Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
எல்லா தாய்க்கும் சமர்ப்பனம்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: எல்லா தாய்க்கும் சமர்ப்பனம்.... (Read 177 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226068
Total likes: 28519
Total likes: 28519
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
எல்லா தாய்க்கும் சமர்ப்பனம்....
«
on:
September 28, 2025, 08:38:41 AM »
பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
"ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.
"இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''.
"இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''
அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.
"அடுத்த வாரம் அனுப்பனும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பன்ன டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''
மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.
புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.
"அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''. ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், "என்னடா சொல்றே?'' என்றாள்.
தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், 'தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள். கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்... "இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''
"பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''
அவன் பதில் சொல்லவில்லை. தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி... "சதீஷ் என் சித்தி (என் அப்பாவின் இரண்டாவது மனைவி) கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க பாட்டி, எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா''
"அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''
"உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க''
"அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் 1,500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா''
"நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''
"பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''
"அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா''
"அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்''
'பொறுமையாக இரு' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...
"பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''
தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா. வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான். "பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா''
மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது. பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...
"சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா''
"நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா''
மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.
"உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்ககிட்ட சொல்றேன்மா''
ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி. சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.
ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.
அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.
ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.
பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.
சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.
'உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி' என்று புலம்பினாள் விசாலம்.
"சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா'
"ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா'
விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.
சதீஷ் கல்லுரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.
பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.
சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் பாட்டி விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.
ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.
ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...
"அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.
அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.
விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.
விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.
இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.
கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.
நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...
"பரவாயில்லை அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி''
கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.
"ஏன்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.
அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...
"என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான் உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''
"உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்''
"என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''
"இல்லை அத்தை நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்''
விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...
"ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.
"என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''
மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...
"உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.
"அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.
"அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை உடுக்க துணி, இருக்க கூரை, வயித்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும் சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''
"உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு.. அவன் நல்லவன்டி''
"சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை'' . தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.
"அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம் நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம் லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்''
மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிறைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.
மறுநாள் கால்டாக்சிக்குப் போன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி. அவன் எரிமலையாக வெடித்தான்...
"அம்மா, உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்கிற வயசா?''
"நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''
"அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்''
தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...
"அது வீணாப் போகாதுடா அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்''
"திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை'' என்றாள் சத்யா.
பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி.
எத்தனை நாட்கள் தான் இலையானது இலையாகவே இருக்கும்... சருகாகுமல்லவா?
சுமந்த போது நம்மை பாரமாக நினைக்காத தெய்வத்தை பாரமாக நினைப்பது எவ்வளவு கொடுமையானது... தாயிடம் பேச்சுத்திறமையால் தர்க்கம் செய்யாதீர்கள்....
ஏனென்றால்... அவள் தான் உனக்கு பேசவே கற்றுக்கொடுத்தவள்..... தாயைத் தவிர்க்க நினைக்கும் படிப்பாளிகள், தாயை இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.....
வாழும்தெய்வம் அது.
நாம் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஒரே உயிர் அது.....
கண்ணீரோடு....
நம்..... தாய்களுக்கு சமர்ப்பனம்...!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
எல்லா தாய்க்கும் சமர்ப்பனம்....