புறநானூறு, 161. (வேந்தர் காணப் பெயர்வேன்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================
நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து
வளமழை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
அன்பில் ஆடவர் கொன்றுஆறு கவரச்
சென்றுதலை வருந அல்ல அன்பின்று
வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரஎனக்
கண்பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவிநின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி!
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின்அளந்து அறிமதி பெரும என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப
வாள்அமர் உழந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே
அருஞ்சொற்பொருள்:-
நீண்ட = நெடிய (பெரிய)
அழுவம் = கடல்
ஈண்டு = விரைவு
கொண்மூ = மேகம்
வயின் = இடம்
குழீஇ = திரண்டு
சூல் = கருப்பம்
உரும் = இடி
உரறு = ஒலி
கருவி = துணைக்கரணம் (இடி, மின்னல்)
இறுத்தல் = வடித்தல், தங்குதல் ( பெய்தல்)
என்றூஊழ் = கோடை
மன்பதை = எல்லா மக்களும்
உண = உண்ண
மலிதல் = நிறைதல்
கலை = ஆண்மான்
தெவிட்டல் = அசையிடுதல்
யாண்டு = ஆண்டு
பொறி = ஓளி
கசிவு = ஈரம் (இரக்கம்)
உரன் = வலிமை
உழத்தல் = வருந்துதல்
மருளல் = வியத்தல்
மருள் = (போன்ற)உவமை உருபு
தடக்கை = பெரிய கை (துதிக்கை)
மருப்பு = கொம்பு (தந்தம்)
வரை = மலை
மருள் = போன்ற
நோன் = வலிய
பகடு = ஆண் யானை
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
மருங்கு = பக்கம்
இரட்டல் = மாறி மாறி ஒலித்தல்
நசை = விருப்பம்
விறல் = வெற்றி, வலிமை
குருசில் = அரசன், தலைவன்
துரப்ப = துரத்த
தொடுத்தல் = கோத்தல், சேர்த்தல்
நயம் = அன்பு
பொறி = புள்ளி (தேமல்)
அகலம் = மார்பு
புல்லுதல் = தழுவுதல்
புகலுதல் = விரும்புதல்
உழத்தல் = பழகுதல், வெல்லுதல்
இதன் பொருள்:-
நீண்டொலி=====> காலை
நீளமாக ஒலிக்கும் கடல், அதிலுள்ள உள்ள நீர் குறையும் வகையில் அந்நீரை முகந்து கொண்டு, வேகமாகச் செல்லும் மேகங்கள் வேண்டிய இடத்துத் திரண்டு மாமலை போல் தோன்றி, கருவுற்று, இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடி முறையாகப் பெய்து வளத்தைத் தரும் மழை இல்லாத கோடைக் காலத்தில்,
மன்பதை=====> அன்பின்று
உலகத்து உயிர்களெல்லாம் குடிப்பதற்காகக் கங்கை ஆறு கரை புரண்டு ஓடும் அளவிற்கு நீர் நிறைந்ததாக உள்ளது. எமக்கும் பிறர்க்கும் நீ அது (கோடையிலும் நீர் நிறைந்த கங்கையைப்) போன்ற தலைவன். அன்பில்லாத வழிப்பறிக் கள்வர், வழியில் செல்வோரைக் கொன்று, அவர்களின் பொருட்களைப் பறித்தலால், முடிவற்ற காட்டு வழி செல்லுவதற்கு எளிதானதல்ல. தம் உயிர் மீது அன்பில்லாமல்
வன்கலை=====> மருள
வலிய கலைமான்கள் (ஆண் மான்கள்) அசைபோட்டுத் திரியும் அரிய காட்டு வழியில் சென்றவர்க்கு, “இன்றோடு ஒரு ஆண்டு கழிந்தது” என்று எண்ணிக் கண்களில் ஒளியிழந்து, இரக்கத்தோடு உடல் வலிமையும் இழந்து, பொறுத்தற்கரிய துன்பமுற்று வறுமையில் என் மனைவி வாடுகிறாள். உன் முயற்சியால் வந்த செல்வத்தை அவள் காணுந்தோறும் வியக்கும் வகையில்,
பனைமருள்=====> குருசில்
பனை போன்ற துதிக்கையையும், முத்து உண்டாகுமாறு முதிர்ந்த தந்தங்களையும் உடைய மலை போன்ற, ஓளி திகழும் நெற்றிப் பட்டங்கள் அழகு செய்யும் யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்க அந்த யானை மீது ஏறிப் பெருமையுடன் செல்ல விரும்புகிறேன். வெற்றிப்புகழ் மிகுந்த தலைவனே!
இன்மை=====> என்றும்
எனது வறுமை துரத்த, உனது புகழ் என்னைக் கொண்டு வர நான் இங்கு வந்தேன். உனது கொடைத்திறத்தைப் பற்றிய சில செய்திகளை நான் பாடல்களாகத் தொடுத்ததை அன்போடு கேட்பாயாக. நான் அவற்றைச் சொல்வதில் வல்லவனாக இருந்தாலும் இல்லாவிட்டலும் என் அறிவை அளந்து ஆராயாமல், சிறந்த உன்னை அளந்து அறிவாயாக. பெரும! நீ எனக்கு அளிக்கும் பரிசிலைக் கண்டு
வேந்தர்=====> பலவே
மற்ற மன்னர்கள் எந்நாளும் நாணுமாறு நான் திரும்பிச் செல்வேன். சந்தனம் பூசியதும், பல அழகிய புள்ளிகள் (தேமல்கள்) நிறைந்ததுமான உன் அழகான மார்பைச் சிறப்புடை மகளிர் தழுவுந்தோறும் விரும்புபவர்களாகுக. நாளும் முரசு ஒலிக்கும் உன் நாட்டில், உன் நிழலில் வாழும் மக்கள் நல்ல அணிகலன்கள் மிகுந்தவர்களாக இருப்பார்களாக. வாட்போர் புரிவதில் பயிற்சி பெற்ற உன் படையையும், உன் சிறந்த செல்வத்தையும் பலவாக வாழ்த்துவோம்.
பாடலின் பின்னணி:-
இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து, பெருஞ்சித்திரனார் குமணிடம் பரிசில் பெறச் சென்றார். வறுமையில் வாடும் தன் மனைவியை நினைத்து வாடும் அவர் மனத்தை அறிந்த குமணன், அவருக்குப் பெருமளவில் பரிசளிக்க நினைத்தான். அந்நிலையில், பெருஞ்சித்திரனார் குமணன் முன் நின்று, “அரசே, நான் மலை போன்ற யானையின் மீது ஏறி என் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். நான் யானை மீது வருவதைக் கண்டு என் மனைவி வியப்படைய வேண்டும். என் தகுதியை ஆராயாமல், உன் தகுதியை ஆராய்ந்து எனக்குப் பரிசு வழங்குக. எனக்குப் பரிசு கொடுக்காத மன்னர்கள், நான் உன்னிடம் பெறும் பரிசுகளைக் கண்டு நாணுமாறு எனக்கு நீ பரிசளிக்க வேண்டுகிறேன்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.