நேற்றும் என் வாசற்படியில்
ஒரு மாக்கோலம் வரையப்படிருந்தது
நான் அதனை மிதித்துச்செல்ல
முற்படவேயில்லை
அந்த மாக்கோலத்தின் அழகு
என்பதாய் இருக்கலாம் காரணம்.
இன்றும் அதிகாலையில் அதே
மாக்கோலம் சில மாற்றங்களுடன்
மேற்படிகளில் இரட்டை வரிகளும்
வரையப்பட்டிருந்தது
நான் மிதித்துச்செல்ல விரும்பவில்லை...
என் அலுவலகத்தினின்றும்
தொலைபேசியவருக்கு
மாக்கோலத்தின் அழகை
சொல்லிக்கொண்டிருந்தேன்
கோபித்து ஏசித்தீர்த்தபோதுதான்
நான் சொல்லாத விடுப்பில்
இருப்பதாய் உணர்ந்துகொண்டேன்.....
அந்த மாக்கோலம் என்
வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும்
மாற்றமானதுதான் எனினும்
அவைகளில் ஏதும் கொடூரம்
உணரவில்லை நான்
அவை எனக்கானதுமல்லவே....
வாரி வீசப்பட்டிருந்த தண்ணீர் துளிகளில்
பிஞ்சு விரல்களின் அளவே
காணவியன்றது
யாரோ ஒரு தங்கை சித்திரக்கை
கொண்டவளாகலாம்...
யாரோ ஒரு மகளின்
இலக்குகளற்ற வாழ்க்கையாகலாம்...
ஆங்கோர் சிறுமி
வெளிறிய விரல்களுடன்
எதிர் வீட்டு முற்றத்தில்
புள்ளிகள் வைத்துக்கொண்டிருந்தாள்
அருகே சில்லரைகள் சுமந்த
மாக்கோலப்பொடியும் தட்டும்...
யாசித்தலின் மொழியை
நூறு புள்ளிகளால்
மாற்றி எழுதிக்கொண்டிருந்தாள்
என் முற்றம் நாளைய விடியலிலும்
அந்த பிஞ்சு விரல்களுக்காய்
காத்துக்கொண்டிருக்கும்....
நான் அவளின்
மாக்கோலம் மிதித்திடேன்
பிஞ்சு விரல்களையும் மிதித்திடேன்