Author Topic: கோலாக்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம்!  (Read 763 times)

Offline Yousuf


புதுடெல்லி:புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளை அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கோலாக்களில் கலந்திருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் சந்தையில் அளிக்கப்படும் கோலாக்களின் சேர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவர பெப்ஸியும், கோக்கோ கோலாவும் தீர்மானித்துள்ளன. ஆனால் இக்கம்பெனிகள் இந்தியாவில் சேர்மானங்களின் மாற்றத்திற்கு தயாராகுமா என்பது கேள்விக்குறியாகும்.

கோக்கோ கோலாவிலும், பெப்ஸியிலும் தவிட்டு நிறத்திலான 4-மீதைலிமிடாசோல்(4-methylimidazole, or 4-MI) என்ற இரசாயன பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் செண்டர் ஃபார் ஸயன்ஸ் இன் தி பப்ளிக் இண்டரஸ்ட்(Center for Science in the Public Interest (CSPI)) நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.  கடந்த வாரம் இது தொடர்பான அறிக்கை வெளியானது.

அம்மோனியா, சல்ஃபேட் ஆகியவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் இந்த இரசாயன பொருள் அளவுக்கு மீறினால் மனிதர்களில் புற்றுநோயை உருவாக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கோலாக்களில் நிறத்தை கலப்பதற்காக உபயோகிக்கப்படும் இந்த இரசாயன கலவைக்கு தடை ஏற்படுத்தவேண்டும் என்று கோரி அமெரிக்க உணவு, மருந்து துறைக்கு CSPI புகார் மனுவை அளித்திருந்தது. இந்த மனு பரிசீலனையில் உள்ளது.

இந்த இரசாயன பொருளை அதிக அளவில் உபயோகிக்கும் ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்களில் புற்றுநோயை குறித்த எச்சரிக்கையை அச்சடித்து இருக்கவேண்டும் என்று அமெரிக்காவின் மாநிலமான கலிஃபோர்னியாவில் சட்டம் இருப்பதால் இங்குள்ள கம்பெனிகள் இந்த இரசாயன பொருளின் அளவை குறைத்தே சந்தையில் இறக்குமதிச் செய்கின்றன. மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் வரலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா முழுவதும் சந்தைக்கு வரும் கோலாக்களில் இரு நிறுவனங்களும் (கோக்கோகோலா,பெப்ஸி) புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளின் அளவை குறைக்க தீர்மானித்துள்ளன.

அதேவேளையில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாத இந்தியாவில் இரு நிறுவனங்களும் பழையை சேர்மானங்களின் அடிப்படையிலேயே பானங்களின் உற்பத்தியை தொடரப்போவதாக அவ்விரு நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் எங்கும் தாங்கள் சேர்மானத்தை மாற்றப்போவதில்லை என்றும், கலிஃபோர்னியாவில் மட்டும் இச்சட்டம் அமுலில் இருப்பதால் அமெரிக்காவில் மட்டும் கோலா உற்பத்தியில் புதிய சேர்மானத்தை உபயோகிக்கப் போவதாகவும் கோக்கோ கோலா இந்தியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சேர்மானத்தை மாற்ற தீர்மானித்த கோலா கம்பெனிகள் இந்தியாவிலும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பானங்களிலும், உணவுப்பொருட்களிலும் நிறங்களை சேர்ப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத இந்தியாவில் கோலா கம்பெனிகள் சேர்மானத்தை மாற்றுவதை அமுல்படுத்தவேண்டும் என்று புதுடெல்லியில் சென்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரான்மெண்டின் சந்திரபூஷன் வலியுறுத்தியுள்ளார்.