Author Topic: சோழர்  (Read 17767 times)

Offline Global Angel

Re: சோழர்
« Reply #30 on: May 02, 2012, 01:38:00 AM »
இலங்கையில் சோழர் ஆட்சி


பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது


ருகுணு மீதான தாக்குதல்
 
கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான்[ஆதாரம் தேவை]. இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.
 
ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது இளவரசனான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர் றுகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான்


முதலாம் விக்கிரமபாகு
 
காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது . இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது.
 
தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.
 
விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான்


முதலாம் விஜயபாகுவும் சோழர் ஆட்சி வீழ்ச்சியும்



பொலனறுவை மீதான விஜயபாகுவின் மும்முனைத் தாக்குதல்


கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருகுணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
 
கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலதிகப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
 
1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது. [5]. கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.
 

17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #31 on: May 02, 2012, 01:49:27 AM »
முடியாட்சி முறைமையின் குறைகள்

*ஒரு அரசனால் ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை மக்களாட்சியுடன் ஒப்பிட்டு வேறுபாடுகாணலாம்.

*முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.
 சட்டமியற்றல், நிர்வாகம், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் அதிகாரங்கள்

*குவிக்கப்பட்டிருக்கும். அதாவது, அரசனே பொதுவாக மூன்று அம்சங்களையும் கட்டுப்படுத்துபவனாக அமைகின்றான். இது சர்வதிகாரத்துக்கு வழிசமைக்கின்றது.

*சர்வதிகாரம்
 
*மக்கள் அதிகாரம் அற்றோராக இருத்தல்.
 
*அரசு கொள்கையடிப்படையில் அமையாமல், அரசனின் விருப்பு/வெறுப்பு திறன்/திறன் இன்மை ஏற்ப அமைய ஏதுவாகின்றது.
 
*அரசன் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டியவனாக இருக்கின்றான். அல்லது குறைந்த பட்சம் நல்ல அமைச்சர் மற்றும் பிற துறைசார் திறன்களை தேடிக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான். இது தனிமனிதனுக்கு பாரிய ஒரு சுமை.
 
*கருத்து வேறுபாட்டுக்கு இடமின்மை. எப்படிப்பட்ட நல்லாட்சி மன்னன் ஆட்சியிலும் அவனது ஆட்சிக்கு எதிராக கருத்துவேறுபாடுகள் இருக்கவே செய்யும். எதிரான கருத்துக்களுடன் ஒத்து அல்லது ஏற்றுப்போகவேண்டும், இல்லாவிட்டால் அதை வன்முறையால் அடக்கவேண்டும்.
 
*பிறப்பு-சாதியை வலியுறுத்தும். பொதுவாக முடியாட்சி ஆட்சி மகன்வழியாகவே உரிமை கொள்ளப்படுகின்றது. தனது இருப்பை பிறப்பு வழியால் நியாயப்படுத்தும் ஒரு முறை பிறப்பு வழிச் சாதிய முறையையும் நியாப்படுத்தும்.
 
*சமூக வர்க்க அசைவியக்கம் மட்டுப்படுதல்.
 
*உரிமைப் போர்கள்: முடியாட்சி ஆட்சிமுறையில் அண்ணன் தம்பி, பலமனைவிமார் மகன்கள் என ஆட்சிபீட உரிமைக் கோரிக்கைக்காக நாட்டை போருக்கு இட்டுசெல்வதை வரலாற்றில் காணலாம். தனிமனித அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஒரு நாட்டின் பிரச்சினையாக்கப்பட்டு போருக்கு காரணமாகின்றன.
 
*வர்க்க இடைவெளி: அரசனுக்கும் மக்களுக்கும் பொருளாதார இடைவெளி பெரிதென்பதால், மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தருவதிலோ, மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசன் திறனுடன் இயங்குவதற்கு தடையாக இருக்கும்.
 
*திறன் இன்மை: பிறப்பால் அரசுரிமை பெற்ற ஒரு அரசன் அரசை வழிநடத்துக்குரிய திறனை தன்னகத்தே இயல்பாக கொண்டிருப்பான் என எதிர்பார்க்க முடியாது.
 
*ஒரு மிகத்திறன் படைத்த கொண்ட அரசன் அரசு அமைத்தாலும், அப்படிப்பட்ட ஒரு அரசன் அவனை பின் தொடர்பது முடியாமல் போகும்போது, நாடு சீரழிந்து போகின்றது.
 
*பிற திறன்படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்கு வழியின்மை.
 
*வரலாற்றில் அரசன் ஆடம்பரமான சாதாரண மக்களோடு ஒப்பீடு செய்யமுடியாத வாழ்வுநிலையைக் கொண்டிருந்தையே முடியாட்சி முறையில் காணலாம்.


புறநானூற்றில் அரசனின் அதிகார கட்டமைப்பு

 "புறநானூற்றுப் பாடல்களில் ஒரு தனிமனிதனின் அதிகாரம், "மன்னன்" என்ற தளத்தில் நேரடியாகக் கட்டப்படுவதை எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாம். மன்னன் எதிரிநாட்டு மக்கள்குப் பயங்கரமானவன்; எதிர்நாட்டை தீயிட்டுக் கொளுத்துபவன், எதிரிநாட்டுப் பெண்களுக்கு அச்சம் தரத்தக்கவன்;...சிதைத்தலில் வல்ல நெடுந்தகை அவன். இப்படி உடல் சார்ந்து வேற்றுநாட்டின் மேல் அதிகாரத்தை காட்டும் மன்னன் செயல்கள் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் பரக்கக் காணலாம். இது வெளிப்படையான செயல்பாடு. ஆனால் தன் ஆளுகைக்கு உட்பட்ட தன்நாட்டு மக்களின் மனத்தில், அவர்கள் அறியாமலேயே, தன் அதிகாரத்தை அவர்கள் தானே முன்வந்து இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மனவியலைக் கட்டமைக்கிற சொல்லாடல்தான் அதிகார அரசியலின் உச்சகட்ட தந்திரமாக படுகின்றது."

 "மன்னன் - புலவர் உறவில் பளிச்செனப் படுவது ஒருவர் வள்ளல்; ஒருவர் இரவலர் என்று கட்டப்பட்டுள்ள முரண்தான். எப்பொழுதுமே அதிகாரம் தன்னைவிட எளிய உருவகங்களை உருவாக்கி, அவைகள் தன்னை சார்ந்து வாழும்படியான ஒரு அமைப்பை வடிமைத்து கொள்ளும்."

 "புலவர் கடிந்துகொள்ளும் போதும் அதிகாரத்திற்கு எதிரான குரல் ஒலிப்பது போலத் தோன்றிலாலும், இத்தகைய சொல்லாடல்களிலும் உள்ளுறைந்து வினைபுரிவது மன்னனின் அதிகாரக்கட்டமைப்புச் செயல்பாடுதான். தன்னை விமர்சிக்கிற குரலையும் உள்வாங்கி, தன்னைத் திருத்தி வளர்தெடுத்துக் கொள்ளும் மாமனிதன் என்ற கட்டுமானமே இத்தகையே சொல்லாடல் மூலம் மனத்தில் பதிவாகின்றது."
 
"தாயை தியாகம் செய்யும்படியாகவும், அரசின் அதிகாரத்துக்கு ஏற்ப மகனை வளர்த்துக் கொடுக்கும்படியாகவும் தாயின் மனோபாவத்தை வடிவமைக்கின்றது."
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #32 on: May 02, 2012, 01:56:47 AM »
சோழர் இலக்கியங்கள்


சோழர் இலக்கியங்கள் என விளிக்கப்படுவது தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு,கலகம்,குழப்பம் எதுமற்ற நிலமையும்,சைவம்,வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும்,சோழமன்னர்கள் கலை,இலக்கியங்கள் மீதான விருப்பும்,புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று.சாளுக்கிய சோழர்கள்ளுடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை,இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள விதந்து குறிப்பிடுவர். ஒரு சில இலக்கிய பிரதிகள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலதும் தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள பற்றிய விபரங்கள் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
 
இக் காலகட்டத்தில் எழுதப்பெற்றவற்றை பக்தி இலக்கியங்கள்,தமிழ் இலக்கணங்கள்,அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப்பிரிக்கலாம்



சங்க காலமும் அதன் தொடர்ச்சியும்
 
ஏனைய துறைகள் பலவற்றைப் போலவே, இலக்கியத் துறையிலும் சோழப்பேரரசர்களின் காலமே, தென்னிந்திய சரித்திரத்தில் ஆக்கத்திற்கு உரிய காலப்பகுதியாகச் சிறந்து விளங்குகிறது. சங்க காலத்தில், சோழ வம்சத்து(அரசர்களும்) இளவரசர்களும் கவஞர்களைப் போற்றும் புரவலர்களாகவும் சில சமயம் தாங்களே புலவர்கள் அல்லது நூலாசிரியர்களாகவும் விளங்கினர்; சங்க காலம், இலக்கியத் துறையில் ஏற்றம் பெற்று விளங்கியது. அதன் பிறகு, அடுத்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பல்லவர்கள், பாண்டியர்கள் ஆதரவில், பாதுகாப்பில், இலக்கியமும் கலைகளும் இருந்து வந்தன.
 
இந்தக் காலத்தில் தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் விரிவான வளர்ச்சியடைந்தன. குறிப்பாக்க புத்த சமயத் துறவிகள், இக்காலத்தில் பாலி மொழியிலும் சில நூல்களை உருவாக்கினர். தேவாரம், திருவாசகம் தமிழ் வைணவர்களுடைய நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தின் பெரும்பகுதி ஆகியவை இக்காலத்தில் தோன்றியவையே என்பதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லைபாண்டிக்கோவை, சூளாமணி, நந்திக் கலம்பகம், பெருந்தேவனாரின் பாரத வெண்பா ஆகியவையும் இதே காலத்தைச் சேர்ந்தவையே. சமஸ்கிருத இலக்கியத்தில் புகழுடன் விளங்குபவர்களான குமாரலரும் சங்கரரும் இக்காலத்தவரே
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #33 on: May 02, 2012, 01:58:28 AM »
சோழப் பேரரசு விரிவடைந்ததின் விளைவு
 
சோழர் கை ஓங்கியதிலிருந்தே, இலக்கியம் பல வடிவங்களில் பெருகியது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி, உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் எதிரொலி இலக்கியங்களில் பிரதிபலிக்கலாயிற்று. சோழப்பேரரசு தோன்றியது என்பது புதிதாக ஏற்பட்ட அரசியல் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் புதிய இலக்கிய படைப்புக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
 
கல்வெட்டுக்களில் இலக்கியம்
 
சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் அலங்காரமான மெய்க்கீர்த்தி(பிரசஸ்தி) வாசகங்களையும் கவிதைகளையும் அவற்றின் வீறு நடையையும், முன்காலத்திய கல்வெட்டுக்களின் உப்பு சப்பில்லாத வாசகத்துடன் ஒப்பிட்டால் எவ்வாறு சோழப் பேரரசு தோன்றியதன் பயனால் புதிய இலக்கிய படைப்புக்கள் தோன்றியது என்ற கேள்விக்கு, தெளிவான விடை கிடைக்கும். படித்தவர்களின் மொழி அல்லது புலமை மொழியான சமஸ்கிருதத்தைக் காட்டிலும், மக்கள் பேசிய மொழியான தமிழ் தெளிவாக நாம் காணுமாறு இந்த வேற்றுமை உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக, அக்காலத்து இலக்கியத்துக்குச் சிறந்த சான்றாக, எடுத்துக்காட்டாக வகைப்படுத்திச் சொல்லலாம்.
 
அவற்றின் ராஜ கம்பீரமான வசகம், செய்யுள்களின் ஆற்றொழுக்குப் போன்ற நட வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்புடன் தொகுத்துச் சொல்லும் பாங்கும் போக்கும் அவற்றுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தைத் தருகின்றன. பேரரசர்களின் பிரசஸ்திகள் தவிர, கல்வெட்டுக்களில் எத்தனையோ இலக்கிய வகைகல் உள்ளன. சிதம்பர, திருஆரூர்க் கல்வெட்டுக்கள், இவ்வகையில் உதாரணங்கள். இவை முதலாம் குலோத்துங்க சோழனிடமும் விக்ரம சோழனிடமும் அதிகாரியாக இருந்து பெரும் புகழுடன் விளங்கிய நரலோக வீரனின் வரலாற்றையும் சாதனைகளையும் கூறுவன. அட்டி, வயலூர்(வைலூர்), விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காடவர்களின் பிரசஸ்திகளும் குறிப்பிடத்தக்கன.
 
இவை அனைத்திலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பல செய்யுள் வகைகளும் திறமையாக ஆளப் பெற்றிருக்கின்றன. தமிழ் யாப்பிலக்கண விதிகள் கரடுமுரடானவையாக இருந்த பொழுதிலும் அவையும் நயமுறக் கையாளப் பெற்றிருக்கின்றன. ஆசிரியர்கள், விளங்காத சொற்களையும் செயற்கையான வாக்கியப் போக்கையும் தவிர்த்திருக்கிறார்கள். வருணனைப் பாடல்கள் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள், பேரரசுகளின் பிரசஸ்திகளில் மிகச் சிறந்து விளங்குகின்றன. எனவெ, இந்தக் கவிதைகளைப் புலமை நிறைந்த அவைக்களக் கவிஞர்கள் இயற்றினார்கள் என்பதற்கும் அவர்களை அடிக்கடி நன்கு பயன்படுத்திப் போற்றி, ஊக்குவித்து வந்ததால் அக்காலத்தில் சமயச் சார்பற்ற இலக்கியம் ஏற்றம் பெற்றது என்பதற்கும் சிறிதளவும் சந்தேகம் கிடையாது.
 
 அழிந்த பாடல்கள்
 
கல்வெட்டுக்களில் சில நூல்களின் பெயர்கள் தற்செயலாக சொல்லப் பெற்றிருக்கின்றன. மற்றபடி இவை பற்றி ஒன்றும் தெரியவில்லை; ஒரு காலத்தில் அந்த நூல்கள் போற்றப்பட்ட போதிலும், நமக்கு இப்போது அந்த நூல்கள் கிடைக்காததால், அந்த நூல்களுக்கு இருந்த பெருமை அவற்றின் இலக்கியச் சிறப்பாலா அல்லது ஆற்றை எழுதியவர் உள்ளூர்க்காரர் என்ற பற்றுதலாலா அல்லது நூலாசிரியரின் தனிப்பட்ட செல்வாக்காலா என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இந்த நூல்களின் பெயரிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் இவை சொல்லப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களிலிருந்தும் மக்களுக்கு இவற்றில் ஆர்வம் இருந்ததென்றும் இவ்வகை இலக்கியங்களை அக்காலத்தார் விரும்பி வரவேற்றார்கள் என்றும் தெரிகிறது. சோழப் பரம்பரையில் ஈடும் இணையும் இல்லாதவன் முதலாம் இராஜராஜன். இந்த ஒப்பற்ற சக்கரவர்த்தியைப் பற்றி ஒரு நாடகமும் ஒரு காவியமும் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர் இராஜராஜஸ்வர நாடகம், இராஜராஜ விஜயம்.
 
முதலில் சொல்லிய நூல், தஞ்சைப் பெரியகோயிலில் திருவிழாக்களில் நடிப்பதற்காக எழுதப் பெற்றது. இரண்டாவது நூல், திருப்பூந்திருத்திக் கோயிலில் படிப்பதற்காக ஆக்கப் பெறது. இவற்றை நடிப்பதற்கும் படிப்பதற்குமாக அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தனவையா சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தனவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாடகம் இராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடக நூலாக இருந்திராது. சைவச் சமயத்தாரிடம் வழிவழியாக வழங்கி வருகிற ஒரு சில கதைகளைப் பரப்புவதோடு நிற்காமல் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருமையையே சுவையுடன் தெரிவிப்பதற்காக, நாடக பாணியில் இதை எழுதியிருக்க வேண்டும்.
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #34 on: May 02, 2012, 02:00:08 AM »
பெருங்கதை
 
பெருங்கதை அல்லது உதயணன் கதை என்பது பிரஹத் கதையின் தமிழ்வடிவம். இது ஒரு முக்கியமான நூல், கொங்கு நாட்டைச் சேர்ந்த சிற்றரசரனான கொங்கு வேளிர் என்ற புலவர் இதை எழுதியிருக்கிறார். பாண்டிய-பல்லவர் காலத்தின் இறுதியில் இது உருவாகியிருக்கலாம். கொங்கு வேளிரின் வாழ்க்கையைப் பற்றிய விவரமான செய்திகள் அவ்வளவாகத் தெரியவில்லை. இரண்டாம் சங்க காலத்தில் பல நூல்களைப் படித்து 'உதயணன் கதை' எழுதப்பட்டதாக சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு உரை எழுதியுள்ள அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.
 
இந்த நூல் கி.பி. 3ம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ எழுதப்பட்டிருக்கலாமென்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இது முடிந்த முடிவு அல்ல. அடியார்க்கு நல்லார் வாழ்ந்த கி.பி. 12-ம் நூற்றாண்டில், 'உதயணன் கதை'யைப் பற்றிய இந்த நம்பிக்கை நிலவியது என்று சொல்லலாம். இந்த நூலில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு மிகச் சிறந்த பதிப்பைத் தந்துள்ளார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். வருணனைக் கவிதைகளுக்கு ஏற்றதான அகவற்பாவில் இந்த நூல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியருடைய நடை கூர்மையாயும்(திட்பமாயும்) தெளிவாயும் இருக்கிறது. தமிழ் இலக்கிய உலகம், இந்த நூலை சிறந்ததொரு காப்பியமாக மதித்து வருகிறது.
 
சிந்தாமணி
 
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மஹாகாவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898-ல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.
 
நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருஆலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.
 
 வளையாபதியும் குண்டலகேசியும்
 
ஐம்பெரும் காப்பியங்கள் என்பவற்றுள் வளையாபதியும், குண்டலகேசியும் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. வேறு சில நூல்களில், இவற்றின் சில சில பகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன. இவையும் ஏறத்தாழ சீவக சிந்தாமணியின் காலத்தில் செய்யப்பட்டவையே. பௌத்த மதத்தார்த் தமிழுக்கு வழங்கியுள்ள இலக்கியச் செல்வங்கள் மிகக்குறைவு. அவற்றுள் ஒன்ரு குண்டலகேசி. புகழ்பெற்ற மணிமேகலை என்னும் நூலும் பௌத்தர்களால் படைக்கப்பட்டதே.
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #35 on: May 02, 2012, 02:01:01 AM »
கல்லாடம்
 
கல்லாடனார் இயற்றியது கல்லாடம் என்னும் கவிதை நூல், ஓர் ஊரின் பெயரை வைத்து நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெயர் இடம் பெற்றிருக்கின்றன. கல்லாடர் என்ற பெயரில் சங்க காலப் புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார்; அவருடைய பாடல்களாக, புறநானூற்றில் ஐந்து செய்யுள்களும் அகநானூற்றிலும் குறுந்தோகையிலும் பல செய்யுள்கள் காணப்படுகிறன. கல்லாடத்தின் ஆசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையைத் தன் நூலுக்கு அடிப்படையாகக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்திஉள்ளது; இது நம்பத்தகுந்ததே.[5] மரபுக்கு மாறுபட்டும் செயற்கை நடையிலும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. சங்க காலக் கவிதைப் பாணியையும் சொல்லமைப்பு முறையையும் இவர் கொண்டிருக்கிறார்.
 
கர்வம் அல்லது புலமைச் செருக்கு உடைய ஒருவரின் படைப்பு என்பது இந்நூலை மேற்போக்காகப் பார்த்தாலும் தெரியவரும். இதிலுள்ள நூறு செய்யுள்கள் ஒவ்வொன்றும் அகத்துறையில் ஒரு இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவன. கோவை என்னும் பிரபந்த வகையில் வரும் காதல் கவிதைகளை உயிரோட்டமின்றி, கல்லாடத்தில் காணலாம். திருக்கோவையிலிருந்து செய்யுள்களைத் தொகுத்து முன்மாதிரியாக வைத்து, நூலாசிரியர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டார். மேலும் தான் வாழ்ந்த காலத்திற்குப் பொருத்தமில்லாத மொழிமரபைப் பின்பற்ற வேண்டுமென்று வலிய முயன்று அதில் தோல்வி கண்டுள்ளார். ஒரு பரிகாசமான நூலாகவோ கேலிச்சித்திரமாகவோ அவர் இதை எழுதவில்லை.
 
திருக்கோவை சிறப்பை கல்லாடர் கூறிய விளக்கங்களுக்குப் பின்னரே, சங்க காலப் புலவர்கள் ஒப்புக்கொண்டதாக ஒரு வதந்தி உண்டு. இந்த நூல் ஆடம்பரமான நடையில் அமைந்தது ஆகையால் 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடதே' என்று ஒரு பழமொழி உண்டு. அண்மைக் காலங்களில் கூட சில அறிஞர்களும் புலவர்களும் இந்நூலைப் பெரிதும் மதித்து வருகிறார்கள். மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களைக் கல்லாடர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். மாணிக்கவாசகர், தருமி, இடைக்காடர் முதலிய பலருக்காக சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்களைக் கல்லாடர் எடுத்துக் கூறுகிறார்.
 
கலிங்கத்துப் பரணி
 
முதல் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியில் அரசவை கவிஞரான ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியைப் பாடினார். நமக்குக் கிடைத்துள்ள பரணிகளுள் இதுவே காலத்தால் முந்தியதும் சிறப்புமிக்கதும் ஆகும். 'பரணிக்கு ஒரு ஜெயங்கொண்டான்' என்ற பழமொழியிலிருந்து இந்நூலின் அருமையும் பெருமையையும் உணரலாம். எது வரலாறு, எது கட்டுக்கதை எது கற்பனை என்று வாசகர்களுக்குத் தெரியுமாறு எழுதியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்புக்களுள் ஒன்று. ஆசிரியரின் சொல் வளமும், பலவகைச் செய்யுள்களை ஒருங்கே இணைக்கும் திறமும் அவற்றுடன் நிகழ்ச்சிக்களைப் பின்னிப் பிணைக்கும் ஆற்றலும் குறிப்பிடத்தக்கவை. பரணி என்பது போர் பற்றியது; போரின் விவரங்களையும் சூழல்களையும் மட்டுமின்றிப் போர்க்களத்து நிகழ்ச்சிகளையும் சோகம், விரம் முதலிய சுவைகள் தோன்ற எடுத்துரைப்பது.
 
குலோத்துங்கனின் கலிங்கப் போரைப் பிண்ணனியாகக் கொண்ட பல்வேறு இலக்கியங்கள் தோன்றியதாகத் தெரிகிறது. வீரசோழியம் உரை, தண்டியலங்காரம் உரை ஆகியாவ்ற்றில் ஒரு சில செய்யுள்கள் மட்டுமே கிடைக்கின்றன; கலிங்கத்துப் போர் பற்றிய ஏனைய பல செய்யுள்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை இனி நமக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. கலிங்கத்துப் பரணி அழியாது கிடைத்திருக்கிற்றது எனினும், அதன் மிக உன்னதமான இலக்கியத்தரமே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிறந்த நூல், மட்டமான ஏனைய நூல்களை அழித்துவிடும் என்பதற்கு, இந்திய இலக்கியங்களில் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. ஜெயங்கொண்டாரைப் பார்த்து எழுதியவர்கள் பலர்; ஆனால், பிற்காலப் புலவர்களில் எவரையும் ஜெயங்கொண்டானுக்குச் சமமானவர்கள் என்றோ அவருடன் போட்டியிடக் கூடியவர்கள் என்றோ சொல்வதற்கில்லை.
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #36 on: May 02, 2012, 02:02:31 AM »
கூத்தன்
 
கூத்தன் என்பது ஓட்டக்கூத்தனின் சுருக்கமான பெயர். இவர் செங்குந்தர் மரபினர். அம்மரபினர் போர்ப்படையில் சாதாரணப் பட்டாளத்துக்காரன் முதல் படைத்தலைவன் வரை பல வேலைகளில், மற்றும் நெசவுத் துறையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தகப்பனுமான சங்கரன் என்பவனிடம் ஊழியம் செய்து வந்தார். சங்கரனிடம் வீட்டு ஏவல்களைச் செய்வதை விட வேறு பெரிய பதவிக்கு உரிய தகுதிகள் ஒட்டக்கூத்தனுக்கு இருப்பதை ஒரு காங்கேயன் உணர்ந்தான்; தன் பெருமையை அறிந்து அந்த வள்ளலுக்கு நன்றி கூறத்தான், கூத்தன் ஒரு 'நாலாயிரக்கோவை' பாடினர்.
 
கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார். ஒரு பரணி பாடி, விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார். இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார். இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது. காரணம் - சொல்வளம், செய்யுள்களின் ஓசை நயம், அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும். ஈட்டி எழுபது, எழுப் பெழுவது, தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.
 
கம்பன்
 
கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி, ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
 
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம காதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
 
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.
 
புகழேந்தி
 
புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகக் கூறுவது வழக்கம். பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், அவன் மீது பொறாமை கொண்டான். கூத்தனுக்கு புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.
 
மேலும் செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாகயிருக்கவேண்டும். ஆனால் இது சந்தேகத்திற்குரியது. புகழேந்தி கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்ததாகக் கொள்ளலாம். புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர். நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் கையாண்டால், வெண்பா சிறந்த பலன் தரும்.
 
புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது, இலக்கியச் சிறப்பில்லாத பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபு உண்டாயிற்று. ஆனால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறிதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
 
மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #37 on: May 02, 2012, 02:05:15 AM »
குந்தவை

குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது


கல்வெட்டு ஆதாரங்கள்
 
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
 
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிரது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களை கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
 
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
 
புதினங்கள்
 
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள் மொழி வர்மனின் தமக்கையுமான குந்தவை மிக முக்கியமான பாத்திரமாக இருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இவர் கதையின் நாயகனான வந்தியதேவனின் காதலியாக படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்.
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #38 on: May 04, 2012, 01:11:19 AM »
சோழர்கால வாணிகம்


சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. உள்நாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிகம் என்று இருவகையாக வாணிகம் நடைபெற்றது. வாணிகத்திற்கு உதவப் பெருவழிகள் இருந்தன.வெளிநாட்டு வாணிகதை மேற்கொள்ள சோழப் பேரரசில் பல துறைமுகங்கள் இருந்தன.வாணிகத்தினால் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகத் துறைமுகங்கள் நிறைந்திருந்தன. தமிழ்ப் பொருள்களுக்கு அயல் நாடுகள் வாணிகச் சந்தைகளாயின. இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களுக்குச் சுங்கம் விதிக்கப்பட்டது. அது அரசின் கருவூலத்திற்கு மிகுதியான வருவாயைத் தந்தது. வெளிநாட்டுத் தொடர்புகளால் தமிழர் நாகரிகம், புகழ் ஆகியவை பிற நாடுகளில் பரவின. பணப்புழக்கத்திற்கு முடை ஏற்பட்ட போது செல்வர்களிடமிருந்து வட்ட்டிக்குப் பணம் பெற்றனர்.


பெருவழிகள்
 
பொருள்களைக் கொணரவும், கொண்டு போகவும் பெருவழிகள் பயன்பட்டன. மூன்றுகோல், நான்குகோல் அகலமுடைய பெருவழிகள் இருந்தன.
 அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி

வடுகப்பெருவழி
 கொங்குப் பெருவழி
 தஞ்சாவூர்ப்பெருவழி

எனப் பல்வேறு பெருவழிகள் உள்நாட்டு வணிகத்திற்குத் துணை புரிந்தன[/color]


வாணிகச் சாத்து
 
வண்டிகளையும், பொதிமாடுகாளையும் வாணிகர் பயன்படுத்தினர். வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. சாத்தின் தலைவன் சாத்தன். மாசாத்துவன் எனவும் அழைக்கப்பட்டான். பெருவழிகளில் ஊறு நேராதவாறு இருக்க இம்முறை கையாளப்பட்டது. களவு நிகழாதவாறு காக்க அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர்.


பண்ட மாற்று முறை
 
உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நிகழ்ந்தது. பொருள் கிடைக்கும் துறைமுகங்கள், நகரங்கள், கிராமங்களுக்குச் சென்று தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு ஈடாகத் தாம் கொண்டு சென்றவற்றை அளிப்பர். விலை கொடுத்தும் பெற்று வந்தனர்.
 

வெளிநாட்டு வணிகம்
 
சோழப்பேரரசில் வெளிநாட்டு வணிகம் மேற்கொள்ள பல துறைமுகங்கள் இருந்தன. நாகப்பட்டினம், மாமல்லபுரம், வீரசோழப்பட்டினம், மயிலை போன்ற நகர்கள் வாணிகத்துறைகளாய்த் திகழ்ந்தன. சோழ நாட்டு வாணிகர்கள் பல்வேறு அயல் நாட்டு வாணிகர்களுடன் வாணிகத்தொடர்பு கொண்டு வாழ்ந்தனர். மேற்கே அராபியம், பாரசீகம் ஆகிய நாடுகளுடனும் கிழக்கே சீனம் கம்போசம், ஸ்ரீவிஜயம், கடாரம் போன்ற நாடுகளுடனும் மேற்கூறிய துறைமுகங்கள் வழியாக வாணிகத் தொடர்பு கொண்டனர்.

 
தமிழகத்திலிருந்து பிற நாடுகளுக்கு முத்து யானைத்தந்தம், பாக்கு, சந்தனக் கட்டை, பருத்திநூல் துணி, சாயந்தோய்த்த பட்டுநூல் ஆகியவை ஏற்றுமதியாயின என சௌஜீகுவா என்ற சீன நாட்டுப் பயணி குறித்துள்ளார். கீழை நாடுகளில் இருந்து சூடம், சீனச்சூடம், தக்கோலம், தமாலம், அம்பர் போன்றாவையும் தமிழகத்தில் இறக்குமதி ஆயின. மன்னர்களின் குதிரைப்படைத் தேவையை நிறைவேற்ற அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் கப்பல்கள் மூலமாக வந்திறங்கின. சோழன் பராந்தகன் இதனால்'குஞ்சரமல்லன்' என்ற பெயர் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.
                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #39 on: May 04, 2012, 01:14:50 AM »
வாணிகக் குழுக்கள்
 
பல்வேறு வணிகக் குழுக்கள் சோழர் ஆட்சியில் வாழ்ந்தனர்.

 
நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்
மணிக்கிராமத்தார்
 அஞ்சுவண்ணத்தார்
 வளஞ்சியர்

என்ற குழுவினர் பற்றிக் கல்வெட்டு கூறுகிறது.

 *மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் ஆவர். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர்மணிக்கிராமம் காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் என்ற கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

 *காஞ்சி, மாமல்லபுரம், பழையாறை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்தவாறு வாணிகம் புரிந்தோர் நகரத்தார் ஆவர். இவர்கள் நகர ஆட்சியையும் ஏற்று நடத்தினர்.
 
*வளஞ்சியரை, தென்னிலங்கை வளஞ்சியர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடப்படுகின்றன. வேள்விக்குடி கோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்துநூற்றுவரும் கட்டச்செய்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது,
 
*அஞ்சு வண்னத்தார் முகமதிய வாணிகக் குழுவாக இருத்தல் வேண்டும் எனக் கூறுவர்.[/color]



வானிகத் தூதும் விளைவுகளும்
 
வெளிநாடுகளுடன் வாணிக உறவு கொள்ள விழந்த சீனநடு பிற நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பியது. பிற நாட்டு வணிகர்களைத் தங்கள் நாட்டில் வந்து வாணிகம் புரியுமாறு அழைப்பு விடுத்தது. இதனை அறிந்த சோழ மன்னர்கள் தம் நாட்டு வாணிகம் செழிக்க சீனத்துடன் வாணிகத் தொடர்பு கொள்ள விழைந்தனர். தாமும் தூதுக் குழுக்களை அனுப்பினர்.

 
முத்தும் பிற கையுறைகளும் எடுத்துக்கொண்டு முதல் இராஜராஜன் அனுப்பிய தூதர்கள் கி.பி.1012-ல் புறப்பட்டு கி.பி.1013-ல் சீனா சென்றனர்.

 
அதுபோல கி.பி.1033-ல் முதல் இராஜேந்திரன் சீன தேசத்துடன் வாணிக உறவு கொள்ள தூதுக்குழு ஒன்றையும் அனுப்பினான். கடல்வாணிகம் இடையூறின்றி நடைபெற வேண்டும் என்று கடாரப்படையெடுப்பை நிகழ்த்தி வணிகர் நலம் காத்தான்.

 
சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.


                    

Offline Global Angel

Re: சோழர்
« Reply #40 on: May 04, 2012, 01:18:33 AM »
தளிச்சேரி


தளிச்சேரி என்பது சோழர் காலத்தில் இருந்த ஆடல்வல்லார்கள் இருந்த குடியிருப்புப் பகுதியாகும். முதலாம் இராஜராஜன் காலத்த்தில் சோழ மண்டலம் முழுவதிலும் உள்ள நடன மற்றும் இசைக்கலைஞர்கள் ஆதரிக்கப்பட்டனர். கோவிலின் அருகில் இவர்களுக்கு வீடுகள் உருவாக்கப்பட்டது. இப்பகுதிகள் தளிச்சேரி எனப்படது. இராசராசன் காலத்தில் இருந்த 400 நடனக் கலைஞர்கள் பெயர்கள் பெரிய கோவிலில் உள்ள கல் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நிலம் (பங்கு) பற்றியும் குறிப்பிடுகிறது


குடியிருப்புகள்
 
இந்த நடனக் கலைஞர்கள் அவரவர் சேவை செய்து வந்த கோவில்களின் அருகிலேயே வசித்து வந்தனர். பெரிய கோவில் கல் கல்வெட்டுகளில் மன்னரின் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது, முதல் ஆனையில் இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் வாழ்க்கைத் தேவைக்காகத் தரும் நெல் அளவைகளின் 50 பெயர்கள் உள்ளன. இரண்டாவது அரசாணையில் 400 பெண்கள் நடனக் கலைஞர்களின் பெயர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடபகுதியில் அமைந்த தளிச்சேரி 'வடசிகரம்' என்றும் தெற்குப் பகுதியில் அமைந்தது 'தென்சிகரம்' என்றும் அழைக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றும் வரிசையாக அமைந்தன. ஒவ்வொரு அணியின் முதல் மற்றும் கடைசி வீடுகள் தலைவீடு மற்றும் கடைவீடு என அடையாளம் காணப்பட்டது. கோவிலின் மேற்குப் பக்கத்தில் தளிச்சேரிப்பெண்கள் நடனமாட இடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இருந்தது.[2]
 
பணிகள்
 
தளிச்சேரிப் பெண்டிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தனர். கோவிலில் பாட்டுப்பாட பாணர்கள் அமர்த்தப்பட்டனர். திருவிழாக்காலங்களில் தேவரடியார் நடனமாடினர். திருவொற்றியூர் திருவாதிரை விழாவில் திருவெம்பாவை ஓதப்பட்டதாகவும் இருபத்திரண்டு தளியிலார் நடனம் ஆடியதாகவும், தேவரடியார்கள் தேவாரப்பதிகங்களை அகமார்க்க முறையில் பாடினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது. இன்ன முறையில் இன்னவர் பாடவேண்டும் என வலியுறுத்தும் உரிமை தேவரடியார்களுக்கு இருந்தது. இவ்வுரிமையை அவர்கள் விற்றும் வந்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
 
ஊதியம்
 
அவர்கள் பணியின் தன்மையைப் பொறுத்து நடனம் மற்றும் இசைக்கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட ஊதியங்களில் வேறுபாடுகள் இருந்தன. நட்டுவனாருக்கு ஒரு வேலிக்கு 100 களம் நெல் விளையும் இரண்டு வேலிகளும், ஆடல் மகளிர் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலி நிலமும் பிற இசைக் கலைஞர்களுக்கு மாறுபட்ட ஊதியமும் வழங்கப்பட்டன. ஒரு பெண் நடனக் கலைஞர் இறந்தாலோ வேறு நாட்டுக்குச் சென்றாலோ, அக்குடும்பத்தில் நடனத்தில் நன்கு தேர்ந்த மற்றொரு பெண் அதற்குப் பதிலியாக நியமிக்கப்பட்டாள்.[3]
 
 சமூக மதிப்பு
 
சோழர் காலத்தில் இவர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்கு தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். சோழர்கள் இவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தான் விரும்பியவரை மணம் புரிந்து கொள்ள உரிமை இருந்தது. இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது