இன்றைய காலத்தில் பி.பி எனப்படும் இரத்த அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவைகளே ஆகும். இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு, வெளிநாட்டில் இதுவரை பின்பற்றி வந்தவைகள், இந்தியாவில் புகுந்து ஃபேஷன் என்ற பெயரில் அனைவரின் மனதிலும் பதிந்து, இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன. என்ன தான் மாற்றங்கள் வந்தாலும், அதை அப்படியே நாம் பின்பற்றி வேண்டியதில்லை. இருப்பினும், அவற்றை பின்பற்றி, இப்போது வருந்துவதில் பலனில்லை. இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், மற்ற நோய்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை, அவை தானாகவே நம் உடலுக்கு வந்துவிடும். அதிலும் குறிப்பாக இதய நோய். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிக்க, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே, இயற்கை முறையில் ஒருசிலவற்றை செய்தாலே, இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!
மனஅழுத்தம்
மன அழுத்தம் மற்றும் இறுக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், சிறிது நேரம் எதனால் இது ஏற்படுகிறது என்று யோசித்து பார்க்க வேண்டும். அவ்வாறு யோசிக்கும் போது எதனால் ஏற்படுகிறது என்று தெரியும் போது, அதனை எப்படி சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். சொல்லப்போனால், மன அழுத்தம் ஏற்பட்டாலே மூச்சை உள் வாங்கி, வெளிவிடுதல், யோகா, தியானம் போன்றவற்றை செய்தால், மனமானது சற்று ரிலாக்ஸ் ஆகும்.
உடல் எடை
இரத்த அழுத்தம் உடல் எடையைப் பொறுத்தது. உடல் எடை அதிகமானால், இரத்த அழுத்தமும் அதிகமாகும். ஆகவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்
உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், இரத்த அழுத்தம் குறையும். நேரமில்லையெனில் 10 நிமிடமாவது செய்ய வேண்டும். அதை விட்டு, எப்போது செய்தாலும் ஒன்று தானே என்று வார இறுதியில் கடுமையான முறையில் உடற்பயிற்சி செய்தால், அதனால் உயிருக்கு பாதிப்பு தான் ஏற்படும். எனவே எந்த ஒரு செயலையும் அவசரமாக ஒரே நேரத்தில் செய்வதை தவிர்த்து, பொறுமையாக செய்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இரத்த அழுத்தமும் குறையும்
உணவுகள்
இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், உண்ணும் உணவுகளில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது 14 மில்லிமீட்டர் Hg குறையும். அதிலும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.
உப்பு
உப்பில் சோடியம் அதிகம் இருக்கும். ஆகவே உணவில் உப்பை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் உப்பு அதிகம் உள்ள எந்த ஒரு உணவையும் அறவே தவிர்ப்பது நன்மையைத் தரும். அவ்வாறு உப்பை உணவில் குறைத்து வந்தால், இரத்த அழுத்தமானது 2-8 மில்லிமீட்டர் Hg குறையும்.
இடுப்பு
முக்கியமாக இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமான எடையை இடுப்பில் தூக்கினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். ஆகவே எப்போதும் தொப்பை போடாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆல்கஹால்
ஆல்கஹாலில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதுவும் அளவாக ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால், இரத்த அழுத்தமானது 2-4 மில்லிமீட்டர் Hg குறையும். ஆனால் அதுவே அளவை மீறினால், உயிருக்கு ஆபத்தை தான் ஏற்படுத்தும். உடனே குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், தினமும் ஒரு பெக் அடிக்க வேண்டாம். அத்தகையவர்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது. இது குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் தான்.
புகைப்பிடித்தல்
இரத்த அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக எகிறிக் கொண்டு செல்வதில் சிகரெட் தான் முதலிடம் பிடிக்கும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் இரத்த அழுத்தத்தை 10 மில்லிமீட்டர் Hg அதிகரிக்கும். மேலும் புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயை ஏற்படும்.
காப்ஃபைன்
காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களாலும் சிலருக்கு இரத்த அழுத்தம் சீராக அதிகரிக்கும். இதனை தெரிந்து கொள்ள காப்ஃபைன் குடிப்பதற்கு முன்னும், பின்னும் இரத்த அழுத்தத்தின் அளவை அளவிடும் போது 5-10 மில்லிமீட்டர் Hg அதிகரித்திருந்தால், உடனே காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்திட வேண்டும்.
பரிசோதனை
அடிக்கடி இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். அதிலும் மருத்துவர் வீட்டிற்கு அருகிலேயே இருந்தால், வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை சென்று அதனை பரிசோதித்து, என்ன செய்ததால் குறைந்தது என்று தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இல்லையெனில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவியைக் கொண்டு, பரிசோதிக்கலாம். ஒரு வேளை இரத்த அழுத்தம் குறையாமலேயே இருந்தால், உடலில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அப்போது நிச்சயம் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
குடும்பம் மற்றும் நண்பர்கள்
குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசி, மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். ஏனெனில் மனமானது அதிக டென்சன், கோபம், அதிக உணர்ச்சிவசப்படுவதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவற்றிற்கு யாரிடமும் சரியாக மனம் விட்டு பேசாமல் இருப்பதும் ஒரு காரணம், ஆகவே எப்போதும் தனியாக இல்லாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.