திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கை துணையை பற்றி ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறார்கள்.
ஆண் தனக்கு வரும் மனைவி இப்படி எல்லம் இருக்க வேண்டும் என எண்ணுகிறான்.
அதே போல பெண்ணும் தனக்கு வரும் கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என எண்ணுகிறள்.
கற்பனைத் துரிகையால் இவர்கள் தங்கள் துணையை வரைகிறார்கள்.
கற்பனை வேறு, யதார்த்தம் வேறு.
கற்பனையால் குறையற்ற ஒன்றை நாம் உருவாக்க முடியும். ஆனால் யதார்த்தத்தில் குறையற்ற ஒன்றைக் காண முடியாது.
படைப்பு என்பது பரிபூரணமற்றது. பரிபூரணமானவன் இறைவன் ஒருவனே.
ஒருவன் பரிபூரணமான ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான்.
அதற்காக ஊரெல்லாம் தேடி அலைந்தான்.
எழுபது வயதில் அவன் நிராசையோடு ஊர் திரும்பினான்.
'இதனை காலமும் தேடியும் உனக்கு பரிபூரணமான ஒரு பெண் கிடைக்கவில்லையா?' என நண்பர்கள் கேட்டார்கள்.
'கிடைத்தாள்' என்றான் அவன்.
'பிறகு ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை?' என்று நண்பர்கள் கேட்டார்கள்.
'அவள் பரிபூரணமான ஒரு கணவனை தேடிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை.' என்றான் அவன்.
இது வெறும் நகச்சுவை துணுக்கல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன.
குறையற்ற ஒன்றை விரும்பும் நமக்கு அதற்கான தகுதிகள் இருக்க வேண்டும்.
நம்மிடம் குறைகலை வைத்துக் கொண்டு குறையற்றது தான் வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை.
அவன் பரிபூரணமான பெண்ணைத் தேடினான். ஆனால், அவன் பரிபூரணமானவனாக இல்லை. அதனால் அந்தப் பெண் அவனை நிராகரித்து விட்டாள். இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது
ஒரு வேளை அவன் தன்னை பரிபூரணமானவனாக நினைதிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையில் அவன் பரிபூரணமானவனாக இல்லை.
அதாவது பரிபூரணம் என்பது அவன் பார்வையில் வேறு. அவள் பார்வையில் வேறு.
ஏன் அப்படி?
மனிதன் குறையுடையவன். பரிபூரணம் பற்றிக் கற்பனை கூட செய்ய முடியாது.
அதனால் தான் மனிதனால் இறைவனை புரிந்துகொள்ள முடிவதில்லை.
படைப்புகள் குறையுடையவை. அந்த படைப்புகளில் இருந்தே நாம் அறிவை பெறுகிறோம்.
எனவே நம் அறிவு குறையுடையதாகவே இருக்கும்.
நாம் குறையுடையவர்கள் என்பதை ஒப்புக் கொள்வதே ஞானத்தின் முதல் படி. நாம் குறையற்றவர்கள் என்று நினைப்பது அகங்காரம். நாம் குறையுடையவர்கள் என்று ஒத்துக் கொண்டாலே நமது அகங்காரம் அழிந்து விடும்.
உலகில் எல்லாம் குறையுடையவையே என்பதை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் குறைகண்டு வெறுக்க மாட்டான்.
குறைக்காக வெறுப்பதென்றால் உலகில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள்.
'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்பது பொன்மொழி