'அவசரம்' பழகுதல்
ஒரு அவசர உதவிக்காக
உங்கள் தொலைபேசிக்கு அழைக்கிறேன்.
நீங்கள்,
பாத்திரத்தில் இருக்கும் கடைசி சோற்றை
தெரு நாய்க்கு வழித்துபோட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்,
எதிர் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் டெயிலரை பற்றி
மிக அக்கறையாக வேலைக்காரியிடம் விசாரித்துக்கொண்டிருக்கின்றீர்கள்,
உள்ளீட்டுக் கருவியில் இரண்டு இரண்டு வரிகளில்
கவிதை எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்,
மானாட மயிலாட பார்த்துக்கொண்டே
குழந்தையின் மூக்கில் சோற்றை திணிக்கின்றீர்கள்,
ஈஸி சேரில் காலை ஆட்டிக்கொண்டே
கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்,
இன்று இரவு தீர்ந்துவிடக்கூடிய வங்கி கணக்கை
உற்று பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்,
பாத்ரூமில் குத்துக்காலிட்டு
கறைபடிந்த துணியோடு போராடிக்கொண்டிருக்கின்றீர்கள்
டிஸ்கவரி சானலில் முதலைகளின் கலவியை பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்
அல்லது நீங்களும் கலவி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்.
சரி உங்களுக்கென்ன அவசரமோ !