Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
முதுமையின் கொடுமை.
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: முதுமையின் கொடுமை. (Read 2021 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220644
Total likes: 26336
Total likes: 26336
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
முதுமையின் கொடுமை.
«
on:
February 17, 2023, 08:22:12 AM »
முதுமையின் கொடுமை
எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை…
இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார்.
இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய் விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள்.
சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. அவர் முன்னாளில் எப்பொழுதோ வாங்கிய நிலம் நல்ல மதிப்பு மிக்கதானது. தன்னை வெல்ல யாரும் இல்லை என்றும் மற்றொரு நாள் சொல்லி சென்றார், பெருமிதமாகவே இருந்தார்.
2,3 வருடங்களுக்குள்ளாகவே அவருடைய பேச்சில் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. எதையோ தொலைத்தது போல வெறிச்சிட்ட கண்கள். "என்ன சார் எப்படி இருக்கீங்க" என்ற கேள்விக்கு, முன்னைப் போல பளீர் சிரிப்பு இல்லை, "இருக்கிறேன் டாக்டர்", என்ற ஒற்றை வரி பதில் வந்தது. அவரை தேற்றும் விதமாக அப்புறமா, பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு ஆரம்பித்து வைத்தேன்.
எல்லோரும் நல்லா இருக்காங்க சார், ஆனால் ரொம்ப பிஸியா இருக்காங்க. நமக்கு கூட ஒரு ஆள் இல்லேன்னு வருத்தமா இருக்கு.
அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குல சார், பாவம் என்ன சூழ்நிலையில் இருக்காங்களோ...
எல்லோரும் ரொம்ப பாசக்காரங்க தான் சார், ஆனால் காலம் எல்லொரையும் கட்டி போட்டு வச்சிருக்கு. ஒருத்தரோட ஒருத்தர் நேரம் செலவழிக்க முடியாம பஞ்சா பறக்குறாங்க. கேட்டால் அமெரிக்கா வா, பூனே வாங்குறாங்க. நமக்கு எதுவும் செட் ஆகுறதில்ல சார். இப்படியே ஓட்டிட்டிருக்கேன். என்றார்.
அவங்களும் சம்பாரிக்கணும் செட்டில் ஆகணும்ன்னு ஒரு எண்ணம் இருக்கும்ல சார்...?
அதான் சார் புரியல, அவங்க வாழ்க்கை முழுக்க ஓடி சம்பாதித்தாலும் சேர்க்க முடியாத சொத்து எங்கிட்ட இருக்கு. நானே கொடுத்தாலும் அது இப்போ அவங்களுக்கு தேவைப்படாது போல.. எதன் பின்னால ஓடுறாங்கன்னே தெரில. எல்லோரும் ஒரே ஓட்டமா ஓடுறாங்க, வாழ்க்கையை புரிந்து கொள்ள எல்லோருக்கும் 65 வயது ஆகணும் சார் என்று சிரித்தார்..
நடுவில் பார்க்கின்சோனிசம் பாதித்தது, அப்பொழுதும் மனிதர் அசரவில்லை வயதானால் வருவது தானே இதெல்லாம் பிரச்சனை இல்ல சார் என்பார். பெரிய வேடிக்கை என்னவென்றால் மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்த நோயின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். அவரின் மன உறுதிக்கு முன்னால் நோய் கொஞ்சம் தோற்று தான் போனது.
சில காலத்துக்கு பின் முன்பு மிகவும் தளர்ந்து போய் இருந்தார் அவர் மனைவி துணையாக கூட்டி வந்தார், தன்னுடைய மூத்த மகன் பைக் ஆக்சிடென்ட்டில் திடீரென்று இறந்ததை சொன்னார், பாவமாக இருந்தது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சார் பையன் திடீர்னு போய்ட்டான் சார், ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்றார், நான் அவர் மனைவியிடம் அவரை எப்படியாவது தேற்றுங்கள் இல்லையென்றால் நோயின் கடுமை அதிகரிக்கும் என்பதை சொன்னேன். அவர் மனைவி மார்பக புற்று நோயால் பாதிக்கபட்டு மார்பகத்தை இழந்திருந்தார், அவரை ஆதரித்து அணைத்து கூட்டி சென்றதை பார்க்கும் போது சிறிது நிம்மதியாக இருந்தது.
எதிர் பார்க்காத அளவில் மிக விரைவாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டார். மகனின் மனைவியை டீச்சர் ட்ரைனிங் படிக்க வைத்தார் மகனின் வேலையை மருமகளுக்கு வாங்கி குடுத்தார், தன் பேத்திக்கு (இறந்த மகனின் மகளுக்கு) திருமணம் முடித்து வைத்தார். மருமகளிடம்," வேலை வாங்கி கொடுத்தாயிற்று இனி உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள். நீ திருமணம் முடித்தாலும் எங்களுக்கு சம்மதமே" என்று அவர்களுடைய தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். எல்லாம் சரியாக தான் இருந்தது.
மூன்று மாதம் முன்பு மறுபடி தம்பதி சமேதராக வந்தார்கள், மகன் தங்களுக்கு விசா அனுப்பி உள்ளதாகவும், ஆஸ்திரேலியா போவதற்கு முன் உடம்பை செக் அப் செய்ய வந்தோம் என்றார்கள் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தேன்.
அப்போது சென்றவரை வெகு காலத்திற்கு பின் இன்று காலையில் தான் மீண்டும் பார்த்தேன். நடுங்கிய படி அமர்ந்தார், என்ன செய்கிறதென்று கேட்டேன். பதில் இல்லை ஏதோ தப்பு இருக்கிறது என்று புரிந்தது. அவர் அழுதால் என்ன சொல்வது என்று என் மனதின் மூலையில் ஒரு கேள்வியும் இருந்தது. அதனாலேயே என்னால் அவர் முகம் பார்க்க முடியவில்லை, மீண்டும் கேட்டேன், என்ன சார் உடம்புக்கு ரொம்ப முடியலையா என்று? என்னை சில நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு பிறகு சொன்னார் டீச்சர் என்ன விட்டு போய்ட்டா. அதனால திரும்ப தண்ணி அடிக்கிறேன் உடம்புக்கு முடியல என்றார்.
அந்த அதிர்ச்சியை என்னால் உள்வாங்கி கொள்ள முடியவில்லை 7 வருடங்களாக அவரை ஆட்கொண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்த பார்கின்சோனிசம் நோய் இப்பொழுது 2 மாதங்களில் அவரை முழுமையாக சேத படுத்த ஆரம்பித்திருப்பது தெரிந்தது, தொடர்ச்சியாக பேச இயலவில்லை, நேராக நிற்க இயலவில்லை.. நடுங்காமல், தடுமாறாமல் நடக்க இயலவில்லை அனைத்தும் 2 மாதங்களில், தனிமை இனி இவரை என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை.
மனைவி இருக்கும் போது தெரியல சார். பேப்பர் எடுத்து குடுக்க ஆள் இல்லை, தண்ணி குடுக்க ஆள் இல்லை, தனியா இருக்கேன் டாக்டர். மக கல்யாணம் பண்ணி போய்ட்டா, மருமகளுக்கு இப்ப என்ன பாக்க முடியாது, மகன் ஆஸ்திரேலியால இருக்கான். என்ன பண்றதுன்னு தெரியல என்றார். எனக்கு தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை சொன்னேன்... இவரால் இனி நடக்க இயலாது.. இவருக்கு கவலை அதிகமாக ஆக இவர் நோய் இவரை மெல்ல ஆட்கொண்டு ஆள் கொல்லும். அதனால் இவரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று யாரிடம் இப்போ நான் சொல்வது??
நல்ல வேலை அவர் அழவில்லை, நானும் உடன் அழுது விடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ?? அனைவரும் டீச்சர் என்றாரே. முதுமை நமக்கும் வரும் என்று டீச்சர்களுக்கு யார் பாடம் எடுப்பது? இவரால் இனி இது போல் மீண்டும் ஒரு முறை என் மருத்துவமனைக்கு வர இயலுமா தெரியவில்லை..
வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரை போல மேலே எழும்பி கீழே இறங்கி நமக்கு பல்வேறு அனுபவங்களை தருகிறது. அதில் மகிழ்ச்சியும் இருக்கும் அதிர்ச்சியும் இருக்கும். அனைத்திற்கும் தயாராக இருக்க பணம் மட்டும் போதுவதில்லை. அன்பாக அரவணைக்க, ஆறுதலாக பேச சக உயிர் வேண்டும். உறவுகளில் மட்டுமே அது சாத்தியமாகிறது.
உடன் பிறந்தவர்களோ.., கை பிடித்தவர்களோ ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் அளிக்காமல் வாழ்க்கை முழுதும் எதன் பின்னால் ஓடுகிறோம்...? யாருக்காக ஓடுகிறோம்?? வாழ்க்கையை துவங்கும் போது எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கிறது. சக மனிதனை விட ஒரு படி முன்னேறி விடும் வெறி இருக்கிறது. எல்லோரும் வெற்றியை நோக்கி ஓடுகிறோம். இலக்கை அடைந்தோமா?? எது தான் இலக்கு?? நமது ஓட்டத்தை எப்போது நிறுத்துவது??
ஓடிக் களைத்து, சோர்ந்து நிற்கும் போது எல்லையில்லா ஒரு பெருவெளியில் மாட்டிக் கொண்டதை உணர்வோம். நமது அனுபவத்தை கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். இதுவரையிலும் பலர் சொல்வதை நாமும் கேட்கவில்லையே...!!
ஒரு கதையின் முடிவையோ சினிமாவின் முடிவையோ அவ்வளவு ஏன் ஒரு எலெக்ஷன் முடிவைக்கூட கூட யூகித்து சொல்ல முடியும் நமக்கு, நமது வாழ்வின் இறுதி எப்படி இருக்கும் என்று யூகித்து அதற்கு தயாராவதில் என்ன தயக்கம்?
நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்வு தான், அது பெரும்பாலும் எப்படி முடியும் என்பதை யூகிக்க நமக்கு பெரிய கஷ்டம் எதுவும் இருக்க போவதில்லை. ஆனாலும் நாம் அதற்கு துணிவதில்லை. நம் முடிவுக்கு நாம் தயாராக இருந்திருந்தால், இன்று பல்வேறு நகர்புறங்களில், பூட்டிய வீட்டினுள் வாரக்கணக்கில் கண்டு
கொள்ளப்படாமல் இறந்து, நாறிக் கிடக்கும் பெரியவர்களை பற்றி கேள்விப்படுவோமா?? அவர்களை பற்றி விசாரித்தால் வசதியானவர்களாகவும், அவர்களின் சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிகிறது, எனில், இந்த முதியவர்கள் ஓடிய ஓட்டத்தின் பலன் என்ன?
கிராமங்களில் முதியோரை அரவணைக்கும் இடமாக சாவடிகள் இருந்தன. ஒரு வயதுக்கு மேல் முதியோர் ஒன்று கூடும் இடமாக அவர்களுக்கு சமூகம் புகழிடம் அளித்திருந்தது. இன்று அவையும் வழக்கொழிந்து விட்டன. மருத்துவ வசதிகளால் பெருகி வரும் முதியோர்களுக்கு அவர்களின் உயிர்த்திர்த்தலே பெரும் பிரச்சனையாகி இன்று அவர்களை தனிமையில் இருந்து மீட்க முதியோர் காப்பகங்களே மிச்சமிருக்கின்றன.
நாம் ஓட்டத்தை முடித்து எல்லைக் கோட்டை தொடும் போது, போதுமான ஓய்வும், தாங்கி பிடிக்க உறவுகளும் இருக்க பயணம் முடிய வேண்டும். அப்படியில்லை என்றால், நன்றாக ஓடிய ஒரு மராத்தான் வீரர் எல்லைக்கோட்டருகே சறுக்கிய கதையாக தான் நம் பயணம் முடியும்.
வாழ்வதற்கான திட்டமிடல் போல வாழ்க்கையின் இறுதிக்கான திட்டமிடலும் அவசியம். காசு பணம் சேர்ப்பது போல நண்பர்களையும் உறவுகளையும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், சமூகத்துக்கு பங்களிக்க வேண்டும் அதுவே இறந்த பின்னும் நம்மை பலர் மனதில் வாழ வைக்கும்...
படித்தேன் பகிர்கின்றேன்
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
முதுமையின் கொடுமை.