Author Topic: புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்...!  (Read 2202 times)

Offline Yousuf

மறைவானில் உன்னிருக்கை
... மாநிலமும் சிறுதுணுக்கே
இறைவா! உன்  பார்வையிலே
... இவ்வுலகும் ஒரு துளியே!
குறையேதும் இல்லானே!
... கொற்றவனே உனைவணங்கி
முறையான நற்பாடல்
... முகிழ்க்கின்ற வேளையிதே!


சிறைபட்ட சாத்தானும்
... செயலற்று நின்றுவிட
மறையீந்த மாதத்தில்
... மாந்தரினம் மனந்திருந்த
பிறையாக ரமளானை
... பரிசளித்த பேரிறையே!
நிறைவான நல்வாழ்வை
... நித்தமும் தருவாயே!

கறைபட்ட  மனமெல்லாம்
... கழுவுதற்கும் அறியாமல்
குறைபட்ட மனிதருளம்
... குறுகிப்போய்  நிற்கையிலே
பிறைபூத்த ரமளானும்
... புனிதத்தின் அடிவானில்
நிறைவான மதியாகும்
... நம்பிக்கை பூரணமே!

கறைநீக்கும் கண்ணீரும்
... கடிமனத்தில் ஊற்றெடுக்க
இறைவா!உன் கருணையிலே
... ஒழிக்கின்றோம் பாவத்தை!
மறையோதி உணர்கையிலே
... மனமெல்லாம் பேருவகை
நிறைவான நற்பயிற்சி
... நல்குவது ரமளானே!