Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்... அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்... அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968... (Read 88 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226067
Total likes: 28514
Total likes: 28514
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்... அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968...
«
on:
October 20, 2025, 08:26:31 AM »
அது அமெரிக்காவின் ஓர் இலையுதிர் காலம். ஆனால், அது வழக்கமானது இல்லை. குறைந்தபட்சம் அங்கு வாழ்ந்த அணில்களுக்காவது அது வழக்கமான இலையுதிர் காலமாக இல்லை. அந்த மக்கள் தங்கள் வாழ்வில் இதுவரை இத்தனை அணில்கள் இவ்வளவு பெரிய படையாகத் திரண்டு வந்து பார்த்ததேயில்லை. 1968-ம் ஆண்டு இலையுதிர் காலத்தின்போது கிழக்கு அமெரிக்காவில் இயற்கை அசாதாரணமான சூழலை உருவாக்கியது. அந்தச் சூழல்தான் அமெரிக்க அணில்கள் அப்படிப் படையெடுக்கக் காரணமாக அமைந்தன. அதுவும் நூறோ இருநூறோ இல்லை, ஆயிரக்கணக்கில் அணில்கள் படையெடுத்தன. காடுகளை, மலைகளை, ஆறுகளைக் கடந்து நெடுஞ்சாலைகளைக் கடந்து கிராமங்களைக் கடந்து கிழக்கு அமெரிக்காவையே கடந்து படையெடுத்தன. ஆறுகளைக் கடக்கும் அணில்களில் பலவும் நீந்திப் பிழைக்கமுடியாமல் மூழ்கிச் செத்துக் கொண்டிருந்த செய்திகள் அன்று தினசரி செய்தித்தாள்களை நிரப்பிக் கொண்டிருந்தன. ஒரு கிலோமீட்டர் சாலையில் குறைந்தபட்சம் ஒரு அணிலாவது வாகனங்களில் அடிபட்டு இறந்து கிடப்பதை வனத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். இத்தனை தடங்கல்களையும் இத்தனை இழப்புகளையும் மரணங்களையும் கடந்து அந்த சாம்பல் நிற அணில்கள் படையெடுத்தன. ஏனென்றால், பசி அவற்றுக்கு இதைவிட அதிகமான இழப்புகளை மரணங்களைப் பரிசளித்துக் கொண்டிருந்தது.
அவை அத்தனையும் கிளம்பி எங்கே சென்றுகொண்டிருந்தன? ஏன் சென்றுகொண்டிருந்தன?
1967-ம் ஆண்டு, அளவுக்கு அதிகமான விளைச்சல். சோளம், கருவாலி (Acorns), செஸ்நட்கள் என்று அனைத்தும் போதுமான அளவுக்கும் அதிகமாகவே கிடைத்தன. அணில்கள் போதும் போதும் என்ற அளவுக்குச் சாப்பிட்டன. விளைவாக அதிகமாகவே இனப்பெருக்கம் செய்தன. இந்த மரங்கள் அதற்கு அடுத்த ஆண்டே வறட்சியைச் சந்திக்கத் தொடங்கின. பழ மரங்கள் நிறைந்த காடுகள் கிழக்கு அமெரிக்கா முழுவதும் பெரிய வறட்சியைச் சந்தித்தது. மொத்தமும் வாடிக் கிடந்தன. அணில் கூட்டங்களில் புதிதாகப் பிறந்த அணில்கள் பசியில் வாடத்தொடங்கின. உணவு சேமிப்புகள் அனைத்தும் கரைந்தன. அணில்கள் பழ மரங்கள் நிறைந்த புதிய காட்டைத் தேடியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. ஏனென்றால் தம் கூட்டங்களில் பலவும் பசியால் செத்து விழுந்துகொண்டிருந்தன. அணில்கள் புதிய, பழ மரங்கள் நிறைந்த காடுகளைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடங்கின.
அணில் நிபுணரும் ஆய்வாளருமான வேகன் ஃப்ளைஜெர் (Vegn Flyger) அப்போது நேரடியாக இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். ஃப்ளைஜெர் இந்த நிகழ்வு குறித்த தன் ஆய்வறிக்கையில், ";நான் மெயின் என்ற இடத்திலிருந்து மேரிலாந்திற்கு செப்டம்பர் 13-ம் தேதி பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது அசாதாரண எண்ணிக்கையில் அணில்கள் சாலை விபத்தில் இறந்துகிடந்ததைக் கவனித்தேன். ஸ்மித்சோனியன் என்ற ஒரு நிறுவனம் அதன்பிறகு என்னை தொடர்புகொண்டது. அவர்கள் அவரைச் சந்தித்ததிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்கு இதுமாதிரியான சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்த இடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன்மூலம் அணில்கள் பயணிக்கும் பாதையைக் கணிக்க முயன்றார்கள்"; என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் காட்டுயிர் பாதுகாப்புத்துறை சாலை விபத்துகளில் இறந்த சுமார் 122 வகை அணில்களைச் சேகரித்தது. ஹட்சனிலிருந்து பல புகார்கள் அணில்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பதாக வந்துகொண்டேயிருந்தன. செப்டம்பர் மாதம் 28-ம் தேதி ஒரு பத்திரிகையில் ";ஹட்சன் பள்ளத்தாக்குமீது படையெடுக்கும் அணில்கள்"; என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்தனர். அக்டோபர் 6-ம் தேதி ";நம்பமுடியாத எண்ணிக்கையில் அணில்களின் படையெடுப்பு"; என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்றில் செய்தி வந்துள்ளது. பொதுமக்கள் இறந்துகிடந்த அணில்களின் சடலங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் சுமார் ஐந்து முதல் ஆறு பைகளை நிரப்பிவிட்டிருந்தனர். அப்போதும் அவற்றின் வருகை நின்றபாடில்லை. அத்தனை அணில்கள் அவர்களைச் சுற்றி வாழ்ந்திருந்தன என்பதை நினைக்கவே அவர்களுக்குப் பிரமிப்பாக இருந்திருக்கிறது. ";எங்களைச் சுற்றி இத்தனை ஆயிரம் அல்லது லட்சம் அணில்களா வாழ்ந்துகொண்டிருந்தன!"; என்று டென்னஸ்ஸி பகுதியைச் சேர்ந்த பாப் புர்ச் என்ற அதிகாரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அணில்களின் இந்த மிகப்பெரிய இடப்பெயர்வுக்கு மையப்புள்ளியாகத் திகழ்ந்தது வடக்கு கரோலினாதான். அங்கு வேனெஸ்வில் (Waynesville) என்ற பகுதியில் மக்கள் ஃபொன்டானா, சியாவோ ஏரிகளை அணில்கள் நீந்திக் கடப்பதைப் பார்த்துள்ளனர். வேறோர் இடத்தில் இருபது மைல்களுக்குச் சுமார் நாற்பது என்ற விகிதத்தில் இறந்த அணில்களின் சடலங்களைச் சேகரித்துள்ளனர். ஸ்மோகீஸ் என்ற இடத்தில் அணில்கள் பசியால் வாடி மடிந்துகொண்டிருப்பது பற்றி செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிடும் அளவுக்கு அங்கு அதிக அளவில் அணில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஃப்ளைஜெர் தனது ஆய்வறிக்கையில், அவர் வடக்கு கரோலினாவுக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நடந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வடக்கு கரோலினாவுக்குப் பயணித்தபோது ஓரிடத்தில் நெடுஞ்சாலை ஓட்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்து சில ஆய்வாளர்கள் இறந்த அணில்களுக்குப் பிரேத பரிசோதனை செய்திருக்கிறார்கள். அந்தப் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அசாதாரணமாகவோ சிக்கலாகவோ ஏதேனும் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் நீரில் மூழ்கியோ சாலையில் அடிபட்டோ அல்லாமல் இறந்துபோன அணில்கள் பெரும்பாலும் பசியால் மட்டுமே இறந்திருப்பதும் அவருக்குத் தெரியவந்தது. அதுகுறித்து, "பலகட்ட ஆய்வுகள் மற்றும் பலதரப்பட்ட மக்களிடம் விசாரித்ததன் மூலமாக நான் அறிந்தனவற்றை இங்கே கூறுகிறேன். 1967-ம் ஆண்டு பம்பர் பரிசு அடித்ததுபோல் அணில்களுக்குத் தேவையான பழ மரங்கள் காய்த்துத் தொங்கியிருக்கின்றன. அப்போது பிறந்த அணில் குட்டிகள் நன்றாகத் தின்று கொழுத்துவிட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் தேவைக்குக்கூட பழ மரங்கள் காய்க்கவில்லை. அவை சேமித்து வைக்கக்கூடப் போதுமான உணவு கிடைக்கவில்லை. அதனால்தான் அவை இப்படியொரு மிகப்பெரிய இடப்பெயர்வுக்கு முயன்றிருக்க வேண்டும்" என்று அவர் இறுதியில் குறிப்பிடுகிறார்.
"தேவையான உணவு இல்லாதபோது விலங்குகள் உணவுதேடி அலைவது இயற்கையாகவே நடப்பதுதான். அதிலும், உணவு கிடைப்பதற்கான அறிகுறிகளே இல்லாத நிலை ஏற்பட்டால், சாலைகள் அதிகமாகி, காடுகள் குறைந்து அல்லது தொடர்ச்சியாக இருந்த காடுகள் துண்டாக்கப்பட்டு தொடர்பற்றுப் போனால், இதுபோலத்தான் விலங்குகள் உணவுதேடி வெளியே வரும். இது இயற்கை. வேறுபாடு என்னவென்றால் அந்த ஆண்டில் அது வழக்கத்தைவிட அதிகமாக நடந்துள்ளது" என்று ஃப்ளைஜெரின் கணிப்பை உறுதி செய்கிறார் இப்போது அரிசோனா பல்கலைக்கழகத்தில் அணில்களை ஆய்வுசெய்துவரும் பேராசிரியர் ஜான் கொப்ரோவ்ஸ்கி (John Koprowski).
அது காடுகளில் மரங்களை வெட்டும் தொழிற்சாலைகள் சட்டப்படி உரிய அங்கீகாரங்களோடு இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். அளவுக்கு அதிகமாகக் காடுகளை அழித்து மரங்களை ரத்தம் சிந்த வைத்துக் கொண்டிருந்தார்கள். காட்டு நிலங்களைக் காப்பாற்றிவந்த அவற்றின் மேற்பகுதி முற்றிலும் துடைத்தெறியப்பட்டு சிவப்புநிற மண் தரை தெரியுமளவுக்குக் காட்டின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருந்தன மரம் வெட்டும் சர்வதேச நிறுவனங்கள். அவற்றோடு இந்த மிகப்பெரிய அணில் இடப்பெயர்வையும் நாம் பொருத்திப் பார்க்கவேண்டும். காடுகள் இல்லாமல் போகும்போது, அதைத் துண்டாடும்போது அவை இப்படியான விளைவுகளை ஏற்படுத்துவது இயல்புதான் என்று ஜான் கொப்ரோவ்ஸ்கி சொல்வதும் நினைவுகளுக்குள் நிழலாடுகிறது.
ஃப்ளைஜெரின் ஆய்வறிக்கையைப் படித்த பின்னர் கொப்ரோவ்ஸ்கி மேலும் ஆழமாகத் தோண்டிப் பார்த்துள்ளார். அப்போது 19-ம் நூற்றாண்டிலும் அணில்களின் இதுபோன்ற மிகப்பெரிய இடப்பெயர்வு நிகழ்வுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். 1857-ம் ஆண்டு டெக்சாஸில் நீளமான இலையுதிர் காலம் ஏற்பட்டுப் பழ மரங்கள் உட்படப் பயிர்களையும், விவசாய நிலங்களையும் பாதித்தது. அது இத்தகைய இடப்பெயர்வுக்கு வித்திட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணில்கள் கூட்டமாகச் சாலைகளைக் கடந்து சென்றுகொண்டிருந்ததால் தான் குதிரையில் பயணிக்க முடியாமல் முப்பது நிமிடங்கள் காத்திருந்ததாக டெக்சாஸைச் சேர்ந்த ஹென்ரி கேரிஸன் ஆஸ்கியூ என்பவர் அந்த ஆண்டில் பதிவு செய்திருக்கிறார்.
இதுபோன்ற தகவல்கள் இப்படியொரு நிகழ்வு ஏற்கனவே நடந்திருப்பதை நமக்குக் காட்டும். ஆனால் அப்போதெல்லாம், "அங்கு பாரேன்! எத்தனை அணில்கள் வருகின்றன! எத்தனை அழகாக உள்ளன!" என்ற வியப்போடு எழுதப்பட்ட பதிவுகளே அதிகமிருந்துள்ளன. அவற்றைப் பற்றிய ஆய்வுரீதியிலான தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எவ்வளவு அணில்கள் இடம் பெயர்ந்தன, எவ்வளவு உணவுத் தட்டுப்பாடு அவற்றுக்கு நிலவியது, ஏன் நிலவியது போன்ற காரணங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. வரலாற்றில் இப்படி நடந்தது சரி, இன்னொரு முறை இதுபோன்ற பெரிய இடப்பெயர்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?
நாம் காடுகளின் நிலவியல் அமைப்பையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். மிக முக்கியமாகத் துண்டாடிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாகத் தனிமைப்படுத்தப்பட்ட காடுகளில் வாழும் அணில்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் அவற்றுக்கு அங்குக் கிடைக்கவேண்டிய உணவு கிடைக்காமல் போனால் நிச்சயம் வெளியேவரும், அதுவும் மொத்தமாக. அணில்கள் வந்தபோது அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்ததுபோல் இனி இருக்கமுடியாது. ஏனென்றால், அப்போது போலவே இப்போதும் வருவது அணிலாகத்தான் இருக்குமென்று உறுதியாகச் சொல்லமுடியாது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்... அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968...