Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அர்த்தமுள்ள இந்துமதம் - #ஆசை: ☸☸☸
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அர்த்தமுள்ள இந்துமதம் - #ஆசை: ☸☸☸ (Read 3 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225572
Total likes: 28432
Total likes: 28432
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
அர்த்தமுள்ள இந்துமதம் - #ஆசை: ☸☸☸
«
on:
Today
at 08:28:31 AM »
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
`வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது. சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது. ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று. அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில். பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது.. எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
`இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?அதுதான் இறைவன் லீலை.. ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை..
பொன்னாசை..
பெண்ணாசை..
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல..
இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன் “முருகா, முருகா” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது. இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.
“எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்? அது ஆசை போட்ட சாலை. அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம். `பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி. வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம். உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’ பூசச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.
`இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்’ சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலை குனிந்து’ நடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?
எந்தவொரு `கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால். ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும். ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும். நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”
“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அர்த்தமுள்ள இந்துமதம் - #ஆசை: ☸☸☸