கோவக்காய்|பனீர் குழம்பு
தேவையானவை: நறுக்கிய கோவக்காய் – முக்கால் கப், பனீர் துண்டு கள் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2 (தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பொடிக்க: தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் (தனித்தனியே வறுத்து அரைக்கவும்).
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பனீ ரை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக வதக்கி… உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.