கிராமிய சமையல்! ~
« Reply #14 on: January 04, 2014, 02:28:05 PM »
நாரத்தை இலை ரசம்



தேவையானவை:
 நாரத்தை இலை - 6, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 4 பல், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
நாரத்தை இலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 கப் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.