Author Topic: ~ பாயசம் (சேமியா பாயசம் -அவல் பாயசம்- ஜவ்வரிசி பாயசம்- பால் பாயசம்) ~  (Read 482 times)

Offline MysteRy

சேமியா பாயசம்



தேவையானவை:

 சேமியா - 125 கிராம்
பால் - 750 மில்லி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - சிறிதளவு
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அரை டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, சேமியா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் பால் சேர்த்து, தீயை மிதமாக்கி பாலிலேயே சேமியாவை வேக விடவும். சேமியாவைத் தொட்டால், மசியும் வரை வேக விடவும். இதில் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து பதம் கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்கவும். மீதம் இருக்கும் நெய்யில் உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்) மற்றும் முந்திரியை வறுத்து எடுக்கவும். இதை பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கலக்கி இறக்கிப் பரிமாறவும். பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், பால் சேர்த்து மறுபடியும் சுடவைத்து கிளறிப் பரிமாறவும்.

Offline MysteRy

அவல் பாயசம்



தேவையானவை:

 அவல் - 125 கிராம்
பால் - 750 மில்லி
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும் முந்திரிப்பருப்பு, திராட்சையை (கிஸ்மிஸ்) சேர்த்து வறுத்துத் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். தீயைக் குறைத்து அதே வாணலியில் அவலைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பில் அடிப்பகுதி கனமான பாத்திரத்தை வைத்து பால் சேர்த்துக் கொதிக்க விடவும். பால் கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து, பால் அரை லிட்டராகும் வரை வற்ற விடவும். இதில் அவல் சேர்த்து நன்கு வேக விடவும். அவல் நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து பாயசம் பதம் வரும் வரை கெட்டியாக விடவும். பிறகு, முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Offline MysteRy

ஜவ்வரிசி பாயசம்



தேவையானவை:

 ஜவ்வரிசி - 125 கிராம்
பால் - 750 மில்லி
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் ஜவ்வரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசியின் அளவு பெரியதாகிவிடும். அடுப்பில் அடிப்பகுதி கனமான பாத்திரத்தை வைத்து, பால் ஊற்றி கொதித்ததும் சிம்மில் வைத்து, பால் அரை லிட்டராகும் வரை கொதிக்க விடவும். இதில் ஜவ்வரிசியைச் சேர்த்து நிறம் மாறும் வரை வேக விடவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கரைய விடவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி விடவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) வறுத்து பாயசத்தில் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

பால் பாயசம்



தேவையானவை:

பால் - 750 மில்லி
 வேக வைத்த சாதம் - 250 கிராம் (பொன்னி அரிசி)
 சர்க்கரை - 125 கிராம்
 முந்திரிப்பருப்பு - சிறிதளவு
 உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)  - சிறிதளவு
 நெய் - 1 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

அடிப்பகுதி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பால் ஊற்றிக் கொதித்ததும் சிம்மில் வைத்து அரை லிட்டராகும் வரை கொதிக்க விடவும். வேக வைத்த சாதத்தைச் சேர்த்து பத்து நிமிடம் குறைந்த தீயில் தொடர்ந்துக் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்து கரைந்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பிறகு, அடுப்பை அணைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.