Author Topic: வீரத்துறவி விவேகானந்தரின் 150வது ஆண்டுவிழா!  (Read 1423 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
முப்பத்தி ஒன்பது வருடங்களே மண்ணில் இருந்தவரும், 150 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் இருப்பவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவரும், ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை, சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவரும், அமெரிக்காவின் சிகாகோ நகரில், "சகோதர சகோதரிகளே…’ என்று பேசி, வெளிநாட்டவர்கள் அனைவரும் இந்தியாவை திரும்பி பார்க்கவும், இங்குள்ளவர்களை விரும்பி ஏற்க வைத்தவரும், சுவாமி ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடரும், எழுச்சி பெற நினைக்கும் இளைய தலைமுறையினரின் குருவுமான சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு விழா, வரும் 12ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப் பட உள்ளது.
சென்னையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், ஒரு வருடத்திற்கு, 150வது ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். அதில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த, மெரினா கடற்கரையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தை புதுப்பிப்பதும், அங்குள்ள புகைப்படங்களை மேம்படுத்துவதும் அடங்கும். எங்கும் காணக்கிடைக்காத பல அபூர்வ புகைப்படங்கள் இங்கு உள்ளன.
ஜனவரி, 12, 1863ல், கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவிற்கும், புவனேசுவரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் நரேந்திர நாத். தாய்மொழி வங்காளம், கல்லூரியில் தத்துவம் படித்தார். சிறந்த விளையாட்டு வீரர். இசையில் நிறைய ஆர்வம் உண்டு. சிறுவயது முதலே தியானத்தில் நாட்டம் கொண்டவர்.
மேல்நாட்டு தத்துவங்கள், ஆன்மிகம் குறித்து நிறைய படித்தார். இவருக்குள் கடவுள் குறித்தும், ஆன்மிகம் குறித்தும் நிறைய சந்தேகங்கள். இதை நிவர்த்தி செய்து கொள்ள, சுவாமி ராமகிருஷ்ணரை சந்தித்தார். அவர் மூலமாக பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தையும் உணர்ந்தார். துறவறம் பூண்டார். இந்தியா முழுவதையும் நான்கு ஆண்டுகள் சுற்றி வந்தார். நாட்டின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை நிலையை அனுபவித்து அறிந்தார்.
பயணத்தின் ஒரு கட்டமாக, 1892ல், கன்னியாகுமரி சென்றவர், கடல் நடுவில் உள்ள பாறைக்கு நீந்திச்சென்று, அங்கு மூன்று நாள் தியானத்தில் இருந்து திரும்பினார். பின்னர்தான் அமெரிக்கா பயணமாகி உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். தொடர்ந்து, லண்டன் போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்டு, நிறைய சொற்பொழிவாற்றினார்.
இந்தியா திரும்பியதும், தன் குருவான ராமகிருஷ்ணர் பெயரில், மடத்தை நிறுவினார். தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்களின் லட்சியத்தை குறிப்பாக வைத்து பேசினார். அவரது பேச்சு, இளைஞர்களின் நாடி, நரம்பு, ரத்த நாளங்களில் எல்லாம் கலந்து பரவி, மிகப்பெரிய ஆன்மிக எழுச்சியை விதைத்தது.
விவேகானந்தர் என்ற வீரத்துறவியை, ஒட்டு மொத்த நாடே திரும்பிப் பார்த்து போற்றி கொண்டாட ஆரம்பித்த போது, 39 வயதில், ஜுலை, 4, 1902ல், பேலூரில் இறந்தார்.
மனிதர்கள் இயல்பில் தெய்வீகமானவர்கள், அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் சாரம் என்பதே, இவரது சொற்பொழிவில் மிகுந்து நிற்கும் உயர்ந்த கருத்து.
இந்த உயர்ந்த கருத்தை, மக்கள் வாசிப்பதோடு நிறுத்தி விடாமல், வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே, சுவாமி விவேகானந்தருக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதை.