நின்று கொண்டே
பயணிப்பது
கடினமென்று நினைக்கும்
நம்மில் எவரேனும்
நின்று கொண்டே
பயணிக்கும் அவன் வலி
நினைத்துண்டா...
சேரிடம் வந்த பின்னும்
தேநீரொன்று பருகிவிட்டு
மீண்டும் நிற்கத்துணியும்
அவன் மனம்
படித்ததுண்டா..?
சில்லறை தருவதவன்
கடமையென்று
கருத்துமிழும் நம்மில்
எவரேனும்
அது
அவனுக்கு
பாரமாயிருக்கலாமென்று
பரிந்தேனும் சிந்தித்ததுண்டா...?
அவனுக்கான இருக்கையில்
அவன்
என்றேனும் அமர்கையிலும்
அவன்
எழும் தருணத்தை
எதிர்நோக்கி நிற்கும்
நம்மில் எவரேனும்
அவன் வலி
அறிந்ததுண்டா...?
சில்லறை இல்லையென்று
சினம் கொள்ளும் அவனை
சிடுமூஞ்சியென்று சொல்லும்
நம்மில் எவர்க்கேனும்
அவன்
சிரிக்கவும் தெரிந்தவனென்று
சிந்திக்கவேனும் நேரமுண்டா...?
இறங்கிய பிறகும்
இயன்ற வரை அவனை
சபிக்கும் நம்மை
எப்போதும்
இறங்கிய பின்
சபித்ததில்லையவன்....
அடுத்தொரு பயணத்திற்கு
அடுத்த சிலரை
அழைக்கும் அவனை
நேசிக்க நேரமில்லையென்றாலும்
வாசிக்கவேனும் பழகுங்கள்
அவனும்
நம்மில் ஒருவனே ...