விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை தான். பூரணத்தை உள்ளே வைத்து செய்யப்படும் மோதக கொழுக் கட்டையிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயை யை (வெள்ளை மாவுப் பொருளை) உடைத்தால் உள்ளே இனிய குணமான வெல்லப் பூரணம் நமக்கு கிடைக்கும்.
விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தை தயாரிக்க இதோ டிப்ஸ்:
பச்சரிசியை ஊற வைத்து அரைத்து பின் உலர்த்தி வைத்திருக்க வேண்டும். அவித்து அரைத்த பச்சரிசி மாவு 1 கிலோ, எண்ணெய் 25 மிலி, ருசிக்கேற்ப உப்பு, கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு. உப்பு மற்றும் எண்ணெய்யை மாவுடன் சேர்த்து கலந்து சுடு தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை தட்டுவடை போலத் தட்டி அதில் பூரணம் வைத்து மூடி இட்லி பானையில் 15 நிமிடம் வேகவைத்தால் போதும்.
ஸ்டப்பிங்கில் இனிப்பு அல்லது காரம் சேர்த்து விதவிதமான கொழுக்கட்டை செய்யலாம். எண்ணெய் காய விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் தாளித்து அதனை மாவில் கொட்டி பிசைந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேக விடலாம். இது காரக் கொழுக்கட்டை.இனிப்பு பூரணத்துக்கு சீவிய வெல்லம், தேங் காய் துருவியது, ஏலக்காய், கொஞ்சம் உப்பு இவற்றைக் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து விட்டு கொழுக் கட்டையில் ஸ்டப் செய்யலாம்.
குழையாமல் வேக வைத்த கடலைப் பருப்பை பொடித்துக் கொண்டு இனிப்பு பூரணத்துடன் சேர்த்து ஸ்டப் செய்வது மோதகம் ஆகும். எள்ளை வறுத்து இனிப்புக் கலவையுடன் சேர்த்தால் எள்ளுக் கொழுக்கட்டையும் ரெடி. இதை விநாயகருக்கு படைத்து வேண்டிய வரம் பெறுவோம்.