முகநூலில் நெடுநாளாய்
குருந்தகவல் போடாத சுவீட்டிக்கு
ஒரு பிராது
ஆடிக்கும் அமாவாசைக்கும்
ஒரு தரம் வருகிறாய் அரட்டை அரங்கத்துக்கு
முகநூலில் உன்னையும் உனது லைக்கையும்
காணமுடிவதில்லை இப்போது
வலையத் தளங்களில் வளையவரும் -உன்னை
வலைப்போட்டு தேடினாலும்
அகப்படுவதில்லை இப்போதேதெல்லாம்
உலகத்தில் எத்தனனயோ இருக்கிறது
நாம் சரி செய்ய
எத்தனை நாள் தான்
தூங்கிக் கிடப்பாய் வெகுநேரம்
திரைப்படத்தில் ஒரு நடிகன்
மீசையை காணமல் தவித்ததை
காணவில்லை என்று சொல்கிறான் என
சிரித்துக் கிடந்தோம்
உண்மையிலே இப்போது
எங்கள் ஏரிகளைக் காணவில்லை
குளங்களை வயல்களைக் காணவில்லை
உன்னிடம் சொல்லலாம் என்று
அரட்டை அரங்கம் வந்தால்
உன்னையும் காணவில்லை
இதோ பார்
இதற்கும் நீ விளையாட்டாய்
சிரித்துக் கொண்டிருந்தால் நமது
கடலும் மலைகளும் கூட
காணாமல் போய்விடும்
என் மின்அஞ்சல் எல்லாம்
உன் உள்பெட்டிக்குள் வருகிறதா
இல்லை ஸ்பேம் பகுதிக்கு செல்கின்றனவா
எனது செய்திகளை நீ படிக்கிறாயா
நான் சரியாகத் தான்
பேசுகிறேனா
நீயும் இல்லையென்றால்
புத்தி இன்னும் பேதலித்து விடும்
இரு இரு
கொஞ்சம் இரு
இப்போது
உனக்கு இந்த பிராதை
முக நூல் வழியே அனுப்புவது நானா
இல்லை வேறு எவராவது
போலி ஐ-டி யில் இருக்கும்
வேறு எவனா