கூடடைந்த பறவைகளின் கீச்சொலிகள்,
சருகுகளின் தீண்டல்கள்,
சுழித்தோடும் நதியின் ரீங்காரம்,
தென்றல் தீண்டும் கவின் பொழுதின் 
இலைகள் உரசும் ஒலி,
இசையற்றவெளிகளை நிறைக்கும்
 இசைகளுக்கு நடுவே 
அந்தியின் தீண்டலில் எங்கிருந்தோ
 நடனமாடி வருகிறது ஒர் குழல்மொழி
நீர் நனைத்த பாதங்கள், நிலம் நோக்கி நகர்ந்தது. 
அங்கே,
மஞ்சணத்தி பூக்கள் உதிர்ந்து கிடந்த
 மகரந்த காட்டில் ஒளி பொருத்தி நிற்கிறாள் பெண்ணொருத்தி
அவள் யவ்வன ஒளிக்கீற்றில் ஒதுங்கி நிற்கின்றன 
பசும் பூங்கொடிகள்.
அலைப்பெருக்கான நதி போல் தத்தளிக்கிறது என் மனம் 
அவளின் பூரண சந்திர முகம் கண்டு.
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே
கொழுக்கொம்புகள் அற்ற காட்டாற்றின் வெள்ளத்தில் 
சிக்கிக் கொண்டவன் போலாவேன் உன் நேத்திர பார்வையில்
இது என்ன விளையாட்டு? ஆதவனுக்கும் சந்திரனுக்கும் 
இரு ஒளியும் பூரித்து நிறைக்கின்றன இவ்வனத்தை.
ஏன் இந்த மகரந்த காடு மஞ்சளொலியில் மிதக்கிறது,
 எப்படியும் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறது உன் மஞ்சள் மேனி முன்.
ஏன் இந்த நதியலைகள் இப்படி கொந்தளிக்கின்றன
உன் முடிக்கற்றைகளின் அலையசைவுகளின் நடனம் 
இன்னமும் பிடிப்படவில்லையோ. 
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே
வேள் விழியாள் பார்வையில் மோட்சம் அடைந்த 
பாக்கியம் கிட்டி விட போகிறது எனக்கும்
பனிப்பட்ட பூக்கள் ஏன் இன்று வனப்போடு இருக்கின்றன
செழுத்திருந்த உன் கன்னங்களின் சிவப்பை விஞ்சிவிடவா?
மென்சிரிப்பை அடைக்கியிருக்கும் அந்த கன்னங்களின் வனப்பை
 கைகளில் ஏந்திவிட தான் மனமும் துடிக்கிறது,
ஆனால் பட்டாம்பூச்சிகளை பிடிக்கும்பொழுது
 கைகளில் சாயம் ஒட்டிவிடுவது இயல்புதானல்லவா? 
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே!
படபடக்கும் உன் இமை இறகுகள்
பட்டாம்பூச்சிகளை வண்ணங்களை ஏந்திக்கொண்டவன் நானாகிவிடுவேன். 
நெளிந்து வளைந்து விரிந்திருப்பது இந்த காடு மட்டுமா 
அல்லது உன் மோன புன்னகையுமா? 
செவிகளை நிறைக்கும் உன் குழலோசையில் 
தேனீக்களும், பறவைகளும் கூடடையாமல்
காற்றில் ரீங்காரமிட்டு நடனமாடுகின்றன. 
நர்த்தனமாடும் என் மனமும் கூடடைய வேண்டாமா பேரழகே?
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடக் கூடாதா? 
ஒரே ஒரு முறை அந்த கரைகளில் என் பாதம் நனைத்துக் கொள்வேன்
ஒரே ஒரு முறை அந்த அம்புகள் தைத்த பாக்கியம் பெறுவேன்
ஒரே ஒரு முறை நானும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் தரித்தவனாவேன்! 
சித்திரமே நீ கண் திறந்திடு!