Author Topic: ~ பாரம்பரிய தீபாவளி லேகியம் ~  (Read 631 times)

Offline MysteRy

பாரம்பரிய தீபாவளி லேகியம்



தேவையானவை:
திப்பிலி, ஏலக்காய், கிராம்பு - தலா 5 கிராம், மிளகு, சீரகம், கொத்துமல்லி, சுக்கு, தேசாவரம், தேன் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, அரத்தை - 2 துண்டு, ஓமம், நெய் - 2 டீஸ்பூன், சாதிக்காய் - சிறு துண்டு, கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அரத்தை, சுக்கு இரண்டும் கடினமாக இருப்பதால், நன்கு தட்டிக்கொள்ள வேண்டும். (சுக்குத் துண்டுக்குப் பதில் சுக்குப் பொடியும் உபயோகிக்கலாம்). இவை எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு நன்கு கொதிக்கும் வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு, எல்லாப் பொருட்களும் மிருதுவாகிவிடும். பிறகு மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதுக்கு சமமாக, கருப்பட்டி அல்லது வெல்லம் எடுத்துத் தட்டிக்கொள்ளவும். கருப்பட்டி என்றால் அப்படியே போடலாம். வெல்லம் என்றால், லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, தூசியை வடிகட்டி, ஊற்றிக்கொள்ளவும். இனிப்புக்கு, பாதி அளவு வெல்லமும் மீதி அளவுக்கு, தேன் சேர்த்தும் லேகியம் கிளறலாம்.
அடுப்பில் கடாயை வைத்து, நல்லெண்ணெய், நெய் விட்டு, சூடானதும் அரைத்த விழுது, கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் சேர்த்துக் கிளறவும். கைவிடாமல் கிளறும்போது, அடிபிடிப்பது போல் இருந்தால், இன்னும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
எல்லாம் வெந்து, எண்ணெய் பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். பாதி அளவு தேன் சேர்ப்பதாக இருந்தால், அடுப்பை அணைத்த பிறகு சேர்த்துக் கிளறிவிட வேண்டும். ஆறியதும் இந்த லேகியத்தை, ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு வைத்து, காற்று நுழையாமல் மூடிவைக்கவும். நான்கு, ஐந்து மாதங்களுக்கு நன்றாக இருக்கும்.
தீபாவளி அன்று அதிகாலையில், எண்ணெய்க் குளியல் முடிந்த பிறகு, வெறும் வயிற்றில் இந்த லேகியத்தை, சுண்டைக்காய் அளவு உருண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிடவேண்டும். பிறகு எந்த வகை இனிப்பானாலும் காரமானாலும் எண்ணெய்ப் பலகாரமென்றாலும் அவற்றால் வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் இல்லாமல் நன்றாக ஜீரணமாகிவிடும்.

பலன்கள்:
செரிமானத்துக்கு அருமருந்து. இது குளிர்காலம் என்பதால், வயிறு பசி எடுக்காமல் மந்தமாக இருக்கும். அதைப் போக்கி, நல்ல பசியைத் தூண்டச் செய்யும்.