குழந்தைகளிடம் அன்பாய் அனுசரனையாய் பேசும் அம்மாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது, அம்மாக்கள் அன்பாய் பேசினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாய் இருக்குமாம். அவர்களின் அறிவு வளர்ச்சி அற்புதமாய் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்து வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அம்மாக்களின் அன்புக்கும் தொடர்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அன்பால் அறிவு வளரும்
நர்சரி பள்ளிகளில் பயிலும் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். மனரீதியான அவர்களின் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 92 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோனோர் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அவர்களின் சில குழந்தைகள் மன உளைச்சல் இன்றி காணப்பட்டனர். அதற்குக் காரணம் அந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்மா பாசம் தான் என்பது தெரியவந்தது. ஆய்வின் போது குழந்தைகளை அவர்களின் அன்னையரிடம் பேசவைத்து அது படப் பதிவு செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகளிடம் அதிக அன்பும், பாசமும் காட்டும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாசத்தோடு அதீத நினைவாற்றல் திறனையும் ஊட்டுகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தேசிய அகடெமி ஆப் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பேச்சுத்திறன் வளரும்
இதேபோல் லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளிடம் அவர்களின் அன்னையர்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.
அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் அன்னையர் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அம்மாவின் அன்பு
பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் விட அன்னையர்களின் அன்பே குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.