Author Topic: 30 வகை ஊறுகாய்  (Read 2538 times)

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #15 on: October 08, 2013, 10:09:27 AM »
ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் - 20, எள் - 2 டீஸ்பூன், சோம்பு அல்லது சீரகம் - 2 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும் பிறகு சீரகம் - எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். 2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு பயன்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #16 on: October 08, 2013, 10:09:45 AM »
எலுமிச்சை விழுது ஊறுகாய்

தேவையானவை: உப்பில் ஊறிய எலுமிச்சை துண்டுகள் - ஒரு கப், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: நன்றாக உப்பில் ஊறிய எலுமிச்சை துண்டுகளை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு வறுத்து, அரைத்த எலுமிச்சை விழுதைக் கொட்டவும். மஞ்சள்தூள் சேர்த்து, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #17 on: October 08, 2013, 10:10:01 AM »
கடாரங்காய் ஊறுகாய்

தேவையானவை: கடாரங்காய் துண்டுகள் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாரங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு ஜாடியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு வாரம் ஊற விடவும். நன்றாக ஊறியதும், மிளகாய்த்தூள் போட்டு, எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மேலாக ஊற்றி, கிளறிப் பயன்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #18 on: October 08, 2013, 10:10:24 AM »
பேரீச்சம்பழ ஊறுகாய்

தேவையானவை: பேரீச்சம்பழத் துண்டுகள் - ஒரு கப், முழு நெல்லிக்காய் துருவல் - அரை கப், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் நன்றாகக் கலந்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி வெயிலில் 5 நாட்கள் வைக்கவும். தினமும் எடுத்து ஒரு முறை கிளறி விடவும். நன்றாக அல்வா பதம் வந்ததும் உலர்ந்த பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் 6 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #19 on: October 08, 2013, 10:10:42 AM »
மிளகாய்பழ ஊறுகாய்

தேவையானவை: பழுத்த பச்சை மிளகாய் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிளகாய்ப்பழத்துடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதைப் போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #20 on: October 08, 2013, 10:10:59 AM »
புளியங்காய் இடித்த கார ஊறுகாய்

தேவையானவை: புளியங்காய் - 10, பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியங்காயுடன் உப்பு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் போட்டு கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் இடித்து வைத்துள்ள புளியங்காய், வெந்தயத்தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #21 on: October 08, 2013, 10:11:14 AM »
ஆவக்காய் ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் - 12 (மாங்காயைக் கழுவி, துணியால் துடைத்து கொட்டையுடன் நான்கு துண்டுகளாக நறுக்கவும்), மிளகாய்த்தூள், கடுகுத்தூள், உப்பு - தலா 400 கிராம், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அதில் முதலில் மிளகாய்த்தூள், பிறகு கடுகுத்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டுக் குலுக்கி, பிறகு துண்டுகள் மூழ்கும் வரை நல்லெண்ணையை ஊற்றவும். ஒரு வாரம் ஊறியதும் எடுத்துப் பயன்படுத்தலாம்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #22 on: October 08, 2013, 10:11:31 AM »
முழு எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: சிறிய எலுமிச்சம்பழம் - 10, வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை கப், கடுகு, பெருங்காயம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழங்களை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை பழங்கள் மூழ்கும் அளவுக்கு விட்டு மூடவும். 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து, கத்தியால் நான்காக கீறி, உப்பு, மிளகாய்தூள், வெந்தயத்தூள் கலந்து அடைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். ஒரு வாரம் கழித்து உபயோகப்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #23 on: October 08, 2013, 10:11:48 AM »
கடுகு-எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சை துண்டுகள் - 2 கப், கடுகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு ஜாடியில் போட்டு, மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணை விடவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தலாம்.


Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #24 on: October 08, 2013, 10:12:04 AM »
மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையானவை: மாகாளிக் கிழங்கு - ஒரு கப், எலுமிச்சம்பழம் - 1, இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாகாளிக்கிழங்கை தோல் சீவி நடுவில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சித் துண்டுகள், உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, ஒரு வாரம் ஊற விடவும். பிறகு தயிர் சேர்த்துப் பயன்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #25 on: October 08, 2013, 10:12:21 AM »
கார நார்த்தங்காய் ஊறுகாய்

தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய், வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பொடியை நார்த்தங்காய் துண்டுகளின் மேல் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஊறியதும் பயன்படுத்தவும்.
இந்த ஊறுக்காய் தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #26 on: October 08, 2013, 10:12:41 AM »
வடு மாங்காய்

தேவையானவை: ருமானி (அ) கிளிமூக்கு பிஞ்சு மாங்காய் - 2 கப், கடுகு, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காயை நன்றாகக் கழுவி, துடைத்து, விளக்கெண்ணெயை தடவவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, ஜாடியில் போட்டு வைக்கவும். இரண்டு நாளுக்கு ஒரு முறை குலுக்கி விடவும். நன்றாக ஊறியதும் உபயோகப்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #27 on: October 08, 2013, 10:13:00 AM »
பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகு - 2 கப், இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து, பாட்டிலில் போட்டு, ஒரு வாரம் நன்றாக ஊற விடவும். பிறகு பயன்படுத்தவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #28 on: October 08, 2013, 10:13:19 AM »
வெந்தய மாங்காய் ஊறுகாய்

தேவையானவை: தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 2 கப், வெந்தயத்தூள் (கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீவி வைத்துள்ள மாங்காய்த் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். லேசாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கிளறி ஆற வைத்து, ஜாடியில் போட்டு வைக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ஊறுகாய்
« Reply #29 on: October 08, 2013, 10:13:39 AM »
உப்பு நார்த்தங்காய்

தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 4 கப், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, 3 நாட்கள் ஊற விடவும். நாலாம் நாள் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். மாலை ஜாடியில் உள்ள தண்ணீரில் போடவும். இது போல ஒரு வாரம் செய்து, எடுத்து ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
நார்த்தங்காயை சுருள் சுருளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம.