Author Topic: ~ புறநானூறு ~  (Read 114944 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #210 on: November 16, 2013, 09:04:56 PM »


புறநானூறு, 211. (நாணக் கூறினேன்!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று

அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்

கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்

ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து

முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

மரபு = இயல்பு
புயல் = மழை பெய்தல்
ஏறு = பெரிய இடி
அரவம் = பாம்பு, ஓசை
அணங்குதல் = அஞ்சுதல்
துமிதல் = வெட்டப்படுதல்
மிளிர்தல் = பிறழ்தல்
தூஎறியும் = தூவ எறியும்
தூவல் = சிந்தல், சிதறல்
தலைச் சென்று = மேற்சென்று
அரைசு = அரசு
உரை = புகழ்
சால் = மிகுதி, நிறைவு
தோன்றல் = அரசன்
உள்ளி = நினைத்து
கொள்ளா = ஏற்றூ கொள்ளாத
மன்ற = நிச்சயமாக
புறநிலை = வேறுபட்ட நிலை
நுணங்குதல் = நுண்மையாதல்
ஆடு = வெற்ற
வியன் = அகன்ற
பழிச்சுதல் = வாழ்த்துதல்
வைகல் = நாள்
வல்சி = உணவு
வயின் = இடம்
மடிதல் = சாதல்
வரைப்பு = எல்லை
வாள்நுதல் = ஒளிபொருந்திய நெற்றி
படர்ந்து = நினைத்து

இதன் பொருள்:-

அஞ்சுவரு=====> தலைச்சென்று

அச்சம் தரும் இயல்புடைய பெருமழை பெய்யும்பொழுது, இடியோசைக்கு அஞ்சும் பாம்பின் தலையைப் பிளக்கும் பெரிய இடிபோல் உன் முரசு ஒலிக்கிறது. மற்றும், உன் முரசின் ஒலியைக் கேட்டு, நிலத்தை நிமிர்ந்து நின்று பார்ப்பதுபோல் உயர்ந்து நிற்கும் நெடிய மலைகள் அதிர்கின்றன; சிறிய குன்றுகள் சிதறுகின்றன. அத்தகைய முரசின் முழக்கத்தோடு சென்று,

அரைசு=====> முன்னாள்

வேந்தர்கள் பலரையும் எதிர்நின்று கொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளல் தன்மை உடையவனாதலால், என்னை வணங்கி, எனக்குத் தகுந்த பரிசு அளிப்பாய் என்று உன்னை நினைத்து வந்த உயர்ந்த பரிசிலன் நான். என் போன்ற புலவர்களை ஏற்றுக்கொண்டு, எமக்குப் பரிசளிக்காதவர்களின் கொடிய செயல்களைச் சொல்லக் கேட்டும், நீ நினைத்ததை நீ நிச்சயமாகச் செய்து முடித்தாய். முதல் நாள்,

கையுள் ளதுபோல்=====> கொண்டநின்

பரிசிலை எனக்குக் கொடுப்பதுபோல் காட்டிப் பின்னர் அது இல்லாதவாறு நீ செய்ததை நினைத்து நான் வருந்துவதற்கு நீ வெட்கப்படவில்லை. நீ வெட்கப்படும் வகையில், நான் நுணுக்கமாக ஆய்வுசெய்து, என் செவ்விய நாக்கு வருந்துமாறு, நாள்தோறும், உன்னைப் புகழ்ந்து பாடப்பாடக் கேட்டு மகிழ்ந்தாய்.

ஆடுகொள்=====> படர்ந்தே

வெற்றி பொருந்திய அகன்ற மார்பையுடைய உன்னை வாழ்த்துகிறேன். நாள்தோறும், உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. அத்தகைய பழைய சுவர்களையுடைய வீட்டில் என் மனைவி வாழ்கிறாள். பலமுறை சுவைத்தும் என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் மகன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். அத்தகைய வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து நான் செல்கிறேன்.

பாடலின் பின்னணி:-

சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெற விரும்பிச் சென்ற பெருங்குன்றூர் கிழார் அவன் அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவன் அவருக்குப் பரிசு அளிக்காமல் காலம் கடத்தினான். அவர், அவன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடினார். அவன் அவருடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான். அவன் பரிசு கொடுப்பதுபோல் சிலசெயல்களைச் செய்தான். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஆனால், பரிசு கொடுக்காமல் அவன் தன்னை ஏமாற்றுவதை அவர் உணர்ந்தார். இனி, சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெறுவதற்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தார். ”உன்னிடம் பரிசில் பெறலாம் என்று எண்ணி வந்தேன்; உன்னைப் புகழ்ந்தேன். நான் பாடிய படல்களை நீ விரும்பிக் கேட்டாய். பரிசு கொடுக்காத பிறருடைய கொடிய செயல்களையும் கூறினேன். ஆனால், நீ பரிசு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாய். உண்ண உணவில்லாததால், என் வீட்டின் பழைய சுவர்களைப் பல இடங்களில் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் புதல்வன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். நான் என் மனைவியை நினைத்து அவளிடம் செல்கிறேன். நீ வாழ்க!” என்று கூறிப் பெருங்குன்றூர் கிழார், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம்இருந்து விடை பெற்றுச் சென்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #211 on: November 16, 2013, 09:07:45 PM »
புறநானூறு, 212. (யாம் உம் கோமான்?)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பாடாண்
துறை: இயன்மொழி.
==========================

நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்

யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நக்கே

அருஞ்சொற்பொருள்:-

களமர் = உழவர்
அரித்த = வடித்த
வெம்மை = விருப்பம்
புழுக்கு = அவித்தது
ஆர்தல் = உண்டல்
காமம் = ஆசை
வீடல் = விடுதல்
ஆரல் = ஒருவகை மீன்
சூடு = சுடப்பட்டது
கவுள் = கன்னம்
வைகுதல் = இருத்தல்
மடிதல் = முயற்சி அற்றுப்போதல்
யாணர் = புது வருவாய்
பைதல் = துன்பம், வருத்தம்
கோழியூர் = உறையூர்
பொத்து = குற்றம், குறை
கெழீஇ = பொருந்தி
வாயார் = வாய்மை அமைந்த
நக்கு = மகிழ்ந்து

இதன் பொருள்:-

நுங்கோ=====> விழவின்

“உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன் கோப்பெருஞ்சோழன். உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, விரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு, வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடு.

யாணர்=====> நக்கே

அத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன். அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

பாடலின் பின்னணி:-

பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன். அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #212 on: November 16, 2013, 09:09:51 PM »
புறநானூறு, 213. (நினையும் காலை!)
பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
==========================

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்

அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்

ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால் அன்னது ஆதலும் அறிவோய், நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்

நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்து
எழுமதி; வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு

ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

அருஞ்சொற்பொருள்:-

மண்டு = மிகுதி, செறிவு
அமர் = போர்
அட்ட = வென்ற
மதன் = மிகுதி
நோன் = வலிமை
தாள் = முயற்சி
விறல் = வெற்றி
கெழு = பொருந்திய
உடுத்த = சூழ்ந்த
மலர்தல் = விரிதல்
துப்பு = வலிமை
அமர் = போர்
வெம்மை = விருப்பம்
அடுதல் = வெல்லுதல், கொல்லல்
மான் = விலங்கு (யானை)
தோன்றல் = அரசன்
மற்று = அசைச் சொல்
தாயம் = அரசுரிமை
வெய்யோய் = விரும்புபவன்
காட்சி = அறிவு
செல்வன் = அரசன்
உலைவு = தோல்வி
இகழுநர் = பகைவர்
அத்தை = அசை
மறன் = மறம் = வீரம், வெற்றி, போர்
தில் = விழைவுக் குறிக்கும் அசைச்சொல்
மதி = முன்னிலை அசைச்சொல்
ஏமம் = பாதுகாப்பு
ஆன்றவர் =அமரர்
விதும்பல் = ஆசைப்படுதல்

இதன் பொருள்:-

மண்டுஅமர்=====> அல்லர்

மிகுந்த வலிமையோடும் முயற்சியோடும் பகைவர்களைப் போரில் கொன்று, வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே! கடல் சூழ்ந்த, பரந்த இவ்வுலகில், உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால், அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைகொண்ட வலிமையுடைய சேரரோ பாண்டியரோ அல்ல.

அமர்வெங்=====> பின்னும்

போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப் பகைவன் அல்லன் என்பது அவர்களுக்குத் தெரியும். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவ! பெரும்புகழை அடைந்து, நீ தேவருலகம் சென்ற பிறகு,

ஒழித்த=====> தோற்பின்

உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே? அவ்வாறு ஆதல் நீ அறிவாய். நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே! உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும் இல்லாத உன் மக்கள் தோற்றால்,

நின்பெரும்=====> அழிந்தோர்க்கு

உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? போரை விரும்பும் அரசே! நீ அவரிடம் தோற்றால் உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ்வார்கள். மற்றும், பழிதான் மிஞ்சும். அதனால், போரை விடுத்து விரைவில் புறப்படுவாயாக.

ஏமம்=====> கொளற்கே

அஞ்சுபவர்களுக்குப் பாதுகாப்பாக உனது நிழல் இருக்கட்டும். பெறுதற்கரிய விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று, விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ விரும்பினால், நல்ல செயல்களை மனம் மயங்காமல் செய்ய வேண்டும். உன் உள்ளம் வாழ்வதாக.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாகப் போர் மூண்டது. அச்சமயம், புல்லாற்றுர் எயிற்றியனார், ”உன்னோடு போருக்கு வந்திருப்போர் சேரனோ பாண்டியனோ அல்லர். நீ இறந்த பிறகு உன் நாட்டை ஆளும் உரிமை பெறப்போகிறவர்கள் இப்போது உன்னோடு போரிட வந்திருக்கும் உன் புதல்வர்கள்தானே? போரில் உன் புதல்வர்கள் தோற்றால் உன் பெருஞ்செல்வத்தை யாருக்குத் தரப்போகிறாய்? நீ போரில் தோற்றால் பெரும்பழிதானே நிலைத்து நிற்கும்? அதனால், போரைக் கைவிடுவதே சிறந்ததாகும்.” என்று அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயன்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #213 on: November 16, 2013, 09:11:51 PM »
புறநானூறு, 214. (நல்வினையே செய்வோம்!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
==========================

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;

மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே

அருஞ்சொற்பொருள்:-

கொல் – ஐயப்பொருளில் வரும் இடைச்சொல்
கசடு = ஐயம்
மாசு = குற்றம்
ஈண்டுதல் = நிறைதல், செறிதல்
காட்சி = அறிவு
பூழ் = சிறு பறவை, காடை (ஒருவகைப் பறவை)
மருங்கு = கூறு
தொய்தல் = வினை செய்தல்
தொய்யா உலகம் = விண்ணுலகம்
கோடு = மலையின் உச்சி
இசை = புகழ்
யாக்கை = உடல்
மாய்தல் = இறத்தல்
தவ = மிக
தலை = பெருமை

இதன் பொருள்:-

செய்குவம்=====> வருமே;

மனத்தில் மாசுடன், தெளிந்த அறிவு இல்லாதவர்கள்தான் நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்; சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம்.

அதனால்=====> தலையே

அதனால், உயுர்ந்தவற்றுள் விருப்பமுடையவர்களுக்கு அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால், விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். விண்ணுலக மட்டுமல்லாமல், மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின் சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக், குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

பாடலின் பின்னணி:-

பகையின் காரணத்தால் கோப்பெருஞ் சோழன் தன் மகன்களுடன் போர் செய்யத் தொடங்கினான். ஆனால், புல்லாற்றூர் எயிற்றியனார் போன்ற புலவர் பெருமக்களின் அறிவுரைக்கு இணங்கிப் போரை நிறுத்தினான். போரை நிறுத்தினாலும் அவன் மனவருத்தத்துடன் இருந்தான். அவ்வருத்ததால் அவன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அவ்வாறு செய்வதை ஒரு உயர்ந்த நற்செயல் என்று கருதினான். அவன் வடக்கிருந்த பொழுது, அவனுடன் இருந்த சான்றோர் சிலர் அவனுடைய செயலால் என்ன நன்மை அடையப் போகிறான் என்று பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வதைக் கேள்வியுற்ற கோப்பெருஞ்சோழன், “ நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம். பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்” என்ற கருத்துகளை இப்பாடலில் கூறுகிறான்.

சிறப்புக் குறிப்பு:-

”தொய்தல்” என்றால் வினை செய்தல் என்று பொருள். இவ்வுலகில் வாழும்பொழுது, மனிதன் செய்யும் செயல்களில் சில நற்செயல்களாகவும் சில தீய செயல்களாகவும் அமைகின்றன. வாழ்நாளில் செய்த நற்செயல்களுக்கேற்ப, இறந்த பிறகு விண்ணுலகத்தில் மனிதன் இன்பத்தை நுகர்வான் என்பது மதவாதிகளின் நம்பிக்கை. மற்றும், விண்ணுலகத்தில் உள்ளவர்கள் இன்பம் நுகர்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யாததால், விண்ணுலகத்தைத் “தொய்யா உலகம்” என்று இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான்.

விண்ணுலகில் இன்பம் நுகர்ந்த பிறகு, மண்ணுலகில் மீண்டும் பிறக்கும் நிலை உண்டு என்பது சில மதங்களின் அடிப்படை நம்பிக்கை. அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். நல்வினையும் திவினையும் அற்ற நிலையில் பிறவாமை என்ற நிலையை அடையலாம். பிறவாமை என்ற நிலையை அடைந்தவர்கள் வீடுபேறு அடைந்ததாகக் கருதப்படுகிறார்கள். வீடுபேறு என்பதை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

என்ற குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #214 on: November 16, 2013, 09:13:28 PM »
புறநானூறு, 215. (அல்லற்காலை நில்லான்!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
==========================

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

அருஞ்சொற்பொருள்:-

கவை = பிளப்பு
அவைப்பு = குற்றல்
ஆக்கல் = சமைத்தல்
தாதெரு = தாது+எரு = தாது எருவாக
மறுகு = தெரு
போது = பொழுது
பொதுளிய = தழைத்த
மிதவை = கூழ்
ஆர = நிரம்ப
மாந்தல் = உண்ணுதல்
பொருப்பு = மலை
பிசிர் – ஊர்ப்பெயர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
செல்வன் = அரசன்
அல்லல் = துன்பம்
மன் – அசைச்சொல்

இதன் பொருள்:-

கவைக் கதிர்=====> ஆர மாந்தும்

பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, இடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்

தென்னம்=====> மன்னே

தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார். அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, அவனைச் சூழ்ந்திருந்தவர்கள், பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து வடக்கிருக்கும் கோப்பெருஞ்சோழனைக் காணவருவாரோ வரமாட்டாரோ என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேள்விப்பட்ட கோப்பெருஞ்சோழன், “பிசிராந்தையார் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்திலிருக்கும் பொழுது அவர் கண்டிப்பாய் என்னைப் பார்க்க வருவார்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #215 on: November 16, 2013, 09:15:12 PM »
புறநானூறு, 216. (அவனுக்கும் இடம் செய்க!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
==========================

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;

புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே!

அருஞ்சொற்பொருள்:-

மாத்திரை = அளவு
யாவதும் = சிறுபொழுதும்
காண்டல் = காணுதல்
யாண்டு = ஆண்டு
வழு = தவறு
தோன்றல் = அரசன்
அதற்பட = அவ்வாறு
ஆர் = நிறைவு
யாத்தல் = பிணித்தல், கட்டல்
வரூஉம் = வரும்
கிளக்கும் = கூறும்
பேதை = களங்கமில்லாத் தன்மை
கிழமை = உரிமை
தலை = மேலே
இன்னே = இப்பொழுதே
ஒழிக்க = ஒதுக்குக

இதன் பொருள்:-

கேட்டல்=====> நண்பினன்;

” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. நன்கு பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பின், இந்நிலையில் அவர் உன்னுடன் இருப்பதுதான் முறை. ஆயினும் அவர் அம்முறைப்படி நடத்தல் அரிது.” என்று சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே! என் நண்பன் பிசிராந்தையார் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; அவன் மிகவும் இனியவன்; நெருங்கிய நட்பு கொண்டவன்;

புகழ்கெட=====> இடமே!

புகழை அழிக்கும் போலித்தனங்களை (பொய்யை) விரும்பாதவன். அவன் பெயர் என்னவென்று கேட்டால் தன் பெயர் ’களங்கமில்லாத சோழன்’ என்று கூறும் சிறந்த அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே, இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்; அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

பாடலின் பின்னணி:-

பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில் இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்; அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #216 on: December 15, 2013, 10:33:34 PM »
புறநானூறு, 217. (நெஞ்சம் மயங்கும்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==========================

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்;

‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

அருஞ்சொற்பொருள்:-

மருட்கை = திகைப்பு, மயக்கம், வியப்பு
துணிதல் = முடிவெடுத்தல்
சான்ற = அமைந்த
போற்றி = பாதுகாத்து
இசை = புகழ்
கந்து = பற்றுக்கோடு
இனைய = இத்தகைய
ஈங்கு = இங்கு
கோன் = கோப்பெருஞ்சோழன்
இறந்த = கடந்த
அன்னோன் = கோப்பெருஞ்சோழன்
அளியது = இரங்கத்தக்கது

இதன் பொருள்:-

நினைக்கும்=====> வருதல்

இத்துணைப் பெரிய சிறப்புடைய மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தாலே வியப்பாக உள்ளது. வேறு நாட்டில் தோன்றிய சான்றோன் ஒருவன், புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இந்தகைய நேரத்தில் இங்கு வருவது அதைவிட வியப்பானது.

‘வருவன்’=====> அளியது தானே

அவன் வருவான் என்று கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையும், அவ்வாறு தவறாமல் வந்தவனின் அறிவும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது. தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற புகழ் மிக்க அரசனை இழந்த இந்நாடு என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததையும், அவனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், பிசிராந்தையார் நிச்சயமாக வருவார் என்று சோழன் கூறியதையும், அவன் கூறியதுபோல் பிசிரந்தையார் வந்ததையும் நினைத்துப்பார்த்துப் பொத்தியார் மிகவும் வியப்படைகிறார். இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்துகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #217 on: December 15, 2013, 10:35:21 PM »
புறநானூறு, 218. (சான்றோர் சாலார் இயல்புகள்!)
பாடியவர்: கண்ணகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==========================

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

அருஞ்சொற்பொருள்:-

துகிர் = பவளம்
மன்னிய = நிலைபெற்ற
பயந்த = தந்த
காமர் = விருப்பம்
தொடை = தொடுத்தல்
பால் = பக்கம்

இதன் பொருள்:-

பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய உயர்ந்த குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குணங்கள் இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #218 on: February 24, 2014, 04:21:39 PM »


புறநானூறு, 219. (உணக்கும் மள்ளனே!)
பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே!
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

உள் ஆறு = ஆற்று உள்ளே (அரங்கம், ஆற்றின் நடுவே உள்ள இடம்.)
கவலை = பிரியும் வழி
புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழல்
வள்ளுரம் = தசை
உணக்கும் = வாட்டும், வருத்தும்
மள்ளன் = வீரன்
புலத்தல் = வெறுத்தல்
மாதோ – அசைச் சொல்
குறி = இடம்

இதன் பொருள்:-

ஆற்றின் நடுவே இருக்கும் இடத்தில் (அரங்கத்தில்) உள்ள மர நிழலில், உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வகையில் வடக்கிருந்த வீரனே! நீ வடக்கிருந்த பொழுது அதே இடத்தில் உன்னோடு பலரும் வடக்கிருந்தனர். அப்பொழுது நான் வராததால் என்னை நீ வெறுத்தாய் போலும்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காலத்து இப்புலவர் மற்ற புலவர்களுடன் சேர்ந்து வடக்கிருக்க வர இயலவில்லை போலும். இவர் கோப்பெருஞ்சோழனைக் காணவந்த பொழுது அவன் இறந்து கிடந்தான். அதைக் கண்ட கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், “ நீ வடக்கிருந்த பொழுது நான் வராததால் நீ என்னை வெறுத்தாயோ?” என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #219 on: February 24, 2014, 04:23:34 PM »


புறநானூறு, 220. (கலங்கினேன் அல்லனோ!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: பொதுவாக.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்,
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

அருஞ்சொற்பொருள்:-

பயந்து = தந்து
புரத்த = பாதுகாத்த
பைதல் = வருத்தம்
அல்கல் = தங்குதல்
அழுங்குதல் = வாய்விட்டு அழுதல்
ஆலை = யானைக் கூட்டம்
வெளில் = தறி, தூண்
கலுழ்தல் = அழுதல், கலங்கல்
கிள்ளி = சோழன்
மூதூர் = உறையூர்
மறம் = அவை
போகிய = சென்ற

இதன் பொருள்:-

பெருமளவில் சோற்றை அளித்துத் தன்னைப் பாதுகாத்துவந்த பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன், அந்த யானை தங்கியிருந்த இடத்தில், தூண் வெறிதாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல், பொன்மாலை அணிந்தவனும் தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு நானும் கலங்கினேன் அல்லனோ?

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார் மனம் கலங்கி அழுதார். தன்னுடைய செயலற்ற நிலையை, யானையை இழந்த ஒரு யானைப்பாகனோடு ஒப்பிட்டு இப்பாடலில் தன்னுடைய தாங்கமுடியாத வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #220 on: February 24, 2014, 04:25:07 PM »
புறநானூறு, 221. (வைகம் வாரீர்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;

துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!

நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே

அருஞ்சொற்பொருள்:-

கோல் = செங்கோல்
திறவோர் = சான்றோர்
திண் = வலி
சாயல் = மென்மை
மைந்து = வலிமை
துகள் = குற்றம்
புக்கில் = புகலிடம்
பைதல் = துன்பம்
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு
வைகம் = வைகுவோம்
வம்மோ = வாருங்கள்
நனந்தலை = அகன்ற இடம்
அரந்தை = துயர்
தூங்க = அடைய

இதன் பொருள்:-

பாடுநர்க்கு=====> மைந்து

வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; அறவோர் புகழ்ந்த செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த நெருங்கிய நட்புடையவன்; மகளிரடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்;

துகளறு=====> எனவே

குற்றமற்ற கேள்வி அறிவுடையவர்களுக்குப் புகலிடமானவன்; அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவன் உயிரைக்கொண்டு சென்றான். அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.

பாடலின் பின்னணி:-

வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறந்ததும் அவன் திறமையையும், அறிவையும், பெருமையையும் கருதி அவனுக்கு ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில், அவன் பெயரும், புகழும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அந்த நடுகல் மயில் இறகு சூடப்பட்டு, மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதைக்கண்ட பொத்தியார், மனம் கலங்கி, இத்தகைய சிறந்த மன்னனின் உயிரைப் பறித்த கூற்றுவனை வைகுவோம் என்று அங்குள்ள மற்ற சான்றோர்களை அழைப்பதை இப்பாடலில் காண்கிறோம்.
« Last Edit: February 24, 2014, 04:29:17 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #221 on: February 24, 2014, 04:26:44 PM »
புறநானூறு, 222. (என் இடம் யாது?)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

அழல்அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாதுமற்று இசைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்:-

அழல் = தீ
அவிர் = விளங்கும்
வயங்கிழை = விளங்கும் ஒளியுடைய அணிகலன்கள்
வெய்யோள் = விரும்பத்தக்கவள்
பயந்த = தந்த
யாது = எது
இசை வெய்யோய் = புகழை விரும்புபவனே

இதன் பொருள்:-

”தீயைப்போல் விளங்கும் பொன்னாலான அணிகலன்களை அணிந்த அழகிய வடிவுடையவளாய், உன் நிழலைக்கூட ஒருபொழுதும் நீங்காத, உன்னை மிகவும் விரும்பும் உன் மனைவி புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய். புகழை விரும்பும் மன்னா! நான் மீண்டும் வந்துள்ளேன்; எனக்குரிய இடம் எது என்று கூறுவாயாக.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார், அவன் வாழ்ந்த காலத்தையும் அவன் நட்பையும் நினைவு கூர்ந்தார். “மன்னா! நான் வடக்கிருக்க வந்திருக்கிறேன். எனக்குரிய இடம் எது?” என்று இப்பாடலில் பொத்தியார் கேட்கிறார்.
« Last Edit: February 24, 2014, 04:30:01 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #222 on: February 24, 2014, 04:33:30 PM »


புறநானூறு, 223. (நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பலர்க்குநிழ லாகி உலகம்மீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

அருஞ்சொற்பொருள்:-

நிழல் ஆதல் = அருள் செய்தல்
மீக்கூறல் = புகழ்தல், வியத்தல், மிகவும் சொல்லப்படுதல்
தலைப்போதல் = அழிதல், முடிதல்
சிறுவழி மடங்கி = சிறிய இடத்தின்கண் அடங்கியிருந்து
மன்ற = நிச்சயமாக
கிழமை = உரிமை
உழை = பக்கம்

இதன் பொருள்:-

பலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒருசிறிய இடத்தில் அடங்கி நிலைபெறும் நடுகல் ஆனாய்; அவ்வாறு நீ நடுகல்லானாலும், உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உரிமையுடைய, பழைய நட்பினர் உன்னிடம் வந்தால், நிச்சயமாக நீ அவருக்கு இடம் கொடுத்து உதவி செய்வாய் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில், பொத்தியார் தனக்கு வடக்கிருப்பதற்குரிய இடம் எது என்று கோப்பெருஞ்சோழனின் நடுகல்லைப் பார்த்துக் கேட்கிறார். அச்சமயம், அவருக்குக் கோப்பெருஞ்சோழன் உயிருடன் வந்து அவர் வடக்கிருப்பதற்கு ஏற்ற இடத்தைச் சுட்டிக் காட்டியது போல் தோன்றியது. சோழன் காட்சி அளித்துத் தனக்கு இடம் காட்டியதை வியந்து, இப்பாடலில், பொத்தியார் அவனுடைய நட்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நெருங்கிய நட்புக்கு உதாரணமாக உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைத் திருவள்ளுவர்,

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு. (குறள் – 1122)

என்று கூறியிருப்பதை இங்கு ஒப்பு நோக்குக.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #223 on: February 24, 2014, 04:37:08 PM »
புறநானூறு, 224. (இறந்தோன் அவனே!)
பாடியவர்: கருங்குளவாதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்,
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்,
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த

தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,
அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்;

இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்;
அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப்
பெருவறன் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
பூவாள் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்துகட்டு அழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

அருஞ்சொற்பொருள்:-

அருப்பம் = அரண்
அமர் = போர்
கடத்தல் = வெல்லுதல் (அழித்தல்)
புணர்தல் = சேர்தல்
ஆயம் = கூட்டம்
தசும்பு = குடம்
தொலைத்தல் = அழித்தல், முற்றுப்பெறச் செய்தல்
ஒக்கல் = சுற்றம்
கடும்பு = சுற்றம்
புரத்தல் = பாதுகாத்தல்
அற = முழுவதும்
நெறி = வழி
அறியுநர் = அறிந்தோர்
தூவியல் = தூ+இயல்; தூ = தூய்மை; துகள் = குற்றம்
பருதி = வட்டம்
எருவை = பருந்து
யூபம் = வேள்வி
அளித்து = இரங்கத்தக்கது
கடுகுதல் = குறைதல்
கடுகி = குறைந்து
மன்ற = நிச்சய்மாக
வறன் = வறம் = பஞ்சம், வறட்சி
கூர்தல் = மிகுதல்
ஆயம் = பசுக்களின் கூட்டம்
பூவாள் = ஒருவகை வாள்
கட்டு = கிளை
இழை = அணிகலன்

இதன் பொருள்:-

அருப்பம்=====> புகழ்ந்த

பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்தான்; துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, அவர்கள் குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்தான்; பாணர்களின் பெரிய சுற்றத்தைப் பாதுகாத்தான்; அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைகளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய

தூவியற்=====> அறிவுடை யாளன்

வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து, தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான். இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்

இறந்தோன்=====> களைந் தனரே

இறந்தான். ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது. அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில் பசியால் வாடும் பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக, கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளையும் பூக்களையும் உதிர்த்த பிறகு களையிழந்து காணப்படும் வேங்கை மரத்தைப்போல் கரிகாலனின் மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்து காட்சி அளித்தனர்.

