Author Topic: ஒரு மனிதன் சாகா வரம் வாங்கினால் என்ன ஆகும்?  (Read 18 times)

Offline MysteRy


அலெக்சாண்டர் இந்தியாவுக்கு செல்லுமுன் இந்திய ஞானத்தைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் அதிசயங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தார். அதில் ஒன்று, வட இந்தியாவில் ஏதோ ஒரு குகையில் ஒரு சுனை இருப்பதாகவும், அந்த சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர் என்பதுதான்.

அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு முன் மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அந்த குகையைக் கண்டுபிடித்தும் விட்டார்.

படைகளை பின்னே நிறுத்தி விட்டு அலெக்சாண்டர் மட்டும் முன்னேறி குகைக்குள் சென்றார். அது நீண்ட ஒரு குகை. குகையின் இறுதியில் சிறியதாக ஒரு சுனை இருப்பதைக் கண்டார். தண்ணீர் தெளிவாக சலனமற்று இருந்தது. அருகில் சென்றார். குனிந்தார். கவனமாக இரு கைகளையும் குவித்து தண்ணீரை அள்ளினார்.

என்ன ஒரு அற்புதம்....

இனிமேல் சாவில்லை. உலகம் முழுதும் செல்லலாம், உலகத்தை வெல்லலாம். மரணத்தை வென்றுவிட்டேன்.

அப்பொழுது ஒரு குரல் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தார். எதிர்க்கரையில் மிகவும் சோகமான தோற்றத்துடன் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அது பேசியது.

"ஒரு நிமிடம்…"

அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.

காகம் தொடர்ந்தது.

"ஒரு நிமிடம்… அந்த நீரைப் பருகுவதற்கு முன் என் கதையைக் கேளுங்கள். நானும் உங்களைப் போல்தான்… சில நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் மிகுந்த ஆசையுடன் இந்த நீரைப் பருகினேன். இந்த உலக சுகங்களை ஆசை தீர அனுபவித்தேன். இனி பார்க்க வேண்டியது எதுவும் இல்லை. அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லாம் அலுத்து விட்டது. என்னுடன் இருந்த உறவினர்களும் நண்பர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு என்று எவரும் இல்லை. எனக்கு வாழவும் பிடிக்கவில்லை. இந்த நீரைப்பருகி சாகா வரம் பெற்று விட்டதால் இறக்கவும் முடியவில்லை. வாழ்க்கை மிகவும் நரகமாகி விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்று யாராவது எப்பொழுதாவது வருவாராயின் அவர்களை எச்சரிக்கிறேன். இனி உன் விருப்பம்" என்று முடித்தது.

அலெக்சாண்டருக்கு ஒரே குழப்பம். கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தான். இறுதியில் அந்தக் காகம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. தெளிவு பிறந்தது.
அலெக்சாண்டர் புத்திசாலி. கைகளில் இருந்த நீரை மீண்டும் சுனையில் விட்டான். அந்த காகத்தை மிகுந்த நன்றியுடன் நோக்கினான். கைகூப்பி விடை பெற்றுத் திரும்பினான். பிறகு அலெக்சாண்டர் தனது 32-ம் வயதில் இறந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...

உண்மையில் மரணம் என்பது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. மானுடப் பிறவியின் துன்பங்களில் இருந்து விடுதலை இறைவனின் அடியில் பேரானந்தம்...