பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம். செய்முறை மற்றும் டாப்பிங் மாறுபட்டாலும், பான்கேக்குகள் உலகம் முழுவதுமே பிரபலமான, ருசியான ஒரு உணவுப்பண்டமாகும்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப் முட்டை - 2 பால் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் மேலே குறிப்பிட்ட இந்த பொருட்களை வைத்து, 10 அங்குல அளவுள்ள பான்கேக்குகள் தயாரிக்கலாம்.
செய்முறை:
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள். பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் சிறிது பாலையும் சேர்த்து கலக்காமல் வைக்க வேண்டும்.
பிறகு மைக்ரோவேவ் கிண்ணத்தில் வெண்ணையை போட்டு, மைக்ரோவேவ்வில் உருக்குங்கள். வெண்ணெய் நன்கு உருகும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இதற்கு ஒரு நிமிடம் பிடிக்கலாம். இப்போது வெண்ணையையும் பாலையும், அந்த மாவு கலவையோடு சேர்த்து நன்கு கலக்குங்கள்.
ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும்.
அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும்.
பிறகு ஒரு தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, நன்கு சூடேற்ற வேண்டும்.
பான்கேக் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நான்ஸ்டிக் ஸ்ப்ரே அல்லது வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும்.
வாணலியானது நன்கு சூடேறிவிட்டதா என்று அறிய சிறிது நீரை சுண்டிப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். எப்படியெனில் நீரை தெளிக்கும் போது நீர் தெறிக்க ஆரம்பிக்கும்.
இப்போது 3 டேபிள் ஸ்பூன் அல்லது கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும்.
முதலில் குறைந்த அளவு மாவை பயன்படுத்துவது நல்லது. பின்னர் போகப் போக பெரிதாக ஊற்றிக் கொள்ளலாம்.
அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும்.
அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் அனைத்து பான்கேக்குகளையும் செய்ய வேண்டும்
. இதோ சுவையான பான் கேக் தயார்!!!
வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்.
குறிப்புகள்:
* டயட்டில் உள்ளவர்கள் குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கும் பான்கேக்குகளையும் செய்து சாப்பிடலாம். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
* எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும்.
* வெண்ணெய் மற்றும் நான் ஸ்டிக் ஸ்பிரே'க்கு பதிலாக பேகான் கொழுப்பை உருக்கி பானில் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
* லவங்கச்சர்க்கரையை பான்கேக் கல்லில் இருக்கும்போதே தூவி, பின்னர் அதை சுருட்டியோ அல்லது மடித்தோ ‘மாக் கிரேப்' எனும் பிஸ்கட் போன்ற பலகாரமாகவும் பரிமாறலாம்.
* பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம்.
* டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம்.
* மாவை கலக்கும் போது பாலுடன் கொஞ்சம் பீர் சேர்த்தால், பான்கேக் நன்கு உப்பி வரும். பேக்கிங் பவுடர் பயன்படுத்தாவிட்டால், இந்த பீர் கலவை மாவை நன்றாக உப்ப வைக்கும்.
* பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணையையும் பயன்படுத்தலாம்.