புறநானூறு, 229. (மறந்தனன் கொல்லோ?)
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================
ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?
அருஞ்சொற்பொருள்:-
ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி
அழல் = நெருப்பு, தீ
குட்டம் = கூட்டம்
அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம்
ஆர் = நிறைந்த
அரை = பாதி
அரையிரவு = நடு இரவு
முடம் = நொண்டி
முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.)
முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை)
கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய
உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள்
தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம்
நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்)
ஏர்தல் = எழுதல்
தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம்
பாசி = கிழக்கு
தூசி = வடக்கு
முன்னுதல் = படர்ந்து செல்லுதல்
அளக்கர் = கடல்
திணை = பூமி
கனை = ஒலி
கால் = காற்று
எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து
மடிதல் = வாடுதல்
பரத்தல் = அலமருதல் (கலங்குதல்)
பரிதல் = ஒடிதல்
உலறுதல் = சிதைதல் (முறிதல்)
கதி = குதிரை நடை
வைகல் = தங்கல்
ஆயம் = கூட்டம்
பிணிதல் = சாதல்
மணி = நீலமணி
மாயோன் = திருமால்
இதன் பொருள்:-
ஆடுஇயல்=====> அழுவத்து
ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன.
தலைநாள்மீன்=====> விளக்காக
அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக,
கனைஎரி=====> இல்லென
பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது”
அழிந்த=====> உலறவும்
என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது.
கால்இயல்=====> மாஅ யோனே?
காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?
பாடலின் பின்னணி:-
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.