Author Topic: Coffee day  (Read 24 times)

Online RajKumar

Coffee day
« on: October 01, 2025, 04:09:14 PM »

*சர்வதேச காஃபி தினம் இன்று..,*
காலையில் எழுந்ததும் காஃபி  கோப்பையை கையில் பிடித்தால் தான் பலருக்கும் அன்றைய பொழுது விடியும்.
நாம் பருகும், சூடான பானத்திற்கு பின்னால் தன்னலமற்ற பலரின் உழைப்பும், சுரண்டலும் புதைந்து, நாம் அருந்தும் காஃபியோடு  கலந்தே கிடக்கிறது. சர்வதேச காபி தினம் என்பது காஃபி துறையின் பன்முகத்தன்மை, தரம் மற்றும் ஆர்வத்தை கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

காஃபி  பிரியர்கள் தங்கள் பானத்தின் மீதான அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், நறுமணப் பயிரை நம்பி வாழ்வாதாரம் கொண்ட மில்லியன் கணக்கான விவசாயிகளை ஆதரிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஆண்டு முழுவதும் பல்வேறு தேதிகளில் தங்கள் சொந்த தேசிய  காஃபி தினங்களைக் கொண்டாடுகின்றன.
காஃபி ஒரு பானம் மட்டுமல்ல! இது உலகின் இன்றியமையாத விற்பனைப்பொருள்! உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் சரக்குகளில் இதுவுமொன்று. பெட்ரோலுக்கு அடுத்தபடியாக கருதப்படும் முக்கிய விற்பனைப் பொருள்.

காஃபி  என்பது வெறும் பானம் என்பதை விட,  வாழ்க்கை முறையின் கண்ணோட்டத்தில் ஒரு சடங்கு.
நம் அன்றாட செயல்களுக்கு தூண்டுதல் தரும் உற்சாக பானம், நம் சிந்தனை மற்றும் உற்பத்தித்திறனுக்கு உயிர்நாடி.
காப்பூச்சினோ, எஸ்பிரெஸ்ஸோ, லாட்டே, மோக்கா ..,என இத்தனை சிறிய இயந்திரத்திற்குள் அத்தனை காஃபி வகைகள். இத்தனை வகைகளும், காஃபி கொட்டையை அரைத்து தூளாக்குவது, காய்ச்சுவது, பாலை நுரைக்க வைப்பது போன்ற பல செய்முறைகளை உள்ளடக்கியது.
இயந்திரத்தில் இருந்து அந்தந்த பெயருக்குரிய சுவையுடன், வடிவுடன் கோப்பைக்குள் நுழைகிறது. வாய்க்குள் நுழையாத பல காஃபி வகைகள் இருந்தாலும், இன்ஸ்டண்ட் மற்றும் பில்டர் குடித்து பழக்கப்பட்ட நமக்கு,
இந்த இரண்டு வகைக்குள் ஓரளவு ஒத்து வருகிற  ஃபிளாட் காஃபிக்கான பொத்தானை அமுக்கி, ஒரு கோப்பை குடித்துக்கொண்டே அலுவலகத்தில் வேலையை தொடங்குவதுண்டு.

பல வழிகளில், இந்த பானம் ஒரு கலாச்சார மூலக்கல். ஆழமான உரையாடல்களின் அமுதம். சோர்வை போக்கும் நிவாரணி. தனி மனித சிந்தனைகளின் பின்னணியாக செயல்படும் காஃபி மனிதனுக்கு அவசியமான பானமா? ஆரோக்கியமானதா?? என்கிற விவாதம் நின்றபாடில்லை. உடல்நல பாதிப்புகள் குறித்த விவாதம் ஒருபோதும் முடிவதில்லை. ஆனால் அது பூமியில இருக்கிற ரொம்ப கவர்ச்சிகரமான, பன்முகத்தன்மை கொண்ட பானம் எது என்றால் கண்டிப்பாக காஃபி தான்.