Author Topic: அரிசி சாதம் நல்லதா? கெட்டதா?  (Read 71 times)

Offline MysteRy


நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் #பச்சரிசி, #புழுங்கல்அரிசி இரண்டு வகைகளையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கி வருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றாலும் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான்.

முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந்தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசியத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அரிசியில் நான்கு பகுதிகள் உண்டு... வெளிப்பகுதியான #உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான #தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களை பட்டியலிட்டால், கைக்குத்தல் அரிசியே சிறந்தது. அரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2.% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது.

விளைவு....

இன்றைய அரிசி மல்லிகைப்பூ போல வெண்மையாகக் கிடைக்கிறது. இதன் மற்றொரு விளைவு ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால் தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்துவிடும். இரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.