Author Topic: ~ இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்...! சம்மரிலும் ஜொலிக்கலாம்! ~  (Read 380 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226361
  • Total likes: 28813
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்...! சம்மரிலும் ஜொலிக்கலாம்!



கோடைக்காலம் வந்துவிட்டாலே `சருமம் கறுத்துவிடுமே, தலைமுடி வறண்டுவிடுமே’ என்பன போன்ற கவலைகள் பெண்கள் பலரையும் வாட்டியெடுத்துவிடும். ``இயற்கை தரும் சிரமங்களை இயற்கையாலேயே சமாளிக்கலாம்’’ என்று உற்சாகத்துடன் கூறும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி... சருமம், பாதம் மற்றும் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையிலான, எளிய அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார்...

வெட்டிவேர் - 25 கிராம், வேப்பந்தளிர் - 5 இலைகள், எலுமிச்சைச் சாறு - கால் கப், கடலை மாவு - 3 டீஸ்பூன், மரிக்கொழுந்து (சுத்தம் செய்தது) - ஒரு கப்... இவை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரத்துக்கு ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். இது வெயிலால் ஏற்படும் வியர்வை துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுத்தும் அரிப்பு ஆகியவற்றைத் தடுக்கும். முகப்பரு வருவதையும் தடுக்கும்.

பால் - 2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, பஞ்சில் நனைத்து, பாதங்களில் உள்ள நகங்களைச் சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு, கடுகைத் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, பாதங்களில் உள்ள வெடிப்புப் பகுதிகளில் தடவவும். சிறிது நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் பாதங்களைக் கழுவுங்கள். இது பாதங்களைச் சுத்தமாக, பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

வெதுவெதுப்பான நீரில், சிறிதளவு எலுமிச்சைச் சாறு, உப்பு கலந்துகொள்ளவும். இந்தத் தண்ணீரில், பாதங்களை 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இது வெயிலால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும்.

சீயக்காய்த் தூள் - 2 டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - கால் கப்... இந்த மூன்றையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். தலையில் தண்ணீர்விட்டு, இந்தக் கலவையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கவும். தேங்காய்ப்பால், தலைமுடிக்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கவல்லது.

தேங்காய்ப்பால் - அரை கப், கடலை மாவு - 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்தூள் - 4 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர்... இவை அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் இரண்டு முறை குளிப்பவராக இருந்தால், ஏதாவது ஒருமுறை, முகம் மற்றும் உடல் முழுவதும் இந்தக் கலவையை தேய்த்துக் குளிக்கவும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வியர்வை துர்நாற்றம், வியர்க்குரு வராமல் தடுக்கும்.

தேங்காய்ப்பால் - கால் கப், வெந்தயத் தூள் - கால் கப், புங்கங்காய்தூள் - 3 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கவும். இதன்மூலம் தலைமுடியில் வெடிப்பு ஏற்படுவதையும், முடி வறண்டு போவதையும் தவிர்க்கலாம். இது முடி உதிர்வையும் தடுக்கும்.

வெள்ளரிக்காய் சாறு, உருளைக்கிழங்கு சாறு, சிறிதளவு பால், சிவப்பு சந்தனத்தூள் - சிறிதளவு ஆகியவற்றைக் கலந்து, கண் களைச் சுற்றித் தேய்த்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ச்சியான நீரில் கண்களைக் கழுவுங்கள். இது வெயிலால் ஏற்படும் கண் எரிச்சலைக் குறைக் கும்; கண்களைச் சுற்றி வரும் கருவளையமும் மறையும்.