Author Topic: ~ ஆறாம் திணை--பெண்ணுக்கு மிக அவவசியம் சீரான உணவு ~  (Read 1008 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227427
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆறாம் திணை--பெண்ணுக்கு மிக அவவசியம் சீரான உணவு


''ஏட்டி, பாப்பா அழுது பாரு... அவ விளையாட அந்தச் செப்புச் சாமான்களை எடுத்துப்போடு!’ என்று அங்கணாக்குழியின் அருகில் அமர்ந்து பாத்திரம் விளக்கிக்கொண்டே சொல்லும் பாட்டியின் குரல், இன்னும் தமிழகத்தில் ஆங்காங்கே லேசுபாசாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.  பாட்டி வீட்டில் பெண் குழந்தைகள் விளையாட ஓலைப் பெட்டி ஒன்றில் செப்புச் சாமான்கள் போட்டு வைத்திருப்பார்கள். மரப்பாச்சி, தொட்டில் கம்பு, கோலாட்டக் கம்பு, தலைச்சவுரி, விரலி மஞ்சள் என விதவிதமாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், பார்பி டால்களைக் கொஞ்சி டெடி பியர்களை அணைத்துக்கொண்டு தூங்கும் 'ஜென் எக்ஸ்’ குழந்தைகளுக்கு அதன் அழகு, வண்ணம், மென்மை தாண்டி வேறு எதுவும் தெரியாது. செப்புச் சாமான் சொல்லிக்கொடுத்த வாழ்வியலை, பார்பி பொம்மைகள் நிச்சயம் கற்றுத் தராது.  ஒல்லி இடுப்புடன் (ஸ்லிம் உணவுப் பொருட்கள் உடற்பயிற்சிக் கருவி வணிகம்), விதவித சாயங்களுடன் (அழகு சாதனப் பொருள் விற்பனை), 'எண்ணெயில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருப்பது (அழகு நிலைய வர்த்தம்) பெண்ணுக்கு அழகு’ என நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை அந்த பார்பி பொம்மைகள்.



இந்த 'ஸ்லிம் பியூட்டி’ எண்ணத்தை நம் ஊர் பெண்களிடம் மட்டுமல்ல; மரபிலேயே குண்டாக, ஆரோக்கியமாக இருக்கும் ஆஃப்ரிக்க பெண்கள், நியூசிலாந்து பெண்கள் மனதினுள்ளும் விதைத்தது பார்பிக்கள். பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகளை ரோல் மாடலாக்கி, மெல்லிடை உடம்புக்காக, 'பசிக்கலை; பிடிக்கலை’ என்று சாக்குப் போக்குச் சொல்ல வைத்ததால், வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு உண்டான  நோய்கள் ஏராளம்! 
Polycystic ovary, Anorexia nervosa, irritable bowel syndrome போன்ற வயிறு, குடல், மனம், சினைப்பை சார்ந்த நோய்கள் பெண்களிடையே பெருகுவதை, இந்தப் பொம்மையின் உளவியலோடு ஒப்பிடும் ஏராள ஆய்வு முடிவுகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
அன்று அந்தச் செப்புச்சாமான் விளையாட்டுதான் பாரம்பரிய மருத்துவ உணவு மரபை, பாட்டி வைத்தியத்தை வழிவழியாகக் கடத்தியும் காப்பாற்றியும் வைத்திருந்தது. அதே சமயம் அந்தக் காலங்களில் பெண்ணின் உடல் நலம் பெரும்பாலும் தாம்பத்ய உறவுக்கும், குழந்தை பேறுக்கும், வீட்டின் பெரியோர், கணவன், குழந்தைகள், உறவு, விருந்தினர் கூட்டத்தைப் பேண மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டியது என்ற ஆணாதிக்கத்துடன் பார்க்கப்பட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
ஆனால், இன்று நிலைமை வேறு! முன்னர் மாதவிடாய் நாட்களில் 'தீட்டு’ காரணம் சொல்லி ஒதுக்கி வைக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்களை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி, அத்தைமார்கள். ஆனால், இன்றோ  'மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்றே பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. 'அந்த நாளிலும் நான் ஆறு செட் டென்னிஸ் விளையாடுவேன்’ என்ற விளம்பரம் தன்னம்பிக்கை கொடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கினை வாங்குவதற்கான தூண்டுகோலே தவிர, பெண்ணின் உடல் நலம் மீதான கரிசனமல்ல! இப்போதெல்லாம் உதிரப்போக்கு வேதனையைத் தாங்கும் உடல் வன்மையை பெண்களுக்கு அளிக்கும் உணவைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஆணுடன் ஓடியாடி உழைத்தாக வேண்டிய காலத்தில் பெண்ணுக்கென பிரத்யேக உணவு குறித்த அறிவு நசுங்கிக்கொண்டே வருகிறது.
நவீனம் சொல்லும் தொலி உளுந்து, சோயா, பப்பாளி மட்டும்தான் பெண்ணுக்கா? நிச்சயம் இல்லை! பெண்களின் உடல் நலத்துக்கு என பல ரெசிபிக்கள் நம் மரபிலேயே இருக்கின்றன. பெண்ணுக்குத் தேவையான பிரத்யேக புரதங்கள் நிறைந்த பருப்பு உசிலி, அதில் ஒன்று. எந்தக் காய்கறியிலும் இந்த உசிலியைச் சேர்த்து தயாரிக்க முடியும். குறிப்பாக, கொத்தவரை - பீன்ஸ் ஜோடி ஹிட். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் மட்டும் ஊற வைத்து, கொஞ்சம் பெருங்காயம், மிளகாய் உப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வானலியில், கடுகு உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்போது இந்தப் பருப்பு விழுதை வதக்கி வேக வைத்து, அதன்பின் காய்கறிகளைச் சேர்த்துத் தயாரியுங்கள். பருப்பு உசிலி பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு! 



