Author Topic: அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா?  (Read 52 times)

Offline MysteRy


புதிய கார்களை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்கின்றனர். இன்ஜின், மைலேஜ், செயல்திறன், பாதுகாப்பு வசதிகள், சொகுசு வசதிகள் மற்றும் விலை என பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொண்டே புதிய கார்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் மறக்காமல் கவனிக்கும் மற்றொரு அம்சம் நிறம்.

சில சமயங்களில் குறிப்பிட்ட கலர் கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கும். ஆனால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என ஒற்றை காலில் நின்று தான் விரும்பிய நிறத்திலேயே காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இருக்கின்றனர். கலர் என்ற விஷயத்தில் அவர்கள் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்வதே கிடையாது.

இந்தியாவை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி தேர்வு செய்யும் வண்ணம் எது தெரியுமா? சாலைகளை கவனித்தால் உங்களுக்கு அது நன்றாக தெரிந்து விடும். வெள்ளைதான் இந்தியர்கள் அதிகம் விரும்பும் வண்ணம். இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு வெள்ளை நிற கார்கள்தான் அதிகம் விற்பனையாகியிருந்தன.

அதாவது கடந்த 2018ம் ஆண்டில் 43 சதவீத வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களைதான் விரும்பி தேர்வு செய்திருந்தனர். கிரே, சில்வர், சிகப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ண கார்கள் எல்லாம் வெள்ளை நிறத்திற்கு பின்னால் தான். இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வெள்ளை நிறத்தை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள்:

இந்தியாவின் தட்பவெப்ப நிலை இதற்கு மிக முக்கியமான காரணம். நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும். அதுவும் கோடை காலம் வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். நமது நாட்டின் இத்தகைய தட்பவெப்ப நிலைக்கு வெள்ளை நிற கார்கள்தான் மிகவும் உகந்தவை. எனவேதான் இந்திய வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களை அதிகம் விரும்புகின்றனர்.

அதாவது வெள்ளை வண்ண கார்கள் வெயிலில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தால், சூரிய வெளிச்சத்தை அது பிரதிபலிக்கும். எனவே வேறு எந்த வண்ண கார்களை காட்டிலும் வெள்ளை நிற கார்கள் மிக குறைவாகவே வெப்பமடையும். இது அறிவியல் ரீதியிலான காரணம் என்றால், இந்தியர்கள் வெள்ளை நிறத்தை விரும்புவதற்கு பொருளாதார ரீதியிலான ஒரு காரணமும் உள்ளது.

ஒரு காரின் பேஸ் நிறம் வெள்ளைதான். அது மலிவானதும் கூட. ஒரு காரின் வேறு வண்ண வேரியண்ட்களை காட்டிலும் வெள்ளை நிற மாடல் விலை குறைவாகதான் இருக்கும். எனவே பணத்தை சேமிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் பலர் வெள்ளை நிற கார்களை விரும்புகின்றனர். இந்திய மக்கள் விலைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவை பொறுத்தவரை சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளும் கூட வெள்ளை நிற கார்களைதான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் கார்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் அரசியல்வாதிகள் பலர் வெள்ளை கலர் கார்களை அதிகம் தேர்வு செய்வது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது. இது தவிர தூய்மையின் வெளிப்பாடாகவும் வெள்ளை நிறம் பார்க்கப்படுகிறது. வேறு எந்த நிறத்தை விடவும் வெள்ளை நிற கார்களை அரசியல்வாதிகள் விரும்ப இதுவே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.