விமரிசையான விசயமாக
இழப்புகளை பாவித்துக்
கொண்டிருக்கிறேன்.
வெந்தனலில் நின்று சூரியக்
குளியலுக்கு ஆசைப்படுவதாய்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தங்களின் கர்வத்தில் துளியும்
என் பேருடலின் குருதியில்
இருந்திருந்தால் ஏழுகடலுக்கு
அப்பால் நான் என்றோத்
தூக்கியெறியப்பட்டிருப்பேன்.
இக்கணம் நானிங்கு
வாழ்த்திடாப் பிணமாகவோ,
ஏதோவோர் பசுந்தரையிலோ
நினைவுகளாகப் புதைக்கப்
பட்டிருக்க வாய்ப்பதிகம்.
பிணக்குகளில் மூழ்கி
வாழ்வதென்பது இயல்பாய
வாழ்தலைக் காட்டிலும்
பெருஞ்சாபமென்பதை அறி.
தெள்ளிய வரிப்பள்ளமென்
உதடு மொத்தமும் ஈரமின்றி
காயத் தொடங்கி விட்டது.
நீங்கள் இப்போது என்னை
வழிமறித்து உரையாடத்
துவங்குவதற்குள் எந்தன்
தெரிவிக்கப்படாத ஆசையுள்
கொண்டு என்னை மாய்த்து
விடுதல் இயல்பானது.
வாதிட்டு சாதிக்கத் தேவையே
இல்லையென்று கேடயங்களை
கலத்தில் விட்டெறிந்து நகர்ந்து
விடுவேன். உங்களை நான் என்
எதார்த்தங்களைப் புரிந்து
கொள்ளவியலாதக் குழந்தை
என நினைத்துக் கொள்கிறேன்.
நிர்கதியானப் பின்னும்
எந்தன் நானமிழக்காமல்
நெற்றி முத்தமிட்டு விழிமூட
அக்கினிப் பிறைகளை இங்கே
வரிசையிலமர்த்தி வையுங்கள்.
நடந்து செல்வதில் நீண்டதை
என் வசத்தில் தானமிட்டுக்
குறுகியதையெல்லாம்
நீங்களே பயன்படுத்திக்
கொள்ளுங்கள். எந்தன்
பரிசாக அதனைக் கொண்டு
திருப்தியடைந்து நேர்மைச்
சுமையேற்றி விடாதீர்கள்.
ஏனென்றால், என் பயணத்
தனிமைச் சுவடுகளே இதுவரை
உடனிருக்கிறது. பயணிகள்
ஒவ்வொருவராய் நகர்ந்து
செல்லத் துவங்கி விட்டார்கள்.
தெரு நாய்க்கும் பால்சோறு
வைக்கும் இரக்க மனங்கள்
வளர்க்கும் பறவைக்குக் கூட
இரை வைக்காத என்னை
இத்தனைச் சாதாரணமானதை
ஏன் வக்கிரமாக்குகிறான் என்று
வித்தியாசமாகப் பார்ப்பதில்
தான் என் சுயமே புதைந்துக்
கிடக்கிறது. உங்களின் ஒட்டு
மொத்த நல்லவற்றையும் கூட்டி
என் ஒற்றைத் தவறிற்கு மாலை
சூட்டிவிட்டு ஏளனமாய் சிரிப்பேன்.