Author Topic: நீங்க சைவமா அசைவமா? இதப்படிங்களேன்!  (Read 641 times)

Offline kanmani

அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களை விட காய்கறி உணவை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்கின்றனராம்.

நோய் தாக்குதல் குறைவு

அமெரிக்காவின் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், ஆகியவை தடுக்கப்பெறுவதோடு, உடல் எடை குறியீடு, மற்றும் இடுப்புப் பகுதி பருமன் ஆகியவையும் கட்டுப்பட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூளை நல்ல ஆரோக்கியம்

சைவ உணவு உண்பவர்களின் மூளையின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இறைச்சி சாப்பிடுபவர்களைக் காட்டிலும் காய்கறி உணவு உண்பவர்களின் உடல் எடை சுமார் 30 பவுண்டுகள் வரை குறைவாக உள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபணம்

1970களிலும் 80களிலும் லோமா லிண்டா பல்கலைக் கழகம் ஆயிரக்கணக்கான செவெந்த் டே அட்வென்டிஸ்ட் கிறிஸ்துவர்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டது. அப்போதே வெஜிடேரியன் உணவு எடுத்துக் கொள்பவர்களின் ஆயுள் அதிகம் என்பது தெரியவந்தது.

சைவ உணவே ஆரோக்கியம்

தேசிய சுகாதார கழகம் லோமா பல்கலைக் கழகத்தினருக்கு 2002ஆம் ஆண்டு நிதி அளித்து இந்த ஆய்வை மேலும் நடத்துமாறு கூறியது. இந்த ஆய்வில் அமெரிக்க, மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த மாமிச உணவு எடுத்துக் கொள்ளாத கிருஸ்துவர்கள் பங்கேற்றனர். 96,000 நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சைவ உணவு பற்றிய தங்களது முடிவுகளை மிகவும் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர்.

பத்தாண்டுகள் அதிகம் வாழலாம்

சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு வந்த ஆண்கள் சராசரியாக 83 வயது வரையிலும் பெண்கள் சரசாரியாக 85 வயது வரையிலும் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டது. அதாவது அசைவம் உண்பவர்களைக் காட்டிலும் இவர்களது ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் எடை குறியீடு குறையும்

இறைச்சி உண்பதனால் ஏற்படும் அளவுக்கதிகமான உடல் பருமன் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்களின் ஆயுளை 6.2% குறைக்கிறது என்பதும் இந்த ஆய்வின் தகவலாகும்.பாடி மாஸ் இன்டெக்ஸ் என்று கூறப்படும் உடல் எடை குறியீடு அளவுகோல்களின் படி சைவ உணவாளர்கள், அசைவம் உண்பவர்களை விட 5 யூனிட் எடை குறைவாக உள்ளது தெரியவந்தது.

வாரம் ஒருநாள் தப்பில்லையாம்

அசைவத்தை தினசரி சாப்பிடுபவர்கள்தான் இந்த ஆய்வு முடிவு பற்றி கவலைப்படவேண்டும். வாரம் ஒருமுறை மட்டும் இறைச்சி எடுத்துக் கொள்பவர்கள் அல்லது இறைச்சி உணவை கட்டுப்பாடோடு உண்பவர்களுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.