Author Topic: ~ ராகி-கம்பு ரெசிப்பிக்கள்! ~  (Read 1247 times)

Offline MysteRy

பீட்ரூட் சோள மாவு ரொட்டி



தேவையானவை:

கோதுமை மாவு - 150 கிராம்
சோள மாவு - 50 கிராம்
மீடியம் சைஸ் பீட்ரூட் - 1 (துருவியது)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - மாவு பிசைய
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து அதில் உள்ள ஈரம் வற்றி வெந்தவுடன் இறக்கி ஆற வைக்கவும். கோதுமை மாவு, சோள மாவைச் சலித்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் தேவையான தண்ணீர் விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும். பிறகு மாவை மீடியம் சைஸ் உருண்டைகளாக்கி இைத எண்ணெய் தடவிய தவாவில் வைத்து, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். இதை ரைத்தா மற்றும் ஊறுகாயோடு சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

ராகி இனிப்புப் புட்டு



தேவையானவை:

ராகி மாவு - 50 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 25 கிராம்
கருப்பட்டி - 50 கிராம்
சூடான தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

ராகி மாவில் ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான தண்ணீர் விட்டு மாவை உதிரியாகப் பிசையவும். மாவு ஈரமாக இருக்க வேண்டும். புட்டு ஸ்டீமரில் முதலில் தேங்காய்த்துருவல், அதன்மேல் புட்டு மாவை வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடானதும், மூடி போட்டு விசில் வைக்கும் இடத்தில் புட்டு ஸ்டீமரை வைத்து தீயை மிதமாக்கி பத்து நிமிடம் வேக விடவும். பின்பு ஸ்டீமரை எடுத்து ஆறியதும், புட்டைத் தட்டி கொட்டி உதிரியாக்கி துருவிய கருப்பட்டி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

சாமை பயத்தம் பருப்பு முறுக்கு



தேவையானவை:

சாமை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இளம் சூடான தண்ணீர் - மாவு பிசைய

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து சில நிமிடம் வறுத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். அரிசி மற்றும் சாமை மாவை கடாயில் வாசனை வரும் வரை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். இனி இந்த இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து இத்துடன் சிறு பருப்புப்பொடி, பொட்டுக்கடலைபொடி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பிசையவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிப் பிசையவும்.  மாவை மிருதுவாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடி போட்டு வைக்கவும். அச்சில் மாவைச் சேர்த்து பொரிக்க பயன்படுத்தும் கரண்டியின் பின்புறம் முறுக்காக பிழிந்து எண்ணெயில் இடவும். இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

Offline MysteRy

ஸ்பைஸி சாமைக் கஞ்சி



தேவையானவை:

சாமை - 30 கிராம் (கழுவி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்)
பயத்தம் பருப்பு - 30 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கேரட் - 25 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 500 மில்லி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - கால் டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 100 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்)  - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - சிறு துண்டு
கறிவேப்பிலை - 10 - 15
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சில துளிகள் (விருப்பம்  இருந்தால்)
 கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

கேரட், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் இறுத்த சாமை, அரைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு இரண்டு விசில் வைத்து வேக விடவும். அடுப்பை அணைத்து குக்கரின் சூடு ஆறியதும் மூடியைத் திறந்து தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும்.
மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான சூடுபடுத்தி தேவைப்பட்டால் மிளகுத்தூள் அதிகம் சேர்த்து, ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். கூழ் சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச்சாறு சில துளிகள் விட்டுச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Offline MysteRy

ரா பனானா அண்ட் பம்ப்கின் மஃபின்



தேவையானவை:

முட்டை - 1
மீடியம் சைஸ் வாழைப்பழம் - 1 (மசித்தது)
பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 25 கிராம் (டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்)
மஞ்சள் பூசணி பியூரி - 50 கிராம்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
ராகி மாவு - 75 கிராம்
மைதா - 25 கிராம்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை ஒரு பவுலில் உடைத்து நன்கு அடித்து வைக்கவும். பூசணியின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தண்ணீர் ஊற்றி,வேக வைக்கவும். பின்பு தண்ணீரை இறுத்து ஆறியதும் மிக்ஸியில் கூழாக அரைக்கவும். இதில் இருந்து 50 கிராம் தனியாக எடுத்து வைக்கவும். இனி முட்டையில் பூசணி பியூரி, சர்க்கரை சேர்த்து மீண்டும் ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இதில் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். கட்டிகள் விழாமல் அடித்துக் கலக்க வேண்டும். இதில் வெனிலா எசன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்து தனியாக வைக்கவும். ராகி, மைதாவை சலித்து ஒன்றாக பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு பசை போன்ற வடிவம் வரும் வரை கலக்கி வைக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸில் பத்து நிமிடம் சூடுபடுத்தவும்.

மஃபின் தட்டுகளின் உள்ளே மஃபின் லைனரை வைத்து, அதன் உள்ளே சிறிது எண்ணெயை ஸ்பிரே செய்யவும். ஒவ்வொரு மஃபின் லைனர் உள்ளேயும் இரண்டு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து வைக்கவும். இனி மஃபின் பேனை அவனின் மிடில் ரேக்கில் வைத்து, 180 டிகிரி செல்ஸியஸில் 15 முதல் 18 நிமிடம் வரை வேக விடவும். இடையே அவனை திறந்து டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி பார்த்தால் மாவு வெந்துவிட்டதா என்பது தெரியும்.  மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அர்த்தம். அவனில் இருந்து பேனை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து சூடு சுத்தமாக ஆறியதும் மஃபினை பேனில் இருந்து லைனரோடு எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.