சிறப்புக் குறிப்பு:-

கரிகால் வளவன் சிறுவனாக இருந்தபொழுது, ஒருவழக்கில் நீதி சொல்வதற்கு, நரைமுடி தரித்து முதியவர்போல் வந்து நீதிவழங்கியதாக ஒருகதை உள்ளது. இப்பாடலில், “முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்பதற்கு இச்செய்தியைப் பொருளாகக் கொள்வது சிறந்தது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், புலவர் கருங்குளவாதனார் கரிகாலனின் பெருமைக்குரிய செயல்களையும் அவன் புகழையும் கூறுகிறார். மற்றும், அவன் இறந்த பிறகு, அவன் மனைவியர் தங்கள் அணிகலன்களை கழற்றிப் பொலிவின்றிருந்ததை இலைகளும் பூக்களும் இல்லாத வேங்கை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #224 on: February 24, 2014, 04:38:19 PM »
புறநானூறு, 225. (வலம்புரி ஒலித்தது!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு

ஆற்றல் என்பதன் தோற்றம் கேள்இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்

தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினும் நோகோ யானே

அருஞ்சொற்பொருள்:-

மிசைதல் = உண்ணுதல்
மாந்துதல் = உண்ணுதல்
பிசிர் = ஒட்டிய தோல்
நுகர்தல் = அனுபவித்தல், புசித்தல்
பீடு = பெருமை
களரி = பாழ்நிலம்
பறந்தலை = பாழிடம்
வியன் = அகன்ற, பெரிய
நுவலுதல் = சொல்லுதல்
ஏய்தல் = ஒத்தல்
குரீஇ = குருவி
சிறை = பக்கம்
கொளீஇய = கொள்ள வேண்டி
திரி = வளைந்த
ஞாலம் = உலகம்
கடைத்தலை = தலைவாயில்

இதன் பொருள்:-

தலையோர்=====> தானையொடு

முன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ணுவர்; படையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ணுவர்; படையின் கடைப்பகுதியில் உள்ளோர் தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கினை உண்பர். பரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப் பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய,

ஆற்றல்=====> நோகோ யானே

வலிமையின் விளைவை இப்பொழுது கேட்பாயாக. அவன் இறந்த பிறகு, அவன் நாடு கள்ளிச் செடிகள் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்து முள்ளுடைய பெரிய காடாகியது.

முன்பு, மற்ற வேந்தர்களின் அரண்மனைகளில் இருந்த வலம்புரிச் சங்குகளை முழங்கினால், அவர்கள் முரசுடன் பெற்ற வெற்றியைக் குறித்து முழங்குகிறார்கள் என்று நலங்கிள்ளி நினைப்பான் என்று அஞ்சி, தூக்கணங்குருவிக் கூடுகளைப்போல் ஒருபக்கம் தூங்கிய (தொங்கிக்கொண்டிருந்த) வலம்புரிச் சங்குகள் இப்பொழுது உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில், அவர்களைத் துயில் எழுப்புவதற்காக ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு, இன்னும் இறவாமல் இருக்கிறேனே என்று வருந்துகிறேன்.

பாடலின் பின்னணி:-

சோழன் நலங்கிள்ளி வாழ்ந்த காலத்தில், மற்ற மன்னர்கள் தம்மிடம் உள்ள வலம்புரிச் சங்கை முழங்குவதில்லை. சங்கை முழங்கினால் அவர்கள் தம் வெற்றியை அறிவிக்கச் சங்கை முழங்குவதாக எண்ணிச் சோழன் நலங்கிள்ளி படையெடுத்துப் போருக்கு வருவான் என்று மற்ற மன்னர்கள் அஞ்சியதால்தான் அவர்கள் தங்கள் சங்குகளை முழங்காமல் இருந்தனர். அவ்வளவு வலிமை உள்ளவன் இப்பொழுது இறந்துவிட்டான். இப்பொழுது அரசர்களைக் காலையில் துயில் எழுப்புவதற்காகச் சங்குகள் முழங்கப்படுகின்றன, அதைக் கேட்டு, புலவர் ஆலத்தூர் கிழார், சோழன் நலங்கிள்லியை நினைத்து வருந்துகிறார். இப்பாடலில், அவர் தன்னுடைய செயலற்ற நிலையை வெளிப்படுத்துகிறார்.