நினைவற்று கிடக்கும்
நித்திரையில்தான்
கனவுகள் கோரதாண்டவம்
ஆடுகின்றன..
.
சில
மரணித்த மிக நெருங்கிய
உறவோடு கலகம் செய்வதும்
இருவருமாய் இன்னும் மரணிக்காத
ஒருவரின் மரித்த உடலை
பார்த்து அழுவதுமாய் காட்டுகிறது...
.
சில
நான் பயணித்திராத
சாலைகள் வழியே காரணமின்றி
ஒரு நீண்டதூர பயணத்தை
நினைவூட்டும்போதே
விமான பணிப்பெண் வந்து
பேருந்துக்கதவை திறந்து விடுகிறாள்...
.
யாமத்து இருட்டு என் அறையை
வியாபித்து நிற்குமிடத்தே யாரோ
அசைந்துகொண்டிருக்க திகில் சூழந்து
அச்சத்தில்அலறித்துடித்து எழுகையில்
யாரும் கேட்பாரற்ற அந்த இரவு
ஆழ்ந்த உறக்கத்தை
அறுத்தெறிந்த கனவாகி நின்றது....
..
ஏதோ ஓர் ஏர்புடையதில்லாத
உறவு சொல்லாத உணர்ச்சியை
தூண்டி புணரச்செய்வதுபோல்
பங்கம் செய்து கடந்து விடுகிறது
வெட்கம் கெட்டகனவு....
அலங்காரமேடையொன்று
யார் யாரோ கடந்துசெல்லும்
கல்யாணம் நடந்த கனவைச்சொல்ல
மறுநாள் அம்மா சொன்னாள்
கனவில் கல்யாணம் கண்டா
யாரோ நாம் அறிந்தவர் மரணிப்பார் என்றாள்...
.
இல்லாத முற்றம்
வளராத மரங்கள்
பாற்காத மனிதர்கள்
காலம்சென்ற உறவினர்
வளர்த்த ஆடு
மூடாத கிணறு என
கனவுகள் எல்லாவிடத்துமிருந்து
கடத்தி வந்து என் கண் முன்னால்
வைத்துவிடுகிறது...
.
இத்தனைக்குமிடையே
எப்போதாவது காததூரத்தில்
நம்மில் கலந்து சென்ற காதலை
ஒரு பனி படர்ந்த நினைவுகளாய்
பதியமிட்டு சிலிர்க்கவைத்து
மீண்டுமொரு கலகத்தை
உருவாக்கிச்செல்கிறது....
.
ஒரு புகைமண்டலம்போல்
உணரும் கனவுகள்
எதையோ எப்படியோ
நினைவுபடுத்திச்செல்கின்றன...