Author Topic: ~ வத்தக்குழம்பு! ~  (Read 531 times)

Offline MysteRy

~ வத்தக்குழம்பு! ~
« on: May 25, 2015, 07:41:22 PM »
வத்தக்குழம்பு!



தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சையளவு
சாம்பார்ப் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:-

நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சுண்டக்காய் வற்றல் (அ) மணத்தக்காளி வற்றல் – 2 தேக்கரண்டி

செய்முறை :

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளவும். வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்த பின்னர் வற்றலையும் சேர்க்கவும். வறுபட்டதும் புளிக்கரைசலை விட்டு உப்பு, சாம்பார்ப் பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வேண்டுமென்றால் சின்ன துண்டு வெல்லம் சேர்க்கலாம். குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வந்து விடும். இப்போது இறக்கி விடலாம்.

சுவையான வத்தக்குழம்பு தயார்.

பின் குறிப்புகள்:-

1) இதே செய்முறையில் வற்றலை தவிர்த்து விட்டு சின்ன வெங்காயமும், பூண்டும் சேர்த்தும் குழம்பு வைப்போம். சுவையாக இருக்கும்.

2) குழம்பு கொஞ்சம் நீர்க்க இருப்பது போல் தோன்றினால் அரிசி மாவு சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் நிறுத்தலாம்.

3) இரண்டு விதமான வற்றல்களையும் சேர்த்தும் குழம்பு வைக்கலாம்.

4) வேர்க்கடலையும் இந்த குழம்பில் சேர்த்துச் செய்யலாம்.