நாம் மறந்துபோன காய்களில் ஒன்று அத்திக்காய். துவர்ப்புத் தன்மையுள்ளது இந்தக்காய். அதிக நார், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்களும் உள்ளது இதன் கனி. காயவாகவும் கனியாகவும் சாப்பிடக்கூடிய  அத்தியின் பயன் குறித்து, நம் ஊர் சித்த மருத்துவமும், each man has its own wine and a fig tree என பைபிளும், அப்போலோ கடவுள் கிரேக்க இலக்கியத்திலும்கூடச் சொல்லப்பட்ட தொன்மையான கனி இது. பெண் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய கனி. மாதவிடாய்க்கு முந்தைய நாளில் திடீரென வரும் மூக்கடைப்பு, தும்மலுக்குச் சித்த மருத்துவம் சொல்லும் மருந்து அத்திக்காய் பச்சடி.
வாழைப் பூவைச் சமைப்பது கஷ்டம் என்பதால், கிட்டத்தட்ட அதைத் தவிர்த்தே விட்டோம். ஆனால், இளம்பெண் குழந்தைகளில் மாதவிடாய் தொடக்கக் காலத்தில் வரும் அதிக ரத்தப்போக்குக்கு, வாழைப் பூத் துவரம், உணவாகும் மருந்து. வாழைப் பூ வடகம் செய்து காயவைத்தும் கொடுக்கலாம்.
11 முதல் 45 வயது வரை மாதவிடாய்க் காலங்களில், இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து என நவீன அறிவியல் பரிந்துரைக்கும் உணவியல் கூற்றுடன் பித்தம் சீராக்கும் உணவும் பெண்ணுக்கு மிக அவவசியம். இன்று பெருகும் 'பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி வராது தடுக்க, குழந்தைப் பருவம் முதலே சரியான உணவுதான் மிகமிக அவசியம். பல குழந்தைகளுக்கு துவர்ப்பும் கசப்பும் பிடிக்காத சுவையாக மாறி வருகின்றன. வெறும் இனிப்பும், கூடுதல் எண்ணெயில் பொரிப்பும் மட்டுமே குழந்தையின் பிடிப்பாகவும் ஆகி வருகின்றன. இரண்டுமே, பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி பெருக அடித்தளம் அமைக்கும். அதிகபட்ச மருத்துவக் குணமுள்ள, துவர்ப்பு, கசப்பு சுவையுள்ள காய்கனிகளைப் பழக்கினாலே பல வியாதிகளை நம்மால் விரட்ட முடியும். 
இவற்றையெல்லாம், இத்தனை நாள் சொல்லித்தந்த பாட்டிகளுடனான பேச்சுவார்த்தை 'பாட்டி டே’ கொண்டாட்டங்களின் போது மட்டுமே அரங்கேறும்போல. 
மரபுகள் தானாக மாறவில்லை, நாம்தான் தொலைக்கிறோம். சில சமயம் திட்டமிட்டு; சில நேரம் திருடப்பட்டு!