நானிறந்து
முப்பத்தாறு மணிநேரமாகி விட்டது.
நுண்ணுயிரிகள் முட்டையிடுகிறது தோலில்.
இந்த தோலைத் தான் கவர்ச்சியாய் காட்டியிருந்தேன்.
நானிறந்து
அறுபது மணிநேரமாகி விட்டது.
லார்வாக்கள் தோன்றுகிறது.
இந்த உடலால் தான் வன்புணர்வை நிகழ்த்தியிருந்தேன்.
நானிறந்து
மூன்று நாட்களாகி விட்டது.
நகங்கள் கழருகிறது.
இந்த கைகளில் தான் கொலைவாள் பிடித்திருந்தேன்.
நானிறந்து
நான்கு நாட்களாகி விட்டது.
ஈறுகள் தொலைகிறது.
இந்த வாயால் தான் துர்வார்த்தைகள் துப்பியிருந்தேன்.
நானிறந்து
ஐந்து நாட்களாகி விட்டது.
திரவமாய் உருகுகிறது மூளை.
இதற்குள் தான் வக்கிரங்களை வைத்திருந்தேன்.
நானிறந்து
ஆறு நாட்களாகி விட்டது.
வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
இதற்குள் தான் பேராசைகளை நிரப்பியிருந்தேன்.
நானிறந்து
இரு திங்களாகி விட்டது.
உடல் உருகி ஆவியாகிறது.
இதற்குள் தான் ஆணவத்தோடு வாழ்ந்திருந்தேன்.
நானிறந்து
ஆண்டுகளாகி விட்டது.
ஆன்மா நரகத்தில் எரிகிறது.
மண்டையோடும் எலும்புக்கூடும்
இந்த கவிதையை சொல்லிக் கொண்டிருக்கிறது.