மேகக் கூடலில் பிறந்த மழைத்துளிபோல்
தொப்புள் கொடி அறுந்த நாள் முதல்
வாழ்க்கையில் வளைந்துநெளிந்து ஓடுகிறேன்
நானும் ஒரு மனிதத் துளியாய்....
தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....
அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்
விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
நித்தமும் மாற்றி மாற்றி வேடம் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்