பரோட்டாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அத்தகைய பரோட்டாவில் ஒரு வகையான ராஜ்மா எனப்படும் சிவப்பு காராமணியை வைத்து ஒரு பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இந்த பரோட்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இத்தகைய பரோட்டாவை வீட்டிலேயே செய்து கொடுத்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாமா!!!
தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி (ராஜ்மா) - 1 கப் (வேக வைத்து, மசித்தது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பரோட்டாவிற்கு... கோதுமை மாவு - 2 கப் உப்பு - 1 சிட்டிகை எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் பரோட்டாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொட்களையும் போட்டு, தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே, மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட வேண்டும். சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள சிவப்பு காராமணி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே அந்த காராமணி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி போன்ற பரோட்டாவை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான ராஜ்மா பரோட்டா ரெடி!!!