Author Topic: மதுரை நாயக்கர்கள்... 🤴🤴  (Read 121 times)

Offline MysteRy

மதுரை நாயக்கர்கள்... 🤴🤴
« on: August 20, 2025, 08:28:16 AM »

மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
விஜயநகரத்துப் பேரரசன் கிருஷ்ண தேவராயன் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவன் நாகம நாயக்கன். இவனுடைய மகன் விசுவநாத நாயக்கன். கிருஷ்ண தேவராயரிடமே பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கன். பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கன் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டான். எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கன், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டான். இவனுடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கனான முத்துவீரப்ப நாயக்கன், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டான். இவன் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கன் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னன் விஜயரங்க சொக்கநாத நாயக்கன் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவளுக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவளைச் சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டான். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.
மதுரை நாயக்கர்களின் பட்டியல்:
1.விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
3.வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
4.இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
6.முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
7.திருமலை நாயக்கர் (1623 - 1659)
8.இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
9.சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
11.இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1706)
12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 - 1732)
13.இராணி மீனாட்சி (1732 - 1736)
விசுவநாத நாயக்கர் (1529 - 1564) மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவன். இவனது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதி உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. 72 பாளையங்களை உருவாக்கினான். அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1564 முதல் 1572 வரை ஆகும். விசுவநாத நாயக்கனின் மகன். பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவன். வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1572 முதல் 1595 வரை ஆகும். முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவனது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தான்
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1595 முதல் 1601 வரை ஆகும். இவன் விஜயநகர மன்னன் முதலாம் வேங்கடவனுகுக் கப்பம் கட்டுவதை நிறுத்தியதாக ஹீராஸ் என்ற பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவன் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவனுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1609 முதல் 1623 வரை ஆகும். இவன் ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினான்
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.
இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. இதனுள், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களும், திருவிதாங்கூர் அரசின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.
திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார்.
இரண்டாம்ம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவன் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது.
சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவன் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினான். அழகிரி நாயக்கனை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினான். அழகிரி நாயக்கன் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டான்.
அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்) நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவன் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதினனாக இருந்ததால் இவனது தாய் மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினாள்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவனான அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் 1688 ஆம் ஆண்டு காலமானபோது அம்மன்னனின் மகனான விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அவன் சார்பில் அவனுடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கனின் மனைவியுமான மங்கம்மாள் பகர ஆளுனராகப் பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவன் மங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தான். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தான். ஆதலால் இவனுக்குப்பின் இவனது மனைவி இராணி மீனாட்சி ஆட்சிக்கு வந்தாள்.
இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவர். இவளது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கனின் மனைவி. அவன் குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தாள். சந்தாசாகிப்பின் பணியாட்களால் கைது செய்யப்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இவளுடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.
🎄
நாயக்கர் கால நாட்டமைப்பு, நிர்வாகம்.
நாயக்க மன்னர்களின் ஆட்சி உரிமை தந்தை மகன் எனக்கொடி வழி உரிமையுடையதாக இருந்தது. பேரரசுக்கு உரியதிறையும் தேவைப்படும்போது படை உதவியும் அளித்தல் நாயக்கமன்னர்களின் கடமையாக இருந்தது. பாளையக்காரர்களிடமிருந்தும்,அமர கிராமங்களிலிருந்தும் அலுவலர்கள் மூலம் பெறப்படும் வரிப்பணம் நாயக்க அரசுக்கு உரிய முக்கிய வருவாயாக இருந்தது.பாளையக்காரர்கள் நாயக்க அரசருக்குத் தேவைப்படும் போதுபடை உதவி அளிக்க வேண்டும்.
சிற்றூர்களில் கர்ணம், மணியக்காரர் தலையாரி முதலியபன்னிருவர் அடங்கிய ஆயக்காரர் முறை இருந்தது. கள்ளர்,மறவர்களின் ஊர்களில் மணியக்காரர் 'அம்பலக்காரர்' என அழைக்கப்பெற்றார். கர்ணம்,     தலையாரி, மணியக்காரர் ஆகியோரால் தண்டல் செய்யப் பெற்ற வரிப் பணத்தை அரசு அலுவலர்களிடம் சேர்ப்பார்கள். அவர் அதனைச் சரிபார்த்து, பிரதானிக்கு அனுப்புவார் இவ்வாறு வரிப்பணம் இருமுறைகணக்குப் பார்க்கப் பெறுவதால் அது 'இருசால்' எனப்பெற்றது. ஒரு பெரிய மண்டலம் சீர்மை, வளநாடு, சாவடி (உசாவடி), நாடு, கோட்டம், பற்று என்ற உட்பிரிவுகளை உடையதாக விளங்கிற்று. ஊர்கள் பண்டாரவாடை, அமரம், இனாம் என்ற மூன்று பகுப்புகளில் அடங்கியிருந்தன. பண்டார வாடை என்பது பேரரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்த ஊர்களாகும். அமரம் என்பது நாயக்கஅரசுக்கு உரிய ஊர்களாகும். இனாம் அல்லது மானிய கிராமம்என்பது தனிநபர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளஊராகும். மதுரை நாட்டில் பாளையம் என்ற பகுப்பின் கீழ்ப் பல
ஊர்கள் திகழ்ந்தன.
மதுரை நாயக்க அரசின் தலைநகரங்கள்:
மதுரைப் பெருநாடு, பிரிவுபெறாத சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களையும், திருவிதாங்கூரின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டுதிகழ்ந்தது. கி.பி. 1535-1615 வரை மதுரை நகரே இப்பெரு நாட்டின்தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி. 1616 முதல் 1634 வரை திருச்சிராப்பள்ளி தலைநகராக விளங்கியது.கி.பி. 1634-இல் மீண்டும்மதுரைக்குமாற்றம் பெற்ற தலைநகரம் கி.பி. 1664 வரை அதேநிலையில் இருந்தது. பின்னர் கி.பி. 1665 இலிருந்து 1734 வரை மீண்டும் திருச்சிராப்பள்ளியே தலைநகரமாக விளங்கலாயிற்று.
நாயக்கர் காசுகள்:
தமிழகத்தில் ஆட்சிபுரிந்த நாயக்கர்கள் விசயநகரப் பேரரசின்நாணயங்களைப்     புழக்கத்தில் கொண்டிருந்தபோதும், தங்களுக்கெனத் தனியாகவும்  காசுகளை வெளியிட்டுவந்தனர். மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வெளியிட்ட பல காசுகள் கிடைத்துள்ளன. அக்காசுகளில் நாயக்க அரசர்களின் பெயர்களும் காணப்பெறுகின்றன. சில காசுகளில் நாயக்க அரசர்களின்உருவங்களும், தெய்வ உருவங்களும் உள்ளன. தரங்கம்பாடி, நாகப்பட்டிணம் போன்ற இடங்களில் வணிக மையம் அமைத்த டேனியர், டச்சுக்காரர், போர்த்துகீசியர் போன்றவர்கள் நாயக்கஅரசர்களின் அனுமதி பெற்று, அவர்கள் கண்காணிப்பின் கீழ்தங்களுக்கெனத் தனியாகக் காசுகளை வெளியிட்டனர்.
சமயம்:
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்க அரசர்களில் பெரும்பாலானோர்     வைணவச்     சார்புடையவர்களாகத் திகழ்ந்தபோதும், சிலர் சைவ சமயச் சார்புடையவர்களாகவும் விளங்கினர். சமணம், கிறித்தவம், இசுலாம் போன்ற பிறமதத்தவர்களுக்கு ஆக்கம் கொடுத்த சமயப் பொறையுடைமை நாயக்க மன்னர்களுக்கு இருந்தது.
கலை:
விசயநகரப் பேரரசர்களும் நாயக்க அரசர்களும் கோயில்களை விரிவுபடுத்துவதிலும், உயர்ந்த கோபுரங்களைக் கட்டுவதிலும், மிகுந்த ஆர்வம் காட்டியதால் கோயிற்கலை தமிழகத்தில் தழைத்தது. பதினொரு நிலைக் கோபுரங்கள் கட்டுவது, ஐந்துஅல்லது ஏழு திருச்சுற்றுக்களுடன் கோயில்களை விரிவுபடுத்துவது, மிகுந்த வேலைப் பாடுகளுடன் உள்ள மண்டபங்களைக் கட்டுவதுபோன்ற பணிகள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, திருவரங்கம், மன்னார்குடி ஆகிய இடங்களில்உள்ள உயர்ந்த கோபுரங்கள் நாயக்கர்களின் கொடையாகும். ஓவியக் கலைக்கு மிகுந்த ஆக்கம் தந்தனர் மதுரை, திருவரங்கம் பட்டீச்சரம், திருவலஞ்சுழி போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
மதுரை நாயக்கர் மகால், தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்கோட்டை அரண்மனை ஆகியவை நாயக்கர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.